Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஷாலின் ’கோபம்’, விஜய் சேதுபதியின் ‘போராட்டம்’... அனிதாவுக்கு குவிந்த ஆதரவு! #NEET

மாணவி அனிதாவின் மரணம், அறம் உள்ளவர்களின் நெஞ்சையெல்லாம் அசைத்துப் பார்த்திருக்கிறது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் `நீலம் அறக்கட்டளை'யின் சார்பில் அனிதாவின் மரணத்துக்காக அஞ்சலி செலுத்தும் `உரிமை ஏந்தல்' நிகழ்வு சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. புத்தா கலைக்குழுவின் பறை இசையோடு தொடங்கிய நிகழ்ச்சியில், முதல் நபராகப் பேச வந்தார் இயக்குநர் சுசீந்திரன் ``பணம் இருந்தால் மருத்துவர் ஆகலாம் என்று நினைப்பவர்களின் மத்தியில் `மருத்துவர் ஆகி சேவை செய்ய வேண்டும்' என்று அனிதா போன்று வெகுசிலர்தான் நினைக்கிறார்கள்.  அவர் தற்கொலை செய்தது கோழைத்தனம் என்று சொல்பவர்களுக்குச் சொல்கிறேன், இது ஒரு பச்சப்படுகொலை. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அனிதாவுக்கு இந்த நிலை வந்திருக்காது. `நீட்' சட்ட அமைப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்று உரையாற்றினார். 

நீலம்

அடுத்ததாகப் பேச வந்த நீதியரசர் ஹரி பரந்தாமன் முக்கியமான சில செய்திகளைக் கூறினார். ``அனிதாவின் படுகொலை பல்வேறு மட்டங்களில் கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைவிட்டு நீட் உடனடியாக விரட்டப்பட வேண்டும். அதுதான் அனிதாவுக்கு நாம் செய்யும் நியாயம். ஏழைகளால் நீட்டை எதிர்கொள்ள முடியாது. அனிதாவின்  மரணத்துக்கு மத்திய-மாநில அரசுகளே பொறுப்பு. 1984-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர்-தான் பொது நுழைவுத்தேர்வு என்கிற முறையைக் கொண்டுவந்தார். இதன் மூலம் ஏழைப் பிள்ளைகள் மருத்துவராக முடிந்தது. ஆனால், இந்தப் பொது நுழைவுத்தேர்வு என்பது அவர்கள் படித்த கல்வித் திட்டத்தின்படிதான் அமைந்தது. அதன் பிறகு துணைவேந்தர்களுடன் கலந்தாலோசித்து ஏற்கெனவே பொதுத்தேர்வில் தேர்வாகி வருபவர்களுக்கு எதற்கு மீண்டும் அதே பாடத்திட்டத்தில் நுழைவுத்தேர்வு என்று அதையும் அரசாணை மூலம் நீக்கியுள்ளார் ஜெயலலிதா. ஆனால், அரசாணை மூலம் பொது நுழைவுத்தேர்வை ரத்துசெய்ய முடியாது என்று சிலர் வழக்கு தொடர்ந்ததால், 2006-ம் ஆண்டு வரை அது நடைமுறையில் இருந்தது.

2006-ம் ஆண்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில் பொது நுழைவுத்தேர்வை ரத்துசெய்து சட்டமாக்கினார். 2006-ம் ஆண்டிலிருந்து தற்போது 2017-ம் ஆண்டு வரை நுழைவுத்தேர்வு இல்லாமல் செய்தவர் கருணாநிதி. 1984-ம் ஆண்டில் எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்டாலும் அது மாணவர்களை வஞ்சிக்கவில்லை. காரணம், பொது நுழைவுத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் அவர்கள் படித்த பாடத்திட்டத்திலிருந்துதான் கேட்கப்பட்டன. எனவே, 1984 முதல் 2006 வரை சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் படித்த 1 சதவிகித மாணவர்கள் +1 வகுப்பில்  மாநிலப் பாடத்திட்டம் உள்ள வகுப்பில் சேர்ந்து படித்து மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர். ஆனால், தற்போது 12 வகுப்பு வரை 99 சதவிகிதம் மாநிலப் பாடத்தில் படித்த பிள்ளைகளுக்கு அநியாயமாக ஒரு சதவிகிதம் உள்ள சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் நுழைவுத்தேர்வு நடத்துகின்றனர். 1.2.2017-ம் தேதி இதே அரசு `நீட் தேர்வு, தமிழகத்துக்குப் பொருந்தாது. அதற்கு விலக்கு அளிக்க வேண்டும்' எனச் சட்டம் இயற்றியது. ஆனால், என்ன காரணமோ அந்தச் சட்டத்தை கையிலே எடுக்கவில்லை. அந்தச் சட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறவேண்டும். அதற்கு முன்பாக அந்தச் சட்டத்துக்கு `அனிதா சட்டம்' எனப் பெயர் மாற்றவேண்டும்" என்றார்.

அடுத்து பேச வந்த சமூகநீதிக்கான மருத்துவர்கள் அமைப்பின் மருத்துவர் எழிலன், ``பெரியார், அம்பேத்கர் போன்றோர் இன்று இருந்திருந்தால், அனிதா இறந்திருக்க மாட்டார். சட்டம் என்பது, மக்களுக்கானதாக இருக்க வேண்டும்; அரசுகளுக்கானதாக இருக்கக் கூடாது" என்று கொந்தளிப்புடன் பேசினார். 

இயக்குநர் சீனுராமசாமி பேசும்போது ``ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு ராமாயணம் சொல்லிக்கொடுக்கிறார்கள். தமிழகத்தில் கம்ப ராமாயணம், ஆந்திராவில் துளசிதாசர் ராமாயணம், இந்தி பேசும் மாநிலங்களில் வால்மீகி ராமாயணம் என வெவ்வேறு வகையில் பாடம் வைத்துள்ளனர். இந்திய நாட்டின் இதிகாசமே மாநிலத்துக்கு ஒருமுறையில் பாடம் சொல்லிக்கொடுக்கும்போது, இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு வைப்பது முறையா?" என்று கேள்வி எழுப்பினார். 

அடுத்ததாகப் பேசவந்த இயக்குநர் கரு.பழனியப்பனின் பேச்சில் கடுமை அதிகம். ``நாம் நம் பிள்ளையைப் பறிகொடுத்துவிட்டு நிற்கையில் `கல்வி என்பதைத் தாண்டி வேறு எவ்வளவோ இருக்கின்றன'  என்பவனை அடிக்க வேண்டும். அனிதா படுகொலை செய்யப்பட்டுள்ளார். முதல்வரின் இரங்கல் அறிக்கை வெளியாகிறது. அதில் `நீட்' என்கிற சொல்லே இல்லை. அனிதா இறந்துபோய் கிடத்தப்பட்டுள்ளார். அந்த அரியலூரைத் தாண்டித்தானே தன் பிறந்த நாள் என்று துணை முதல்வர் செல்கிறார். அரியலூருக்கும் 35 கிலோமீட்டர். ஆனால் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த உத்தமர் ஓ.பி.எஸ்-க்கு மனம் வரவில்லை. தற்போது இருக்கும் அ.தி.மு.க என்பது மரபணு மாற்றப்பட்ட பி.ஜே.பி கட்சியாகத்தான் உள்ளது. அனிதாவின் கொலைக்குப் பரிசாக நிர்மலா சீத்தாராமனுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது" என்றார். 

நடிகர்  விஷால் ``இது ஒரு புரட்சியின் தொடக்கம். இந்த மேடையில் சொல்கிறேன், யாராவது படிக்க வழியில்லை எனக் கவலைப்பட்டால், என்னைத் தொடர்புகொள்ளுங்கள். நான் உதவுகிறேன். அனிதாவின் மரணத்தை நாம் சும்மா விட்டுவிட முடியாது. இந்தக் கோபத்தை தேக்கிவையுங்கள். வரும் தேர்தலில் காட்டுங்கள்" என்றார். 

நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில் ``மாணவர்கள், இளைஞர்கள் அரசியல் கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல நம் போராட்ட முறையும் மாற வேண்டும். டெல்லி வரை சென்று போராடிப் பார்த்துவிட்டோம். நாம் போராட்டத்தைத் தொடங்கினாலே அதை எப்படிக் கலைக்க வேண்டும் என்றுதான் பார்க்கிறார்களே தவிர, எதற்காகப் போராடுகிறோம், நம் கோரிக்கை என்ன என்பதுகுறித்து அக்கறைகொள்வதே இல்லை. எனவே, நம் போராட்ட முறையை மாற்ற வேண்டும்" என்றார். 

அனிதா

இறுதியாகப் பேச வந்த பா.இரஞ்சித் ``இங்கே செத்தது ஒரு தலித் மாணவி என்பதால், போராடாமல் போய்விடுவார்களோ என அஞ்சினேன். தலித் மாணவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு, சலுகையில் படிப்பவர்கள், ரிசர்வேஷனில் படிப்பவர்கள் என்று. என்னுடைய உரிமையை அனுபவிப்பதை இப்படிக் கிண்டலாகச் சொல்கிறார்கள். அது ஒரு வலி. அனிதாவின் மதிப்பெண் 1,176. இனி யாருமே `அவள் சலுகையில் படித்தாள்' எனச் சொல்ல முடியாது. இந்த நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும். மாணவர்கள் போராட வேண்டும்" என்று பா.இரஞ்சித் கேட்டுக்கொண்டார். 

இந்த நிகழ்வில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையில் மாணவர்களும் திரையுலகினரும் கூடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement