Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ம.தி.மு.க கலந்துகொள்ளாதது ஏன்?

“எனது அண்ணன்” என்று கருணாநிதியைச் சந்தித்த பின் உருக்கமாகப் பேசிய ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலினுடன் வைகோ

கருணாநிதி உடல்நலக்குறைவுடன்  இருந்துவரும் நிலையில், சில தினங்களுக்கு முன் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று, அவரைச் சந்தித்தார் வைகோ. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கருணாநிதி-வைகோ சந்திப்பு அனைவராலும் உற்று நோக்கப்பட்டது. குறிப்பாக வைகோ, நீண்ட நாள்களாகவே கருணாநிதியைச் சந்திக்க வேண்டும் என்று எண்ணி இருந்தாலும், அதற்கு சரியான சூழ்நிலை அமையாமல் இருந்தது. குறிப்பாக, வைகோ-விற்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் இடையே நிலவிவந்த பூசல் காரணமாக கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு எட்டாக்கனியாகவே இருந்தது. கருணாநிதி மீது வைகோ தனிப்பட்ட அளவில் மரியாதை வைத்திருந்தாலும், கட்சிரீதியாக ம.தி.மு.க-விற்கும்,தி.மு.க-விற்கும் புரிதல் இல்லாத நிலையே இருந்துவந்தது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், ம.தி.மு.க-வை தி.மு.க கூட்டணிக்குக் கொண்டுவரும் வேலைகள் ஆரம்பத்தில் நடந்தன. மு.க.தமிழரசு மகன் அருள்நிதியின் கல்யாணத்தை முன்வைத்து, தேர்தல் கூட்டணிக்கான பேச்சுகள் நடந்தன. மு.க.ஸ்டாலின், அண்ணாநகர் வீட்டுக்கே சென்று வைகோவுக்கு திருமண அழைப்பிதழைக் கொடுத்தார். அந்தத் திருமணத்தில், வைகோ கலந்துகொண்டார். அப்போது, 'அவரை உரிய மரியாதையுடன் வரவேற்கவில்லை' என்று வைகோ வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தார். அதன்பிறகுதான், தி.மு.க-விற்கு எதிராக இனி நாம் செயல்பட வேண்டும் என்ற முடிவுக்கு வைகோ வந்தார். குறிப்பாக ஸ்டாலினை முதல்வராக ஒருபோதும் நான் விடமாட்டேன் என்று சீறினார் வைகோ.  2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க-வை வீழ்த்துவதற்கு ம.தி.மு.க, தே.மு.தி.க., மார்க்ஸிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், த.மா.கா ஆகிய கட்சிகள் அணி சேர்ந்தன. குறிப்பாக, இந்த அணியில் விஜயகாந்த் சேர்ந்தது தேர்தல் களத்தில் தி.மு.க-வுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால், பல இடங்களில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க தோல்வி கண்டது. கருணாநிதி உடல்நலம் இல்லாமல் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தபோது, அவரைப் பார்க்கச் சென்ற வைகோவை, தி.மு.க-வினர் விரட்டியடித்த சம்பவம் ம.தி.மு.க தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணம், பெங்களூரு சிறையில் சசிகலா... என்று அடுத்தடுத்து நடந்த அரசியல் மாற்றங்கள், கட்சிகளைத் திசைமாற வைத்துவிட்டன. 

கருணாநிதியை சந்தித்த வைகோ

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பது நிதர்சனம் ஆனது. வைகோ-விற்கு மலேசியாவில் அனுமதி மறுக்கபட்டபோது, அதைக் கண்டித்து ஸ்டாலின் அறிக்கை விட நெகிழ்ந்துபோனார் வைகோ. மீண்டும் தி.மு.க-வுடன் உறவு துளிர்வதற்கான சமிக்ஞைகள் தெரிய ஆரம்பித்தன. அதன் தொடர்ச்சியாக, கருணாநிதியைச் சந்திக்க வேண்டும் என்று வைகோ சொன்னதும், ஸ்டாலுனும் உடனடியாக அதை வரவேற்றார். வைகோவை கோபாலபுரம் வீட்டின் வாசலில் நின்றே வரவேற்றார் ஸ்டாலின். 'கருணாநிதி என் அண்ணன் போன்றவர்' என்று உருகினார் வைகோ. 

இந்தச் சந்திப்பு, அரசியல் நோக்கர்களாலும் உற்றுநோக்கப்பட்டது. வலுவிழுந்த நி்லையில் அ.தி.மு.க இருக்கிறது. ம.தி.மு.க-வும் வலிமை குன்றிய நிலையில் இருப்பதால், தி.மு.க - ம.தி.மு.க உறவு முக்கியமானதாகக் கருதப்பட்டது. வைகோவும் இதை அறியாமல் இல்லை. அதனால்தான், நீண்ட நாள்களுக்குப் பிறகு தி.மு.க-வின் மேடையில் ஏற வைகோவும் ஒப்புக்கொண்டார். முரசொலி பவளவிழா  கூட்டம் செப்டம்பர் 5-ம் தேதி கொட்டிவாக்கத்தில் நடைபெற உள்ளது. அதில் கலந்துகொள்ள உள்ளார் வைகோ.

அனைத்துக் கட்சிக் கூட்டம்

இந்நிலையில் நீட் தேர்வினால் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காமல் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் மரணம், தமிழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில், மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகுறித்து தி.மு.க சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யபட்டது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ம.தி.மு.க கலந்து கொள்ளாதது, அனைவரிடத்திலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல சில மாதங்களுக்கு முன், விவசாயிகள் பிரச்னை தொடர்பாக தி.மு.க சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கும் ம.தி.மு.க-வுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், அந்தக் கூட்டத்தில் ம.தி.மு.க கலந்துகொள்ளவில்லை. தி.மு.க அலுவலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினால், அதில் எப்படி நாங்கள் கலந்துகொள்ள முடியும்' என்று ம.தி.மு.க. தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், உண்மையில் தி.மு.க-வுக்கு எதிரான நிலையில் ம.தி.மு.க அப்போது இருந்ததும் ஒரு காரணம். 

ஆனால் இப்போது, தி.மு.க-வுடன் இணக்கமாக இருந்துவரும் நிலையில், எதற்காக ம.தி.மு.க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற ஆச்சர்யம் ஏற்பட்டது. ம.தி.மு.க வட்டாரத்தில் இதுகுறி்த்து விசாரித்தபோது, “தி.மு.க-வுடன் நல்ல உறவு இப்போதுதான் ஏற்பட்டுள்ளது. நீட் பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாங்களும் கலந்து கொள்ளவேண்டிய நேரம் இது. ஆனால், அதில் கலந்துகொள்ளாதது, தி.மு.க அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது ஒரு காரணம். தி.மு.க-வின் மேடையில், மறு தினமே வைகோ கலந்துகொள்ள இருந்த நிலையில், அந்தக் கட்சியின் அலுவலகத்துக்குச் சென்றால் நன்றாக இருக்காது. தி.மு.க-வுடன் மேடையில் ஏறிய பிறகு, இணைந்து செயல்படலாம் என்று தலைவர் கருதுகிறார்” என்கிறார்.

தி.மு.க-வுடனான உறவை வைகோ பெரிய அளவில் எதிர்பார்க்கின்றார். அதனால்தான், முரசொலி விழா கூட்டத்துக்கு முன், தி.மு.க-வுடன் வேறு எங்கும் கைகோக்க வேண்டாம் என்று திட்டமிட்டுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும், அந்தத் தீர்மானங்களுக்கு ஆதரவாகவே ம.தி.மு.க இருக்கும். கொட்டிவாக்கக் கூட்டத்துக்குப் பிறகு, தி.மு.க-வுடன் இணக்கமாகவே ம.தி.மு.க இனி செயல்படும்” என்கிறார்கள் ம.தி.மு.கவினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement