வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (05/09/2017)

கடைசி தொடர்பு:12:39 (05/09/2017)

"பச்சைப் படுகொலை!" அனிதாவுக்காகப் போராடும் செயற்பாட்டாளர்களின் பதிவுகள்

ழை மாணவர்களின் மருத்துவக் கனவுகளை மரிக்கவைக்க மல்லுக்கு நிற்கும் 'நீட்' தேர்வுக்கு அனிதாவை காவுகொடுத்து விட்டு கண்ணீரோடு கலங்கி நிற்கிறது தமிழகம். அது குறித்து சமூக வலைதளங்களில் அனிதாவுக்கான தங்களின் கண்ணீரை, நெஞ்சு கொதிக்கும் விவாதங்களைப் பதிவு செய்திருந்த பெண் செயற்பாட்டாளர்களின் பதிவுகளின் தொகுப்பு இது... 

தாமரை, கவிஞர் 

''தமிழ்நாட்டில் பிறந்தாள் என்பதைத் தவிர்த்து இந்தக் குழந்தை செய்த பாவம்தான் என்ன? மருத்துவராக வேண்டும் என்று விரும்பியது ஒரு தவறா? படிப்பேறாத மக்கா? மதிப்பெண் இல்லாமல் மருத்துவப் படிப்பிற்கு இடம் கேட்டாளா? ஒரு ஏழைக் கூலித் தொழிலாளியின் மகள் படிப்பு எனும் கயிறு பிடித்து கரை ஏறத்தானே கேட்டாள்? நீங்கள் வகுத்துக்கொடுத்த பாடத்திட்டத்தில்தானே படித்தாள்? 1176 (196.5) மதிப்பெண் எடுத்தும் ஒரு தமிழ் குழந்தைக்குத் தமிழ்நாட்டில் மருத்துவத்திற்கு இடம் கிடைக்கவில்லை எனில் அந்தக் கல்லூரிகள் எங்களுக்கு எதற்கு? வயிறு எரிகிறது பாவிகளே. தமிழ்நாடு வீழ்ந்து கொண்டிருக்கிறது. விழித்துக் கொள்ளாவிட்டால் தமிழ்நாடு சுடுகாடுதான்.'' 

பாலபாரதி, அரசியல்வாதி  

''2015ம் ஆண்டு சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து, 'உங்கள் மகளுக்குப் போதிய மதிப்பெண் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள்... அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் மெடிக்கல் சீட் கொடுத்தாரே மறந்துவிட்டீர்களா?' எனக் கேட்க, அப்போது கிருஷ்ணசாமி, 'நான் மறக்கவில்லை. அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன்' எனக்கூறி முதலமைச்சரைப்பார்த்து வணக்கம்போட, இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடுங்கள் என்பதுபோல் வெடுக்கென்று முதலமைச்சர் முகத்தைத் திருப்பிக்கொள்ள .. டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் சுயநலம் அப்போது சட்டமன்றத்தின் மேஜை மீது பொத்தென்று விழுந்தது. தலித் குழந்தைக்கு அத்தகைய உதவி பெற்றதில் தவறே இல்லை. ஆனால், இப்படி புறவாசல்வழியாக உதவியைப் பெற்றுக்கொண்டவர் தமது மகளுக்கு ஒரு நீதி, அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருவதுதான் வேதனை. தோழர் பிரின்சு, எம்எல்ஏ சிவசங்கர் மீது வீண்பழியைச் சுமத்துகிறார், பாஜக அதிமுக அரசுகள் வேடிக்கை பார்க்கின்றன. ஊடகங்கள் இந்த நியாயவாதியாரைத் தேடிப்பிடித்து அவர் கருத்தைக் கேட்கிறார்களாம். கேப்பையில் நெய் மட்டுமல்ல பொய்யும்கூட வழிகிறதாம்." 

சுகிர்தராணி, எழுத்தாளர் 

''என் வயிற்றில் பிறவா மகளே அனிதா... 1176 மதிப்பெண்... இந்த மதிப்பெண்களை எடுக்க, இரவு பகல் பாராது எப்படித்தான் படித்தாயோ... என்னவெல்லாம் நினைத்தாயோ... உன் மதிப்பெண்ணைப் பார்த்தாலே அடிவயிறு கலங்குதம்மா. ஆசிரியர்கள் தேர்வு எழுதினால்கூட இவ்வளவு மதிப்பெண் எடுக்க இயலாதம்மா. உன் மதிப்பெண் பட்டியலைக் கன்னத்தில் ஒற்றியபடி அழுகிறேனம்மா...'' 

ஷாலின் மரியா, சமூகச் செயற்பாட்டாளர்

''அனிதாவைக் கொன்றது நீட் இல்லை. அனிதாவைக் கொன்றது இந்துத்துவா. அனிதாவைக் கொன்றது சாதி. ஜனவரியில் அரியலூர் நந்தினி கொலை, இப்போது அரியலூர் அனிதா தற்கொலை. கொலை, தற்கொலை... ஆனால் ஒரே ஆயுதம் அது... ஜாதி. 
தமிழ்நாட்டில் சூத்திரன் என்று இவர்களால் அழைக்கப்பட்ட ஒருவன் இட ஒதுக்கீடு கேட்கிறான். அதைச் சட்டமாக்குகிறான். தமிழ்நாட்டில் தலைமுறை தலைமுறையாக மலம் அள்ளிக் கொண்டிருந்தவர்கள், பனை மரம் ஏறிக்கொண்டிருந்தவர்கள் அதைப் பயன்படுத்தி கல்வி பெறுகிறார்கள், பகுத்தறிவு பெறுகிறார்கள். அரசு முக்கியப் பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள். அடிமைகள் ஜெயிக்கிறார்கள். ஜெயித்தவர்கள் அந்த மாநிலத்தில் காவிக்கொடி ஏறாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இன்று வரை அவர்கள் தமிழ்நாட்டில் கொடியேற்றாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் தந்தை பெரியாரும், அவரின் திராவிடக் கொள்கைகளும், இட ஒதுக்கீடும்தான்.'' 

கீதா நாராயணன், பெண்ணியச் செயற்பாட்டாளர்

''சமீபத்தில் வேறு எதற்கும் இப்படிக் கண்ணீர் விட்டதில்லை. அனிதா உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை செய்த மாதிரிப் பேச வேண்டாம். சாதித்திருக்கிறார். போராடியிருக்கிறார். தனக்கு இழைக்கப்பட்ட அரச அநீதி பொறுக்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொண்டார். மாநில உரிமை என்பது உயிர்நாடி. கல்வி மட்டுமல்ல எதிலும் விட்டுக் கொடுக்கக் கூடாது. தமிழ்நாட்டின் பப்ளிக் ஹெல்த் சிஸ்டம் பல மாநிலங்களுக்கும் முன்னோடி. அதில் பங்களிப்பவர்களில் தமிழ்வழிக் கல்வியில்/மாநிலக் கல்வியில் படித்தவர்கள் எத்தனையோ பேர். எது தரம் என்று சொல்ல நீங்கள் யார்? 50 லட்சம் கேப்பிடேசன் கொடுத்து மெடிக்கல் சீட் வாங்குபவர்களின் தரம் பற்றிப் பேசுங்களேன், அந்தப் பல்கலைக்கழகங்களை இழுத்து மூடுங்களேன் பார்ப்போம். 

இது பச்சைப் படுகொலை. இந்த வருடப் பிள்ளைகள் தெரியாமல் மாட்டிக்கொண்டனர். இந்த வருடம் நீட்டிற்கு விலக்கு என்று சொல்லிவிட்டு ஏன் வாக்குத் தவறினீர்கள்?இது மாநில அரசின் வன்முறையால் செய்யப்பட்டிருக்கும் படுகொலை. அரசு மண்ணாய்ப் போகட்டும். இந்தப் பச்சைப் படுகொலையில் பங்கெடுத்த அனைவரும் அழிந்து போவீர்கள்.''

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்