எய்ம்ஸ்க்கும், ஜிப்மருக்கும் ஏன் தனி நுழைவுத் தேர்வு - ஜி.ராமகிருஷ்ணன் சாடல்..! | Why government conducting an entrance exam for Aims and jipmer - questions G.ramakrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 20:57 (04/09/2017)

கடைசி தொடர்பு:20:57 (04/09/2017)

எய்ம்ஸ்க்கும், ஜிப்மருக்கும் ஏன் தனி நுழைவுத் தேர்வு - ஜி.ராமகிருஷ்ணன் சாடல்..!

 

பல்லடத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்துகொள்ள திருப்பூர் வந்திருந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர், "பி.ஜே.பி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தபிறகு மோடிக்கு முட்டுக்கொடுக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி. தமிழகமே நீட்டுக்கு எதிராய் நிற்கும் இத்தருணத்தில், கிருஷ்ணசாமி மட்டும் நீட் தேர்வை ஆதரித்து, அந்தத் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கும் வகையில் தொடர்ந்து தன் கருத்துகளை வெளிப்படுத்திக்கொண்டிருப்பது வேதனையை அளிக்கிறது.

'மருத்துவர் ஆக வேண்டும்' என்ற தன் கனவு தகர்ந்துபோன துயரத்தில் இருந்த அனிதாவை இந்த மத்திய, மாநில அரசுகள்தான் தற்கொலை செய்துகொள்ள வைத்திருக்கிறது. நீட் தேர்வு மட்டும் இல்லையென்றால், அரசுப் பள்ளியில் படித்து 1176 மதிப்பெண் பெற்ற அனிதாவுக்கு இந்நேரம் அரசு மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கிடைத்திருக்கும். 'நீட் தேர்விலிருந்து நாங்கள் விலக்கு பெற்று தருவோம்' எனத் தமிழக அரசு இத்தனை நாளாகக் கூவிக்கொண்டிருந்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் 'ஓராண்டுக்கு மட்டும் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு வேண்டும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தால் மத்திய அரசு அதை ஆதரிக்கும்' என்ற கருத்தை வெளியிட்டார். ஆனால், தற்போது அனிதாவின் மரணத்துக்கு இந்த இரண்டு அரசுகளிடமும் எந்தப் பதிலுமில்லை. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரு மாணவன் 1200 மதிப்பெண்ணை முழுவதுமாகப் பெற்றால்கூட, அவர் நீட் தேர்வில் தேர்ச்சியடையவில்லை என்றால், மருத்துவம் படிக்க அவருக்கு வாய்ப்பு இல்லை என்பதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்? சரி, நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கு ஒரே நுழைவுத் தேர்வு என்ற பெயரில் நீட்டை கொண்டுவந்த மத்திய அரசு, எய்ம்ஸ்க்கும், ஜிப்மருக்கும் மட்டும் ஏன் தனி நுழைவுத் தேர்வை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர்,”1975-ல் இந்தியாவில் நிலவிய எமர்ஜென்சி காலங்களில்தான் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியைப் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு சென்றது மத்திய அரசு. கல்வி என்பது முழுவதுமாக மத்திய அரசின் அதிகாரவரம்புக்குக்கீழ்  செயல்படாமல், மீண்டும் மாநில பட்டியலுக்கே கொண்டுவர சட்டத்திருத்தம் மேற்கொண்டால், நீட் போன்ற பிரச்னைகளுக்கு நம்மால் நிரந்தரமான தீர்வு காண முடியும். இந்த நீட் நுழைவுத் தேர்வு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பற்றி முடிவு செய்ய இருக்கிறோம்.

அதேபோல, மத்திய அரசின் 'நிதி ஆயோக்' செயல்திட்டம், அரசு நிறுவனங்களைத் தனியாரிடம் தாரைவார்க்கும் முயற்சியாகவே இருக்கிறது. அதுவும் குறிப்பாக 50-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளை அரசு மற்றும் தனியாரின் கூட்டு முயற்சி என்ற அடிப்படையில் தனியாரிடம் தாரை வார்ப்பது அந்த நிதி ஆயோக்கின் அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. இது கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை பெரிய அளவில் பாதிக்கும். ஏற்கெனவே தமிழகத்தில் உயர்கல்வி என்பது 90% தனியார்மயமாக இருக்கும் நிலையில், இப்போது பள்ளிக் கல்வியையும் தனியார்மயமாக்கும் முயற்சி மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close