வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (04/09/2017)

கடைசி தொடர்பு:20:50 (04/09/2017)

கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநரானார் சேஷாத்ரி!

கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பி.ஆர்.சேஷாத்ரி இன்று பொறுப்பேற்றார். 2011 ஜூனிலிருந்து 2017 ஆகஸ்ட் 31-ம் தேதி வரை என 75 மாதங்கள் கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக கே.வெங்கடராமன் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் இவர் பதவி விலகியதையடுத்து பி.ஆர்.சேஷாத்ரி இன்று பொறுப்பேற்றுள்ளார். 

கரூர் வைஸ்யா வங்கி


சேஷாத்ரி, வங்கியில் வர்த்தக மற்றும் சில்லறை வங்கி ஆகியவற்றில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த மூத்த வங்கியாளர் ஆவார். சிட்டி பேங்க்-ல் 1992-ம் ஆண்டு தனது வங்கித் தொழிலைத் தொடங்கினார். அதன் பின் சிட்டி பேங்கில் படிப்படியாக முன்னேறிய சேஷாத்ரி, சிட்டி ஃபைனான்சியல் கன்ஸ்யூமர் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் சிட்டி ஃபைனான்சியல் ரீடெய்ல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 2005-ம் வரை நிர்வாக இயக்குநராகப் பணிபுரிந்தார். 

சிட்டி பேங்க்கின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் கடன் வணிகங்களின் பிராந்திய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக 2005-லிருந்து சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தவர், சிட்டி பேங்கின் விற்பனை மற்றும் விநியோகத்தையும் கவனித்து வந்தார். சமீபத்தில் லண்டனில் உள்ள பி.எஃப்.சி வங்கி லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகித்தவர் சேஷாத்ரி. ஐ.ஐ.எம் பெங்களூரு மற்றும் டெல்லி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவரான சேஷாத்ரி தற்போது, கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இன்று பொறுப்பேற்றுள்ளார்.