‘மோடியின் கோபத்துக்கு ஆளானாரா எடப்பாடி பழனிசாமி?!’ - அமைச்சரவையில் விலக்கிய பின்னணி

மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க-வைச் சேர்க்காததுக்கு உளவுத்துறை கொடுத்த அறிக்கையே காரணம் என்கிறது டெல்லி வட்டாரங்கள். 

எடப்பாடி பழனிசாமி

 பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரைவை நேற்று மாற்றியமைக்கப்பட்டது. அதில், அ.தி.மு.க இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க-வுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், மத்திய அமைச்சர் கனவிலிருந்த அதிமுக எம்.பி-க்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுக எம்.பி-க்கள் சிலர், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் கடும் உள்கட்சிப் பூசல் நிலவியது. சசிகலாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சிக்கே சிக்கல் எழுந்தது. பன்னீர்செல்வத்துக்குச் சாதகமாக மத்திய அரசு செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவுடன், அ.தி.மு.க-வின் சட்டமன்றக் குழுத் தலைவராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு சசிகலா, ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தார். ஆனால், ஆளுநர் அலுவலகத்திலிருந்து அழைப்புவரவில்லை. அதற்குள் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி சசிகலாவுக்குச் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது. இதனால், சசிகலா பெங்களூருச் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறை செல்வதற்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். சசிகலா அணியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும் கடும் போட்டி நிலவியது. இந்தச் சமயத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் வேட்பாளராக தினகரன் அறிவிக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் களமிறக்கப்பட்டார். இருவரும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரியதால் அதைத் தேர்தல் ஆணையம் முடக்கிவைத்தது. அதோடு அ.தி.மு.க-வின் பெயரை இருவரும் பயன்படுத்த தடை விதித்தது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு இரட்டை மின்கம்பமும் அ.தி.மு.க புரட்சித்தலைவி அணி என்ற பெயரையும் சசிகலா அணிக்கு அ.தி.மு.க அம்மா அணி என்ற பெயரையும் தொப்பி சின்னத்தையும் தேர்தல் ஆணையம் வழங்கியது.

இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்கள், பலத்தை நிரூபித்து சின்னத்தையும் கட்சியையும் மீட்டுக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இதனால், அ.தி.மு.க பொதுக்குழுவில் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையத்திடம் அஃபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது. அதுபோல, சசிகலாவின் நியமனத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் அஃபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது.

பிரதமர் மோடி

அ.தி.மு.க-வில் நிலவிய உள்கட்சிப் பூசல், அதிகாரப் போட்டி ஆகியவற்றைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பா.ஜ.க திட்டமிட்டது. இதனால் இரண்டு அணிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து சசிகலா குடும்பத்துக்கு எதிரான முடிவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுக்க சம்மதித்தார். இதனால், ஓ.பன்னீர்செல்வம் அணியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றிணைந்தன.

இதையடுத்து அ.தி.மு.க-வின் உள்கட்சிப் பூசலுக்குத் தீர்வு கிடைக்கும் என்று அ.தி.மு.க-வினரும் பா.ஜ.க-வினரும் எதிர்பார்த்தனர். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார் தினகரன். அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியைத் கொடுத்துவருகின்றனர். இதுதொடர்பான தகவல்கள், மத்திய உளவுத்துறை மூலம் மத்திய அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தினகரனால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ரிப்போர்ட் போடப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், டெல்லிக்குச் சென்ற தமிழக அமைச்சர்கள், எம்.பி-க்கள் பிரதமர் மோடியைச் சந்தித்து அமைச்சரவையில் இடம் குறித்து பேச முடிவு செய்திருந்தனர். ஆனால், பிரதமரைச் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லியைச் சந்தித்தனர் தமிழக எம்.பி-க்கள், அமைச்சர்கள். அப்போது, அமைச்சரவை குறித்து பேச்சு வந்தபோது, முதலில் தினகரனை சமரசம் செய்யுங்கள். அதன்பிறகு, அமைச்சரவை குறித்து பேசலாம் என்று டெல்லி பா.ஜ.க-வினர் கூறியுள்ளனர். இதனால், டெல்லியிலிருந்து சென்னைக்கு விரக்தியுடன் திரும்பியுள்ளனர் தமிழக அமைச்சர்கள். எம்.பி-க்கள்.

மேலும், அதிமுக எம்.பி-க்களில் அமைச்சராகுபவர்களின் பட்டியலை டெல்லி பா.ஜ-விடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், இடம்பெற்றுள்ள சில எம்.பி-க்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க எதிர்ப்பும் கிளம்பியது. ஏற்கெனவே, உள்கட்சிப் பூசலால் திணறும் அதிமுக-வில், அமைச்சரவைப் பட்டியலில் இடம் பிடித்த எம்.பி-க்களுக்கு எதிராக முதல்வரிடம் சிலர் ஆவேசமாகப் பேசியுள்ளனர். இதனால், அமைச்சரவையில் இப்போது இடம் பெற வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றனர். 

தமிழிசை சௌந்தரராஜன்

"பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நீட் தேர்வுக்காக அனிதா தற்கொலை செய்த சம்பவம் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அனிதா தற்கொலை செய்த விவகாரத்தை தமிழக எதிர்கட்சிகள், மாணவர்கள் பெரிதுபடுத்திவருகின்றனர். நீட் விவகாரத்தை மற்ற மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழக அரசு மட்டும்தான் எதிர்த்தது. தமிழகத்துக்கு ஓராண்டு விதிவிலக்களித்து பா.ஜ.க நற்பெயரைப் பெறலாம் என்ற முடிவுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு பாதகமாக அமைந்துவிட்டது. நீட் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் பா.ஜ.க தலைமை உள்ளது. சில நாள்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பா.ஜ.க சொல்லியனுப்பிய தகவல்களை முதல்வரிடம் தெரிவித்துள்ளார். அப்போதே அமைச்சரவையில் இடமில்லை என்பது தெரிந்துள்ளது" என்றார் பா.ஜ.க மூத்த நிர்வாகி ஒருவர்.

பா.ஜ.க-வினர் கூறுகையில், "தமிழக எம்.பி-க்களை அமைச்சரவையில் சேர்க்கலாம் என்ற திட்டமிருந்தது. ஆனால், அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க-வின் தலையீடு இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில் அமைச்சரவையில் இடம் கொடுத்தால் விமர்சனத்துக்குள்ளாக நேரிடும். இதனால், அ.தி.மு.க-வுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை. மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்த பிறகும் அ.தி.மு.க-வின் நிலைமை மாறவில்லை. மேலும், அ.தி.மு.க கொடுத்த அமைச்சர் பட்டியல் பெயரில் சிலருக்கு கட்சியிலிருந்த எதிர்ப்புகள் கிளம்பின. இதனால் அ.தி.மு.க-வை மத்திய அமைச்சரவையில் இப்போதைக்கு சேர்க்க வேண்டாம் என்ற முடிவை பா.ஜ.க தலைமை எடுத்துள்ளது அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது" என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!