Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பல்லாயிரங்களில் வருமானம் தரும் பிரசாத பை தயாரிப்பு! - செயல்பட வழிகாட்டுகிறார் பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

''டிவி, செல்போன், அக்கம் பக்கம் பேச்சுனு பொழுதுபோக்க எனக்கு விருப்பம் இருந்ததே இல்ல. நம்ம நேரத்தை தொழில்ல முதலீடு செய்வோம்னு நினைச்சேன். அது இன்னைக்கு வெற்றியா திரும்ப கிடைச்சிருக்கு" - தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் சென்னை, கிண்டியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி. கிண்டியிலுள்ள 'என்விரான் நான் - ஓவன் பேக்ஸ்' நிறுவன உரிமையாளர். கோயில்களுக்குப் பிரசாதப் பை மற்றும் விழாக்களுக்குத் தாம்பூலப் பை, டெக்ஸ்டைல்ஸ், ஷாப்பிங் பேக்ஸ், ரைஸ் பேக்ஸ், எக்ஸ்ரே பேக்ஸ் போன்றவற்றை ஆர்டரின் பேரில் செய்துகொடுத்து மாதம் 40 ஆயிரம் வருமானம் பார்க்கும் தொழில்முனைவோர். 

''என் குடும்பத்தைச் சேர்ந்த பல பேர் அரசாங்க வேலையில இருக்காங்க. நாமும் அரசாங்க வேலைக்கே போக வேண்டாம், இதிலிருந்து விலகி, வித்தியாசமான துறையை தேர்ந்தெடுக்கணும் என்பதில் உறுதியா இருந்தேன். எம்பிஏ முடிச்சிட்டு பல நிறுவனங்களில் ஹெச்.ஆர் துறையில் வேலை பார்த்தேன். ஒரு கட்டத்துல, 'நாம ஏன் ஒருத்தர்கிட்ட கைநீட்டி சம்பளம் வாங்கணும்? மத்தவங்களுக்கு வேலை தரக்கூடிய அளவுக்கு திறமை இருக்கு, முயற்சி எடுத்தா என்ன?'னு ஒரு யோசனை வந்தது. என்ன பிசினஸ் செய்யலாம்ணு தேடினப்போதான், கிண்டியிலுள்ள எம்எஸ்எம்இ(MSME- Micro Small and Medium Enterprises)-ல 'நான்-ஓவன் பேக்ஸ்' தொழில் சார்ந்த பயிற்சியை கொடுப்பதாக கேள்விப்பட்டு, அதில் சேர்ந்தேன். 

அடுத்த கட்டமா, தமிழ்நாடு முழுக்க இந்தத் தொழில் செய்பவர்களை நேரடியா சந்திச்சு, ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விஷயத்தைக் கத்துக்கிட்டேன். ‘யாரோ ஒரு பொண்ணு வந்து தொழில் பத்தி விசாரிக்குது’னு சலிப்பாவோ, ‘தொழில் விஷயங்களை எதுக்குச் சொல்லணும்?’னு போட்டியாவோ என்னை யாருமே நினைக்கல, நடத்தல. ‘ஒரு பொண்ணு தன்னந்தனியா முயற்சி எடுத்து தொழில் ஆரம்பிக்கப் போகுது, அது நல்லபடியா கரை சேரணும்’ங்கிற ஆதரவோட எல்லாருமே எனக்கு இந்தத் தொழிலில் தங்களுக்குத் தெரிஞ்ச தகவல்கள், சூட்சுமங்கள் எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்தாங்க!

பிறகு டிக் (DIC - DISTRICT INDUSTRIAL CENTRE) மூலமா ஆந்திரா வங்கியின் ஐயப்பன்தாங்கல் கிளையில் கடன் வாங்கி, சீனாவில் இருந்து மெஷின்களை வாங்கி தொழிலை ஆரம்பிச் சேன். அரசின் நீட்ஸ் (NEEDS) திட்ட உதவியின் மூலம் கிடைத்த கடனுதவி, என் தொழிலின் அடுத்தகட்ட வேலைகளுக்கு ரொம்பவே பயன்பட்டது. இப்போ, தமிழகத்தில் பல கோயில்களுக்குப் பிரசாத பேக்குகளை செஞ்சு கொடுத்துட்டு இருக்கேன். கூடவே, தலையணை உறைகள், மெத்தை உறைகள், பைகள் என பல ஆர்டர்களும் இதில் கிடைக்குது. 

என் சகோதரி ஒருத்தருக்கு தேவைக்கும் அதிகமா விட்டுக் கொடுக்கும், அனுசரித்துப் போகும் குணம் இயல்பாகவே உண்டு. அவங்க, பல வருஷத்துக்கு முன்ன இறந்துட்டாங்க. அவங்களோட வாழ்க்கையில இருந்து நான் கத்துக்கிட்ட பாடம்... நியாயமில்லாத எந்த விஷயத்துக்கும் நாம விட்டுக்கொடுத்துப் போகக்கூடாது, அநாவசியமா காம்ப்ரமைஸ் ஆகக் கூடாதுங்கிறதுதான். நான் பார்க்கும் தொழிலைத் தடங்கல் இல்லாம நடத்துறதுக்கு இந்த மனப்பான்மைதான் எனக்குப் பெரிதும் உதவியா இருக்கு. ஒரு பொண்ணு, வீட்டை விட்டு வெளிய வந்து உலகத்தைச் சந்திக்கும்போது, அவளோட அறிவு விசாலமடையணும். அதுதான் நாம ஏமாற்றப்படாம காக்கும் கவசம். அதனாலதான், தொழில் விஷயங்கள் மட்டுமில்லாம, அரசியல், அரசுத் திட்டங்கள்னு எல்லா விஷயங்களையும் தேடித் தேடித் தெரிஞ்சிப்பதில் ஆர்வம் காட்டிட்டு இருக்கேன்.

மூன்று வருஷத்துக்கு முன்ன ஆரம்பிச்ச இந்தத் தொழில்ல இப்ப என்னோட மாத வருமானம், 40,000 ரூபாய்க்கும் மேல். இந்தத் தொழிலில் அடையாளம் காணக்கூடிய நபரா வளர்ந்திருக்கேன். அதிகம் பேர் கவனம் படாத இந்தத் தொழிலை பெண்கள் தைரியமா எடுத்துச் செய்யலாம். அஞ்சு லட்ச ரூபாய் முதலீட்டோட, கூடவே, உங்களுடைய கடின உழைப்பும் தந்தால் வெற்றி உங்கள் கையில்!''

துணிவும் தெளிவும் பாக்கியலட்சுமியின் முகத்தில்! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement