பாட்டுப் பாடி மக்களை மகிழவைக்கும் நாகம்மாள் பாட்டி!

சில நாள்களாக வாட்ஸ்அப்பில் வயதான ஒரு பாட்டி 'கண்களிலே தோன்றினாய்' எனப் பாட்டு பாடிய வீடியோ வைராலானது. ஃபேஸ்புக்கிலும் பாட்டியின் பாட்டு லைக்ஸ்களை வாரிக்குவித்தது. இந்தப் பாட்டி யார்? என்று தெரியாமல் இருந்த நிலையில், 'இந்த வயதான பாட்டி,  குமரி மாவட்டம் மயிலாடி கிராமத்தில் வாழ்ந்துவருகிறார்' என்று தகவல் கிடைத்தது. அவரைச் சந்தித்துப் பேசினோம். 

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாகம்மாள் பாட்டிக்கு 77 வயது. இவர் பாடிய பாடலை அப்படியே வீடியோ எடுத்து, ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என  நாகம்மாள் பாட்டி வைரலாகப் பரவினார். மயிலாடியை அடுத்த சேந்தன்புதூர் தான் இவரது சொந்த ஊர். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இங்கேதான். இவரது கணவர் பெயர் கிருஷ்ணன். திருமணம் முடிந்ததும் கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சிக்கு சென்றுவிட்டார்கள். கிருஷ்ணன் வேலைக்குச் செல்லும்போது நெஞ்சு வலியால் இறந்து விட்டார். மூன்று குழந்தைகளை வளர்க்க முடியாமல் கஷ்டபட்டபோது ஒலித்த பாடல்களைக் கூர்ந்து கேட்டு, மனனம்செய்து பாடத் தொடங்கியுள்ளார். முறைப்படி பாட்டுப் பயிற்சி பெறாமல் பாடத் தொடங்கிய இவரது குரல் இனிமையாக இருந்துள்ளது. குடும்ப வறுமை காரணமாக பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் 15 ஆண்டுகள் பாடியுள்ளார். இவரது பாட்டைக் கேட்டவர்கள் கொடுக்கும் ஐந்தும்  பத்தும்தான் குடும்பப் பசியைப் போக்கியுள்ளது. மகன்களும் வளர்ந்துவிட, பொள்ளாச்சியிலிருந்து சென்னை வடபழனிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள வடபழனி பஸ் ஸ்டாண்டில் 15 ஆண்டுகள் பாட்டுப் பாடி குடும்பத்தை நடத்தியுள்ளார். இவரது பாடலைக் கேட்ட பெண் ஒருவர், நாகம்மாள் பாட்டியை அழைத்துச் சென்று மாதம் 150 ரூபாய் உதவித்தொகை கிடைக்குமாறு ஏற்பாடுசெய்தார். அதுவும் நான்கு ஆண்டுகளாக கிடைக்கவில்லையாம்.

சென்னை வட பழனியில் இருந்த  நாகம்மாள் பாட்டி, கடந்த நான்கு ஆண்டுகளாக தனது சொந்த ஊரான குமரி மாவட்டம், சேந்தன்புதூரில் தனிமையில், வறுமையில் வாழ்ந்துவருகிறார். மாதம் 500 ரூபாய் வாடகை வீட்டில் வசித்துவருகிறார். அந்தப் பகுதி மக்களை சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி படப் பாடல்களைப் பாடி மகிழ்வித்துவருகிறார். பாட்டுப் பாடி மக்களை மகிழ்வித்தாலும், நாகம்மாள் பாட்டியின் வறுமை இன்னும் ஒழிந்ததாகத் தெரியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!