Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்திட அரசும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். 

திருநாவுக்கரசர்


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தல்களை நவம்பர் 17 ஆம் தேதிக்குள் தமிழக தேர்தல் ஆணையம் நடத்தி முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன். உள்ளாட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பலமுறை தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியும், தோல்வி பயத்தால் தமிழக அரசு தேர்தல்களைத்தொடர்ந்து தள்ளி வைத்துக்கொண்டே வந்தது.

தமிழகத்தில் நடைபெறும் அரசாங்கம், பி.ஜே.பி.யின் பினாமி அரசாங்கமாக செயல்பட்டு வருவதால் மத்திய அரசிடம் எப்போதும் மண்டியிட்டே கிடக்கிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு பெற்றுத் தருவோம் என்று முதலமைச்சர் தொடங்கி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரை நம்பிக்கையை விதைத்து பொய்யான வாக்குறுதியை தந்ததால், ஏழை குடும்பத்தில் பிறந்த அனிதா என்ற சகோதரியை இழந்து நிற்கிறோம். சமச்சீர் பாடத் திட்டங்களில் பயின்ற 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞான பாடத்தை எடுத்துப் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல் தொடர்ந்து தவித்து வருகின்றனர். 

டெல்லி மற்றும் தஞ்சை, புதுக்கோட்டை இப்படிப் பல மாவட்டங்களில் தமிழகம் முழுவதும் விவசாயிகள் எந்த நிவாரணமும் கிடைக்காமல் தவிக்கின்றனர். தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை, வேலை வாய்ப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு சரியாகப் பேணப்படவில்லை. இப்படி செயலற்ற ஓர் அரசு தமிழகத்தில் இயங்குகிறது. அமரர் ராஜீவ்காந்தி கொண்டு வந்த பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி மக்களின் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளிடம் போய்ச் சேர உள்ளாட்சித் தேர்தல்களே வழிவகுக்கின்றன. தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் உள்ளாட்சிகளில் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட உடனடியாக பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டியது இன்றைய அவசியத் தேவையாக இருக்கிறது. 

இந்நிலையில், தேர்தல்களை மேலும் தள்ளிப் போட முயற்சிகளை மேற்கொள்ளாமல் உயர்நீதிமன்ற உத்தரவினை ஏற்று தமிழக அரசு மற்றும் தமிழக தேர்தல் ஆணையம் உடனடியாக உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement