Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மௌனம் ஏன்?' - பால் முகவர் சங்கத்தின் கேள்வி

 பால் கேன்கள்

தனியார் பாலில் கலப்படம் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தற்போது அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுப்பியுள்ளனர் பால் முகவர்கள் சங்கத்தினர். 

தனியார் நிறுவன பாலில்  உயிருக்கு உலைவைக்கும் ரசாயன பொருள்கள் கலப்படம் செய்யப்படுவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பகிரங்கமாக தெரிவித்தார். இது, பொது மக்களிடையே  பூகம்பத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு பாலைக் குடிக்க பலர் தயங்கினர். தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களுக்கு எதிராக பேசிய அமைச்சர்கள், சமீபகாலமாக அமைதியாகிவிட்டார். அவர் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆனால், சில தனியார் நிறுவன பால் பாக்கெட்களில் கலப்படம் இருப்பதாக சில வருடங்களுக்கு முன் உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது. 


 பொன்னுசாமிஇதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமியிடம் பேசினோம். "பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி, எந்தவித ஆதாரமுமின்றி, தனியார் பால் பாக்கெட்களில் ரசாயனம் கலப்படம் செய்வதாகவும், அந்தப் பாலை குடிப்பதால் புற்றுநோய் வருகிறது எனவும் பேசியிருந்தார். இதைக்கண்டித்து தனியார் பால் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. தனியார் பால் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பேசுவதாக என் மீது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டினார். இதனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்தாலும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. தற்போதுள்ள சூழ்நிலையில், பாலில் கலப்படம் உள்ளதா என்பதற்கு அரசு தரப்பில் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. 
 கடந்த 2012-ம் ஆண்டு முதலே பால் கலப்பட விவகாரத்தை நாங்கள் கையில் எடுத்துள்ளோம். பாலில் தனியார் நிறுவனம், அரசு நிறுவனம் என்று வேறுபாடு பார்க்கக் கூடாது. பாலில் கலப்படம் இருக்கிறதா என்பதை அரசுதான் கண்டறிய வேண்டும். தரமான பாலை மக்களுக்கு விநியோகிப்பது அரசின் கடமை. இதற்காகப் பால் உற்பத்தி தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள அரசு சார்பில் நிபுணர்கள் குழு அமைக்கப்பட வேண்டும். மேலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டியநிலை உள்ளது. இதனால் அதில் மாநில அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் எங்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தியுள்ளோம். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். 
 உச்ச நீதிமன்றத்தில் பால் கலப்படம் தொடர்பாக  நடந்த பொதுநல வழக்கில் 15 மாநிலங்களில் பால் கலப்படம் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது. அதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களின் பெயர் இடம் பெறவில்லை. தமிழகத்தில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கலப்படம் இல்லை என்றாலும் ஜவ்வரிசி, சோயா பீன்ஸ் பவுடர் போன்றவை சேர்க்கப்படுவதாகத் தகவல் உள்ளன. இதை தமிழக அரசு ஆய்வு மூலம் கண்டறிந்து சம்பந்தப்பட்ட பால் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 தமிழகம் முழுவதும் தினமும் 4 கோடி பால் பாக்கெட்கள் விநியோகிகப்படுகின்றன. மக்களுக்குத் தரமான பாலை விநியோகிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், இந்த அரசுக்கு மக்கள் நலன் முக்கியமல்ல. இதனால்தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பால் விவகாரத்தில் அமைதியாகிவிட்டார்" என்றார் ஆவேசத்துடன். 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


 இதுகுறித்து ஆவின் பால் நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், "மூன்று தனியார் பால் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பால் பாக்கெட்களில் கலப்படம் இருப்பது தெரியவந்துள்ளது. தமிழக அரசு சார்பில் தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு நடத்த வேண்டும். ஆனால், அமைச்சர், ஆளுங்கட்சி பிரமுகர்களே பால் உற்பத்தியில் உள்ளதால் அந்த நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்படுவதில்லை. அப்படியே நடத்தப்பட்டாலும் தவறுகள் கண்டறியப்படுவதில்லை. ஆவின் நிறுவனத்துக்குப் பாலைக் கொண்டு வருவதில் நடந்த முறைகேட்டில். ஆளுங்கட்சியினர் சிக்கினர். பாலில் தண்ணீர் கலப்பதால் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால், பாலின் திடத்தன்மைக்காக ஜவ்வரிசி, சோயா பீன்ஸ் பவுடர் போன்றவை கலக்கப்படுகின்றன. இது உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கிறது. அதோடு, வடமாநிலங்களில் உள்ள பாலில் பல்வேறு ரசாயனக் கலவை சேர்க்கப்படுகிறது. இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்குத்தான் உள்ளது. தனியார் பால் நிறுவன தொழிற்சாலைகளில் திடீரென ஆய்வு நடத்தினாலே கலப்படத்தைக் கட்டுப்படுத்திவிடலாம். அதோடு ஆவின் பாலில்கூட தரத்துக்காக உடல் நலத்துக்கு கேடு விளைவிக்காத வகையில்  கிரீம்கள் சேர்க்கப்படுவதுண்டு. தனியார் பால் பாக்கெட்களைவிட ஆவின் பால் பாக்கெட் பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தனியார் மற்றும் ஆவின் பால் பாக்கெட்களில் கவனக்குறைவு காரணமாக இறந்த நிலையில் பூச்சிகள், புழுக்கள் கிடந்த சம்பவங்கள் வெளியில் தெரிந்துள்ளன. அந்தளவுக்கு படுமோசமாகத்தான் பால் பாக்கெட்களின் தரம் இருக்கின்றன. மேலும் விலையும் ஆவின் பாலைவிட தனியார் பால் பாக்கெட்கள் அதிகமாக உள்ளன" என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement