வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (04/09/2017)

கடைசி தொடர்பு:18:50 (04/09/2017)

”தினகரனிடம் காட்டம்..அனிதா மரணத்தில் கப்சிப்!” - மௌனம் கலைப்பாரா எடப்பாடி பழனிசாமி?

அனிதா

நாடே பேசிக்கொண்டிருக்கும் அனிதாவின் மரணத்துக்கு, ஆளும் கட்சியின் அதிகாரபீடத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி நான்கு நாள்களாகியும் வாய் திறக்காமல் மெளனம் காத்துவருகிறார். நீட் தேர்வை ரத்து செய்வதுதான் அனிதாவின் மரணத்துக்குத் தமிழக அரசு செய்யும் பரிகாரம் என்று பல முனைகளிலிருந்தும் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

அனிதா மரணம் தமிழகம் முழுவதையும் கொந்தளிப்பில்  ஆழ்த்தியிருக்கிறது. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மறியல்கள் என்று தமிழகம் முழுவதும் விதவிதமான போராட்டங்களில் மாணவர்களும் அரசியல் கட்சிகளும் பொதுநல அமைப்புகளும் களத்தில் இறங்கியுள்ளன. அனிதா மரணத்துக்கு மோடி அரசும் எடப்பாடி அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்று கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், இதைப்பற்றி பெரிய அளவில் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருந்துவருகிறது. அனிதா மரணம் அடைந்த அன்று ஓர் இரங்கல் அறிக்கை விட்டதோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கடமையை முடித்துக்கொண்டார். 

இதுகுறித்து, செப்டம்பர் 1-ம் தேதி முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், ''அனிதா தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு 7 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். அவருடைய குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்குக் கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணி வழங்கப்படும். மாணவக் கண்மணிகள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்'' என்று அதில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், 'அரசு வழங்கிய அந்த உதவித் தொகை தங்களுக்கு வேண்டாம்' என்று அனிதா குடும்பம் வாங்க மறுத்துவிட்டது. 'நீட் தேர்வை ரத்து செய்தால், அரசு வழங்கும் உதவிகளை ஏற்றுக்கொள்கிறோம்' என்றும் அறிவித்துள்ளனர். 

எதிர்க் கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும், தமிழக அரசு அறிவித்த உதவிகள் வேண்டாம் என்று சொன்ன அனிதா குடும்பத்துக்கும் முதல்வரிடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை. ஆனால், உள்கட்சிப் பிரச்னையில் டி.டி.வி.தினகரனுக்குத் தினசரி பதில் சொல்லிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, அனிதாவின் பிரச்னையை மறந்துவிட்டு, மீண்டும் டி.டி.வி.தினகரனுக்கே பதிலளிக்கும் வகையில் திருவள்ளூரில் கடந்த 3-ம் தேதி நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசினார்.

எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''ஜெயலலிதா ஆசியோடு இத்தனை அரியத் திட்டங்களை இந்த அரசு செய்திருக்கிறது என்பதை பொதுமக்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், சிலர் எதிர்க்கட்சிகளைப்போல குறை கூறுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு எது தேவை, எது தேவையில்லையென்று என்னைப்போன்ற உழைப்பாளர் வர்க்கத்திலிருந்து வந்தவர்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். வசதி வாய்ப்புகளுடன் பிறந்து, வளர்ந்து வந்தவர்களுக்கு ஏழை, எளிய பாட்டாளி மக்களின் கஷ்டம் தெரியாது. இது தெரிந்துதான் ஜெயலலிதா சாதாரண குடிமகனையும் ஆட்சிப் பீடத்தில் அமர்த்தி, மக்கள் சேவை ஆற்றவைத்தார். இதைக் கூறுகிறபோது எனக்குக் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. 

தினகரன் எடப்பாடி

மத்தியப் பிரதேசத்தில் வாழ்ந்த வீரசிங் என்ற மன்னர் நீதிநெறி தவறாதவர். ஆனால், அவருடைய மகனோ மன்னருக்கு நேர் எதிரானவன். ஒருநாள் இளவரசன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றபோது ஒரு துறவியை அம்பு எய்திக் கொன்றுவிட... விஷயத்தைக் கேள்விப்பட்ட மன்னன், மகன் என்றும் பாராமல் கைதுசெய்து அழைத்துவர உத்தரவிட்டார். மகனிடம், 'அந்தத் துறவியைக் கொன்றது நீதானே' என்று மன்னன் கேட்டார். 'நான் கொலை செய்யவில்லை. என் வேட்டைக்கு இடைஞ்சலாயிருந்த துறவிக்குத் தண்டனை கொடுத்தேன்' என்றான் இளவரசன் கர்வத்துடன். இதனால் மன்னன் கோபமடைந்ததைக் கண்ட அமைச்சர்கள், 'மஹாராஜா, இளவரசருக்குக் கடுமையான தண்டனை எதையும் கொடுத்துவிடாதீர்கள். ஏனென்றால், உங்கள் சிம்மாசனத்துக்கு வாரிசாக வரப்போகிறவர் அவர்தான்' என்றனர். 'எந்தப் பாவமும் அறியாத ஒரு துறவியை, மன்னன் மகன் என்கிற மமதையில் கொலை செய்துள்ளான். அது மட்டுமின்றி, தான் செய்த காரியத்தை நியாயப்படுத்தியும் வேறு பேசுகிறான். இப்படிப்பட்டவன் எப்படி இந்தச் சிம்மாசனத்துக்கு வாரிசாக முடியும்?' என்று மன்னர் கேட்டார். 'மக்கள் மீது எனக்குள்ள சமநோக்கும், நீதியும் பிள்ளைப் பாசம் என்ற பெருமூச்சுப்பட்டு கருகிப் போய்விடக்கூடாது' என்று கூறி, தன் மகன் தலையை வெட்டி வீழ்த்திவிட்டு அங்கிருந்தவர்களை நோக்கி, 'திமிர் பிடித்த என் மகன் போய்விட்டதால் சிம்மாசனத்துக்கு வாரிசு இல்லாமல் போய்விட்டது என்று யார் சென்னது? இந்த நாட்டிலே இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் அரச குமாரர்தான். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தச் சிம்மாசனத்தில் உட்காரத் தகுதியுண்டு' என்று கூறினார். 

அந்த மாமன்னர் மறு உருவமாகத் திகழ்ந்தவர்  ஜெயலலிதா.  தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தயவு தாட்சண்யம் காட்டாமல் தண்டிக்கக் கூடியவர். அந்த மன்னரைப்போல அரசியல் வாரிசை விரும்பாதவர். அதனால்தான், தனக்கு வாரிசாக எந்த ஒரு தனி மனிதரையும் அவர் சுட்டிக்காட்டவில்லை. தனக்குப்பிறகு இந்த ஆட்சிப் பீடத்தில் அமர்வதற்கு ஒரு கடைகோடி தொண்டனுக்கும் உரிமை உண்டு என்பதை நிரூபித்தவர். ஜெயலலிதாவின் அந்த சமதர்ம கொள்கைதான் என்னைப் போன்ற ஒரு விவசாயியின் மகனையும் இந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்க வைத்திருக்கிறது என்பதை இந்த நூற்றாண்டு விழா மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, உண்மை, உழைப்பு, ஆளுமை கொண்ட யார் வேண்டுமானாலும் ஜெயலலிதா வழியில் உயர்ந்த நிலைக்கு வரலாம்.. என்று உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்'' என்றார். 

ஆட்சியையும், கட்சியையும் தக்கவைப்பதற்கு டி.டி.வி.தினகரனுக்குப் பதில் சொல்லும் மிஸ்டர் எடப்பாடி அவர்களே... மருத்துவக் கனவு சிதைந்துபோய்விட்டது என்று உயிரைவிட்ட அனிதாவுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்