அறிவுச் சிற்பிகளை வணங்குவோம்..! ஆசிரியர்களுக்குப் புகழாரம் சூட்டிய நிகழ்ச்சி | Teachers day celebration at kumararani meena muthiah college

வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (05/09/2017)

கடைசி தொடர்பு:11:15 (05/09/2017)

அறிவுச் சிற்பிகளை வணங்குவோம்..! ஆசிரியர்களுக்குப் புகழாரம் சூட்டிய நிகழ்ச்சி

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, குமாரராணி மீனா முத்தையா கல்லூரியில், 'அறிவுச் சிற்பிகளை வணங்குவோம்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 


டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி, ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாம் அனைவரும் பள்ளி, கல்லூரிப் படிப்பைக் கடந்துவந்தவர்கள். அங்கு, நமக்குக் கிடைத்த ஓர் அரிய புதையல் ஆசிரியர்கள். நம் ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணத்திலும் இறுதிவரை நெஞ்சில் நிலைத்திருப்பவர்களின் பட்டியலில், அவசியம் கல்விச் செல்வம் வழங்கிய ஆசிரியர்களுக்கு         எப்போதுமே இடம் இருக்கிறது.

இன்றைய மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என முத்திரை பதிப்பவர்களின் பின்னால், பல ஆசிரியர்களின் உழைப்பு உள்ளது.  ஆசிரியர்களுக்கு மரியாதையளிக்கும் விதமாக, 'அறிவுச் சிற்பிகளை வணங்குவோம்' என்ற நிகழ்ச்சி, சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள குமாரராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. பிரம்மகுமாரிகள் இயக்கத்தின் அடையாறு கிளையும், இராஜயோக கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக் கட்டளையின் கல்வித் துறையும், குமாரராணி மீனா முத்தையா கல்லூரியும் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்திருந்தன. இவ்விழாவில், சிறப்பு விருந்தினாராக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ண மூர்த்தி, பிரபல இதய சிகிச்சை மருத்துவர் வி.சொக்கலிங்கம், குமாரராணி மீனா முத்தையா கல்லூரியின் முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டனர். பண்புகள் நலிந்துவருகின்ற தற்காலச் சூழலில், மாணவர்களைக் கையாள்வதற்கும், பண்பு வாய்ந்த கல்வி வழங்குவதற்குமான முக்கியத்துவம் பற்றியும் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. ஆக்கபூர்வமான எண்ணங்களை வளர்த்து, மனதை சக்தியுடன் மகிழ்ச்சியாக வைப்பதற்கான வகுப்புகள் இந்நிகழ்ச்சியில் நடத்தப்பட்டன.