வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (04/09/2017)

கடைசி தொடர்பு:20:30 (04/09/2017)

’கிணற்றைக் காணோம் மீட்டுக் கொடுங்கள்’ - கலெக்டரிடம் முறையிட்ட கிராம மக்கள்!

குடிநீர் ஆதாரமாக விளங்கிய கிணற்றைக் காணவில்லை என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. 

சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் அருகே பாப்பாங்குளம் கிராமம் உள்ளது. அந்தக் கிராம மக்களின் தாகம் தீர்த்த கிணறு காணாமல் போய்விட்டதாக மக்கள் திடீரெனப் புகார் எழுப்பியிருக்கிறார்கள். நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணோம் என்று போலீஸில் புகார் கொடுப்பார். அதே போன்று நூற்றுக்கும் மேற்பட்ட பாப்பாங்குளம் கிராமத்தினர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கிணற்றை மீட்டு கொடுக்குமாறு முறையிட்டிருக்கிறார்கள்.

பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராக்கனிடம் இதுகுறித்து பேசும்போது, ‘நாங்கள் நீண்ட காலமாக அந்தக் கிணற்றில் குடிப்பதற்காகத் தண்ணீர் எடுத்து வந்தோம். அந்தக் கிணறு வெட்டிய ஆள்களில் நானும் ஒருவன். எனக்கு வயது 81ஆகிவிட்டது. கிராமப்புறங்களில் ஊரின் பொது இடத்தில்தான் கிணறு வெட்டுவது, சமுதாயக்கூடம் கட்டுவது பாலர் பள்ளிக்கூடம் கட்டுவது உள்ளிட்டவைகளை மேற்கொள்வார்கள். அப்படித்தான் எங்கள் ஊரில் கிணறு வெட்டினார்கள். அந்தக் கிணறும் யூனியன் ஆபிஸ் மூலம் வெட்டிக் கொடுத்தார்கள். எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான ரவி, ராமலெட்சுமி ஆகியோர் கிணற்றை ஆக்கிரமிப்பு செய்து, கிணறு இருந்ததற்கான சுவடே இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தோம்.

தாசில்தார் ஆய்வு நடத்திவிட்டு கிணறு இருந்த இடம் அரசுப் புறம்போக்கு இடம். எனவே, கிணற்றுக்குப் பட்டா இருந்தால் கொண்டு வாங்கனு சொல்லுறாங்க. ஆனால், எங்க கிட்ட கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) கொடுத்த கிராம வரைபடம் இருக்கு. அதுல கிணறு இருக்கு. இப்பொழுது போய் கேட்டால் கிணறு இல்லைனு மலுப்புறாங்க அதிகாரிகள். என்ன நடக்குதுனே தெரியல. கடந்த சில நாள்களுக்கு முன்பு எங்கள் ஊரில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. அந்தத் திருவிழாவின் போது முளைப்பாரி ஓடு அரசு புறம்போக்கு இடத்தில் இறக்கி வைத்து திருவிழா கொண்டாடினோம். அதற்காக போலீஸார் கிணறு திருடியவர்களோடு கூட்டணி அமைத்துக்கொண்டு ஊரில் இல்லாத கல்லூரி படிக்கும் மாணவர்கள் மீது வழக்குப் போட்டிருக்கிறார்கள். என்ன கொடுமை சார் இது? என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க