வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (04/09/2017)

கடைசி தொடர்பு:16:16 (04/09/2017)

’கிருஷ்ணசாமியை அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள்’ - கொதிக்கும் பாலபாரதி

னிதா மரணம் பற்றி தொடர்ந்து சர்ச்சை கருத்தைப் பேசிவரும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமிக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதியின் சமூக வலைதளப் பதிவுகள்.

bala bharathi
 

அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா நீட் தேர்வு முறையால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து கருத்து தெரிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி, 'அனிதா மரணத்துக்கு நீட் தேர்வு காரணம் கிடையாது. எனவே இதுகுறித்து சி.பி.ஐ விசாரணைத் தேவை' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ’அனிதா மருத்துவம் கிடைக்கவில்லை என்றால் வேறு படிப்பு படித்திருக்கலாம்’ என அவர் கூறிய கருத்துகள் மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்நிலையில், சி.பி.எம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, இன்று காலை டாக்டர் கிருஷ்ணசாமி பற்றிய செய்தி ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.  அதில், ' டாக்டர் கிருஷ்ணசாமி தன்னுடைய மகள் மருத்துவ சீட் பெறுவதற்கு போதிய மதிப்பெண்  எடுக்காததால் ஜெயலலிதாவிடம் உதவிக் கேட்டதாகவும் ஜெயலலிதா உதவி செய்ததாகவும்’ குறிப்பிட்டிருந்தார். இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. இதயடுத்து, கிருஷ்ணசாமி குறித்த அந்தப் பதிவை பாலபாரதி நீக்கிவிட்டதாகவும் தகவல் பரவியது. இதுகுறித்து பலரும் பாலபாரதியைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தனர். இதற்குப் பதில் தரும் விதமாக, 'கிருண்ணசாமியை அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள்' எனக் கொந்தளித்திருந்தார். 

barathi
 

பாலபாரதியிடம் பேசினோம். “2015 சட்டமன்றத்தில் நடந்த ஒரு நிகழ்வைதான் என் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தேன். என் பதிவு குறித்து கிருஷ்ணசாமியிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பியபோது அவர் என்னைக் குறித்து ஒருமையில் விமர்சித்துள்ளார். மேலும், 'என்னை சட்டமன்றத்தில் அவர் பார்க்கவேயில்லை' என்றும் குறிப்பிட்டுருக்கிறார். சட்டமன்றத்துக்கு இரு கண்களோடுதானே வந்தார். அதெப்படி நான் அவர் கண்களுக்கு மட்டும் தெரியாமல் போயிருப்பேன்? 

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கிருஷ்ணசாமியைத் தூண்டிவிடுகிறது. அதனால்தான் இவ்வாறு ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி வருகிறார். அவர் பேசுவதை எல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள். மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து நினைத்ததைச் சாதித்து வருகின்றன. அனிதாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்கள் அறிவார்கள். இனி மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. நீட் விவகாரத்தால் மத்தியரசுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. எனவேதான், கிருஷ்ணசாமி போன்றவர்களை பயன்படுத்தி, உண்மையில்லாத கருத்துகளை அரசு பரப்பி வருகிறது. இப்போதெல்லாம் ஒரு பொய்யை உண்மையாக்குவது மிக சுலபமாகிவிட்டது. ஆனால், இனி மக்கள் ஏமாறமாட்டார்கள்” எனக் கொந்தளிப்போடு பேசி முடித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க