2050-ல் சென்னை கடலுக்குள் மூழ்கும்..! ஓர் எச்சரிக்கை

சென்னை

மிழ்நாட்டின் அடையாளம் என்னவென்று கேட்டால், அனைவருமே சொல்லும் ஒரே பதில் சென்னைதான். படிப்பில் தொடங்கி, நல்ல வேலை, கைநிறைய சம்பளம் என அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது நம் சென்னைதான். சென்னை இல்லாத தமிழ்நாட்டை உங்களால் நினைத்துப் பார்க்க முடியுமா? என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி இது என நீங்கள் கேட்பீர்களானால்... இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் சென்னை என்ற இடம் இருந்த இடம் தெரியாமல் கடலில் மூழ்கப்போகிறது என்கிறது ஓர் ஆய்வு.

உலக வெப்பமயமாதல்!

எவ்வளவு பிரச்னைகள் தினந்தோறும் புதிதாக முளைத்து வந்தாலும், உலகத்தின் ஒரே முக்கியப் பிரச்னை 'உலக வெப்பமயமாதல்'. இந்த ஒரு காரணத்தினால் மட்டும் உலகம் முழுவதும் நம் கண்ணுக்குத் தெரியாமல் எவ்வளவோ மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மழை இல்லாமை, மிகக்கொடுமையான வெப்பம் என இவையனைத்துக்கும் வெப்பமயமாதல்தான் முக்கியக் காரணம். இந்த வெப்பமயமாதல்தான் இன்னும் ஐம்பது வருடங்களில் சென்னையை மூழ்கடிக்கப்போகிறது என்று 'தமிழ்நாடு மாநில நிலம் பயன்படுத்துதல் ஆராய்ச்சி வாரியம்' கூறியுள்ளது. 

அண்டார்டிகா

உலகின் தெற்கு, வடக்குப் பகுதிகள் தவிர கிரீன்லாந்து முழுவதுமே பனிமலைகளால் ஆன பூமி. இந்த அனைத்துப் பனிப்பாறைகளும் ஒரே நேரத்தில் உருக ஆரம்பித்தால், நிலமட்டத்திலிருந்து பல மீட்டர் உயரத்துக்கு மேல் தண்ணீர் அளவு பெருகி பூமியே ஜல சமாதி ஆகிவிடும். இந்த அனைத்து பனிப் பிரதேசங்களையும் உருக்கும் ஆற்றல்கொண்டது 'உலக வெப்பமயமாதல். தற்போது ஏற்பட்டுள்ள வெப்பம் அதிகரிப்பின் காரணமாக தென் துருவப் பகுதியான அன்டார்டிகாவில் உள்ள பனிப் பாறைகள் அதிக அளவில் உருகி வருகின்றன. மேற்கு மற்றும் கிழக்கு அன்டார்டிகாவில் கடலுக்கு அடியிலும், அதன் மேல் பகுதியிலும் பெரிய அளவில் பனிப் பாறைகள் இருக்கின்றன. அவை கொஞ்சம் கொஞ்சமாக உருகி வருகின்றன. இதில் மேற்கு அன்டார்டிகா பகுதியில் உருகும் பனிப் பாறைகளால் 4.8 மீட்டர் அளவுக்குத் தண்ணீரின் அளவு உயரும். அதுபோல, கிழக்கு அன்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் உருகினால் 3.4 மீட்டர் அளவுக்குத் தண்ணீரின் அளவு உயரும். இந்தக் காரணத்தால் உலகம் முழுவதும் பல கொடுமையான பாதிப்புகள் ஏற்படுவதுடன் பல நகரங்கள் அழியும். இந்தப் பனிப் பிரதேச உருகுதலினால் தமிழ்நாடு எத்தகைய அழிவுக்கு உள்ளாக்கப்படும் என்று ஆராய்ச்சி செய்ததில், "பனிமலை உருகினால் தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதியில் 4.35 மீட்டரில் இருந்து 6.85 மீட்டர் வரை நீர்மட்டம் உயரும். இந்த அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்தால், தமிழ்நாட்டில் சுமார் 1,963 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு பகுதிகள் கடலுக்குள் மூழ்கிவிடும்.

அண்டார்டிகா

மேலும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 144 சதுர கிலோமீட்டர் பகுதிகள் கடலுக்குள் சென்றுவிடும்'' என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ''இந்தப் பனிமலை உருகுதலினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்படுவர். அதுமட்டுமல்லாமல் வெப்பம் அதிகமாதலால் தற்போதிலிருந்தே கடல் அரிப்பு அதிகமாக இருக்கும். இதன் காரணத்தால் சீற்றம் மிகுந்த கடல் அலைகள் உருவாகும். அடிக்கடி சூறாவளி ஏற்படும். இதனால் பெரும் பாதிப்புகள் அவ்வப்போது ஏற்படும். கடல் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்துக்கு வந்து குடிநீரை உப்பு நீராக மாற்றிவிடும். இது அனைத்துமே பேரழிவுக்கான ஆரம்பம். புவி வெப்பமயமாதல் தொடந்து அதிகரித்துக்கொண்டே வந்தால் 2050-ம் ஆண்டு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தும் கண்டிப்பாக மூழ்கும்'' என்று எச்சரிக்கை தகவல்கள் கொடுத்துள்ளனர், தமிழ்நாடு மாநில நிலம் பயன்படுத்துதல் ஆராய்ச்சி வாரியத்தினர்.

பெருகிவரும் உலக வெப்பமயமாதலைத் தடுப்பதே உலக மக்களின் முதல் கடமை. இல்லையென்றால், இந்த உலகம் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டிய காலம் மிக தூரத்தில் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!