மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தீர்மானம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றம்! | Resolution against Centre and State governments: decided in all party meet

வெளியிடப்பட்ட நேரம்: 17:51 (04/09/2017)

கடைசி தொடர்பு:17:58 (04/09/2017)

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தீர்மானம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றம்!

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சென்னையில் தி.மு.க நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அனைத்துக் கட்சிக்கூட்டம்

அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா நீட் தேர்வு முறையால் மருத்துவப் படிப்பை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு நீதி கேட்டும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

'தமிழகத்தில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வுக்கு ஓர் ஆண்டு விலக்கு அளிக்கப்படும்' என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நீட் தேர்வு குறித்து குழப்பம் உச்சத்தில் இருக்கும்போது கூறினார். இருப்பினும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இதையடுத்து தமிழக எதிர்க்கட்சிகள், 'மத்திய அரசின் பொய் வாக்குறுதியால்தான் அனிதா இறந்தார்' என்று குற்றம் சாட்டின.

இந்நிலையில், நீட் தேர்வில் விலக்கு அளிக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து தி.மு.க அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒன்றை இன்று மாலை கூட்டியது. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முஸ்லீம் லீக் எனப் பல கட்சியினர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக மத்தியப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மாணவி அனிதாவுக்கு இரங்கல் தெரிவித்தும், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தியும், முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.