வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (04/09/2017)

கடைசி தொடர்பு:17:29 (04/09/2017)

ஜெயா டி.வி. அரசு கேபிளில் புறக்கணிக்கப்பட்டதன் பின்னணி!

ஜெயா டி.வி.

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, 'மாண்புமிகு தங்கத்தாரகை முதலமைச்சர் ஆணைக்கிணங்க'... என்று அணை திறப்பு செய்தி தொடங்கி கோட்டையில் காணொலிக்காட்சி திட்டங்கள் தொடக்கம் வரை அனைத்துச் செய்திகளையும், ஜெயலலிதாவை மையப்படுத்தியே வெளியிட்டு வந்த ஜெயா தொலைக்காட்சி, அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அணிகள் இணைந்த பின்னர், தமிழக அரசுக்கு எதிரான செய்திகளை மெள்ள மெள்ள ஒளிபரப்பத் தொடங்கியது.

சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய பன்னீர்செல்வம், தனி அணியாகச் செயல்பட்டு வந்தவரை, 'குறிப்பிட்ட சில' அமைச்சர்கள், 'வேண்டப்பட்ட' எம்.எல்.ஏ-க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் குறித்த செய்திகளை 'தங்கம் விலை நிலவரம்' போன்று ஜெயா டி.வி. ஒளிபரப்பி வந்தது. அதாவது, 'தங்கத்தின் இன்றைய விலை நாளை மாறக்கூடும்; மாறாமலும் நீடிக்கலாம்' என்பது போல, இன்று ஓர் அமைச்சரின் செய்தியை ஒளிபரப்பினால், அதே அமைச்சர் பற்றிய செய்தி அடுத்தநாளில் இடம்பெறாமல் போகலாம். ஆனால், சிலர் தங்கள் 'செல்வாக்கைப்' பயன்படுத்தி தொடர்ந்து தங்களைப் பற்றிய செய்திகளை ஜெயா டி.வி-யில் வருமாறு பார்த்துக்கொண்ட நிகழ்வுகளும் அரங்கேறின.

இந்த நிலையில்தான், "சசிகலா குடும்பத்தைக் கட்சியிலிருந்து முழுவதுமாக நீக்க வேண்டும்", "ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்" என்ற ஓ.பி.எஸ்ஸின் இரு முக்கியக் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக, அதற்கான அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி வெளியிட்டார்.

டெல்லியில் குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு பதவியேற்ற விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தனித்தனியாக பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினார்கள். 'இந்தச் சந்திப்புகளின்போது நடந்தது என்ன?' என்பதை அவர்கள் இருவருமே வெளிப்படையாகத் தெரிவிக்காத நிலையில், ஜெ. மரணம் குறித்து நீதி விசாரணைக்கும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை அரசு இல்லமாக அறிவித்தும் திடீரென உத்தரவு பிறப்பித்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால், டி.டி.வி. தினகரன் தரப்பு மிகவும் கோபம் அடைந்தது. என்றாலும், அதனை வெளிப்படுத்திக் கொள்ளாமல், எடப்பாடி அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்துக் கடிதம் கொடுத்தனர். மேலும், "முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடியை மாற்ற வேண்டும்; தற்போது சபாநாயகராக இருக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ப.தனபாலை முதல்வராக்க வேண்டும்" என்று சசிகலாவின் தம்பி திவாகரன் மற்றும் தினகரன் தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 

இதற்கிடையே, அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான 'நமது எம்.ஜி.ஆர்.' மற்றும் "ஜெயா தொலைக்காட்சி"-யை தினகரன் தரப்பினரிடம் இருந்து சட்டரீதியாக மீட்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி, தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினரை மிகவும் ஆத்திரமூட்டியது. 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலாவை ஜெயலலிதா போயஸ்கார்டனை விட்டு வெளியேற்றும்வரை, தினகரனின் மனைவி அனுராதாவே ஜெயா டி.வி. நிர்வாகத்தைக் கவனித்து வந்தார். தற்போது, இளவரசியின் மகன் விவேக், ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரியாக இருந்து நிர்வகித்து வருகிறார். அமைச்சர் ஜெயக்குமாருக்குப் பதிலளிக்கும் வகையில், "ஜெயா டி.வி-யை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும், சூழ்ச்சிகளை முறியடிப்போம் என்றும் தெரிவித்து விவேக் அறிக்கை வெளியிட்டார். 

தினகரன்இந்தமோதல் ஒருபுறமிருக்க, டி.டி.வி. தினகரனோ, இவற்றுக்கெல்லாம் ஒருபடி மேலேபோய், அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்தார். நீட் தேர்விற்கு விலக்கு பெற முடியாத தமிழக அரசையும் அவர் விமர்சித்திருந்தார். மேலும், "அனிதா தற்கொலைக்குப் பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மட்டுமல்லாது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ராஜினாமா செய்ய வேண்டும். அவர்கள் இருவரும் பதவி விலகினாலே, தமிழகத்தில் நீட் உள்பட அனைத்துப் பிரச்னைகளையும் சரி செய்து விடலாம்" என்று தினகரன் பேட்டியளித்தார். அரசுக்கு எதிரான தினகரனின் போக்கு, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்குக் கோபத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தியது. 

ஜெயலலிதா இருந்தவரை, தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தார். ஆனால், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசும், 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பி.ஜே.பி. அரசும் அதனை வழங்கவில்லை. ஜெ. மறைவுக்குப் பின், கடந்த ஏப்ரல் மாதத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், தமிழக அரசு கேபிள் நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமத்தை வழங்கியது.

இந்தநிலையில், எடப்பாடி அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை ஜெயா தொலைக்காட்சி செய்தியிலும், ஜெயா ப்ளஸ் சேனலிலும் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருவது, செய்தி, விளம்பரத்துறை மூலம் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்தே, 'ஜெயா டி.வி, மற்றும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழை மீட்போம்' என்று அரசின் பிரதிநிதியாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, கடந்த 2011-ம் ஆண்டுவரை தமிழக முதல்வராக இருந்த காலத்தில், மாநிலம் முழுவதும் அரசுக்கு எதிரான செய்திகளை ஜெயா டி.வி. ஒளிபரப்பியது. 2011-ல் ஜெ. ஆட்சிக்கு வந்தபிறகு, அரசுக்கு எதிரான எந்தச் செய்திகளும் வெளியாகாமல், ஜெயலலிதா குறித்த செய்திகளே பிரதானமாக இடம்பெறும். ஆனால், தற்போது, கலைஞர் டி.வி-க்கு போட்டிபோடும் வகையில், எடப்பாடி அரசுக்கு எதிரான செய்திகள் ஜெயா மற்றும் ஜெயா ப்ளஸ் சேனல்களில் ஒளிபரப்பாகி வருகின்றன.

இதையடுத்து, அரசு கேபிளில் பிரதான அலைவரிசையில் டிஜிட்டல் க்ளாரிட்டியுடன் தெரிந்துகொண்டிருந்த 'ஜெயா ப்ளஸ்', 'ஜெயா மேக்ஸ்', 'ஜெயா மூவிஸ்' ஆகிய சேனல்கள் எஸ்-பேண்ட் அலைவரிசைக்குத் தள்ளப்பட்டன. அதாவது, மாநிலத்தின் பல்வேறு கிராமங்களிலும் ஜெயா ப்ளஸ் சேனல் தெரியாத நிலை உருவாகியுள்ளது. ஜெயா டி.வி. மட்டுமே அனைத்து இடங்களிலும் தெரிகிறது. 

இதனை மக்களுக்குத் தெரிவிக்கும்விதமாக கடந்த சில தினங்களாக, ஜெயா டி.வியில், உங்கள் ஜெயா குழும சேனல்களை ட்யூன் செய்து பார்க்கவும். எஸ்-பேண்ட் அலைவரிசையில் ஜெயா ப்ளஸ் உள்ளிட்ட சேனல்கள் தெரிவதாக 'ஸ்க்ரால்' தகவல் போடப்படுகிறது. 

"ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போதே ஜெயா டி.வி-யிலும் அரசுக்கு எதிரான செய்திகள் வெளியாகும் என்ற நிலை உருவாகியுள்ளது. 

தமிழக அரசின் ஊதுகுழலாக, "மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்கிணங்க..." என்று ஸ்டீரியோ டைப் வாசகங்களை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரை அனைத்து அதிகாரிகளும் சொல்லி வந்த நிலையில், அரசைக் கடுமையாக எதிர்த்துக் கண்டனம் தெரிவிக்கும் செய்திகள் தற்போது தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன. 2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், 'சன் நியூஸ்' அலைவரிசை அரசு கேபிளில் தெரியாத நிலை உருவானது. தற்போது, ஜெயா குழும சேனல்களை அரசு கேபிளில் இருந்து அப்புறப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அரசுக்கும், தினகரனுக்கும் இடையேயான மோதல் ஜெயா டி.வி. வரை எதிரொலித்துள்ளது. டி.வி.யை ஒடுக்கும் வகையில் தமிழக அரசும், அரசை விமர்சிக்கும் வேலையில் சம்பந்தப்பட்ட டி.வி-யும் செயல்பட்டு வருவது எங்குபோய் முடியும் என்பது தெரியவில்லை. இந்தப் போக்கால், யாருக்கெல்லாம் நஷ்டம்; யாருக்கெல்லாம் லாபம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்