வெளியிடப்பட்ட நேரம்: 01:20 (05/09/2017)

கடைசி தொடர்பு:11:04 (05/09/2017)

பாரம்பர்ய விதைகளைக் கொடுத்து அசத்திய மணமக்கள்..!

திருமண விழாக்களுக்குச் சென்றால், வெற்றிலை பாக்கு கொடுத்து, வந்தவர்களை வழியனுப்புவது வழக்கம். மேலும், மரக்கன்றுகளைக் கொடுத்து வழியனுப்புவது சமீபத்தில் திருமண விழாக்களில் பார்க்க முடிகிறது. ஆனால், தேனியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், நம் பாரம்பர்ய விதைகளைத் துணிப்பையில் போட்டு, திருமணத்துக்கு வந்தவர்களுக்குக் கொடுத்து அசத்தியுள்ளனர் மணமக்கள்.

எல்லோரும் வெற்றிலை பாக்கு, பழம் கொடுப்பார்கள். சிலர், மரக்கன்றுகளைக் கொடுப்பார்கள். நீங்கள் வித்யாசமாக பாரம்பர்ய விதைகளைக் கொடுக்கிறீர்களே? என்று மணமக்களிடம் கேட்டபோது, “தற்போது சுற்றுச்சூழல் எப்படி கெட்டுக்கிடக்கிறதோ, அதே போலத்தான் நாம் உண்ணும் உணவும் கெட்டுக்கிடக்கிறது. மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலமாக, நாம் சாப்பிடும் உணவு முற்றிலும் நஞ்சாக மாறிக்கிடக்கிறது. உடலுக்கு வலு சேர்க்கும், நம்மை ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் தமிழகத்தின் பாரம்பர்ய விதைகள்தான் இந்தத் துணிப்பையில் இருக்கிறது. கத்தரி, வெண்டை, தக்காளி என வீட்டுக்குத் தேவையான அனைத்துக் காய்கறிகளின் விதைகளும் இந்தத் துணிப்பையில் இருக்கின்றன. மாடித்தோட்டம் அமைத்து, உரம் இல்லாமல், சத்தான நம் பாரம்பர்ய நாட்டுக் காய்கறிகளை விளைவித்து சாப்பிட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்சி” என்றனர் புன்னகையோடு.