வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (04/09/2017)

கடைசி தொடர்பு:18:45 (04/09/2017)

டெல்லி சுகாதார அமைச்சகத்தின் முன் தமிழ் மாணவர்கள் போராட்டம்!

டெல்லியில் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டுப் போராட்டம்...

நீட் தேர்வு காரணமாக மருத்துவக் கனவு கலைந்துபோனதால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு  நீதி கேட்டு, வடமாநிலங்கள், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். 

டெல்லியில் கடந்த சனிக்கிழமையன்று அங்கு படிக்கும் ஜனநாயகத்தில் அக்கறைகொண்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் போராட்டம் நடத்தினர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜந்தர் மந்தரில் தனித்தனியாகப் போராட்டங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து, இன்று, தமிழ் மாணவர்கள் ஒருங்கிணைப்பில், பிற்பகல் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், அம்பேத்கர் பல்கலைக்கழகம் உட்பட டெல்லியின் பல உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர். 

கூட்டத்தில் பேசிய மாணவ தலைவர்கள், “வட இந்திய ஊடகங்களின் விவாதங்களில் அனிதாவின் தற்கொலை குறித்துப் பேசுகையில், நீட் தேர்வைத் தொடர்பு இல்லாததைப் போலக் காட்டுகின்றனர். இது உண்மையின் ஒரு பக்கத்தை மறைப்பதாகும்” என்று அதிருப்தி தெரிவித்தனர். 

- அழகு சுப்பையா