வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (05/09/2017)

கடைசி தொடர்பு:19:29 (06/09/2017)

"ஆசிரியராக முடிவெடுக்கக் காரணம்?!" - மாற்றம் நிகழ்த்திய ஆசிரியர்களின் அனுபவம் #TeachersDay

ஆசிரியர்கள்

பாடம் நடத்துவதைத் தாண்டி, சமூக மாற்றம் மற்றும் மாணவர்களின் திறனை மேம்படுத்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் உள்ளனர். அத்தகைய ஆசிரியர்கள், தான் ஆசிரியராக வேண்டும் என முடிவெடுத்த தருணத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள். 

மகாலட்சுமி:

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியை. பள்ளி மாணவர்களுக்கு முடி வெட்டிவிடுவது, குளிப்பாட்டுவது, சாப்பாடு ஊட்டிவிடுவது என அவரது ஒவ்வொரு செயலிலும் மிளிர்கிறது தாயுள்ளம். 

ஆசிரியர் மகா லட்சுமி

"நான் பிறந்த திருவண்ணாமலை மாவட்டம்  செல்லங்குப்பம்  கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையும், அடுத்து அருகில் இருக்கும் அரசு நிதியுதவி பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தேன். அந்தச் சமயத்தில் அம்மாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு, வீட்டுக்குள்ளேயே இருந்தார். அப்பாவுக்குக் கண்பார்வை பாதிக்கப்பட்டிருந்தாலும் அவரின் விவசாயக் கூலி வேலையில்தான் குடும்பமே நடந்துகொண்டிருந்தது. அதனால், என் பள்ளிப் பருவம் மிகவும் சவாலானதாக இருந்தது. இரவு மட்டும்தான் சாத உணவு. மற்ற இருவேளையும் கூழ். உடுத்த நல்ல துணி இல்லாத வறுமையில்தான் படித்தேன். பன்னிரண்டாம் வகுப்பு வரை எங்கள் வீட்டில் மின்சாரமே இல்லை. தெரு விளக்கு ஒளியில் படித்தேன். நன்றாகப் படித்தாலும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவள் என்ற காரணத்துக்காக பல வழிகளிலும் வேதனைக்கு உள்ளாக்கப்பட்டேன். என் சமூக மனிதர்கள், உயர் சாதியினருக்கு கட்டுப்பட்டு இருந்தார்கள். இந்நிலையில், எங்கள் வகுப்பில் நடந்தப்படும் நன்னெறி வகுப்புகள் என்னைச் சமூக ஆர்வம் சார்ந்த எண்ணங்களை நோக்கிப் பயணிக்க வைத்தது. நன்றாகப் படித்து, ஆசிரியராக வேண்டும். குழந்தைகளை தலைசிறந்த மனிதர்களாக உயர்த்தும் வாய்ப்பு, ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைக்கும். நாமும் ஆசிரியராகி, நம் சாதிய மக்களின் வாழ்வியலை மாற்ற வேண்டும் என்ற ஆர்வம் நான்காம் வகுப்பு படிக்கும்போது தோன்றியது. அந்த எண்ணத்தை நோக்கியேப் பயணித்தேன். 2006-ம் ஆண்டு, இந்த ஜவ்வாதுமலை பள்ளியின் ஆசிரையாகப் பணியில் சேர்ந்தேன். இந்தப் பள்ளியில் எஸ்.சி, எஸ்.டி சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். 'நாம் மற்ற சாதியினருக்கு சிறிதும் சளைத்தவர்கள் இல்லை. கல்வி, நமக்கான பெரிய பலம். அந்தப் பலம் கிடைத்தால், நாமும் உயர்நிலைக்குச் செல்ல முடியும்' எனத் தினமும் பாடத்துடன் சொல்லிக்கொடுக்கிறேன். நல்ல மாற்றத்தைச் செயல்படுத்தும் நோக்கில் மாணவர்களும் படிக்கிறார்கள். ஓர் ஆசிரியை என்பதில் மிகுந்த பெருமைகொள்கிறேன்." 

சாந்தகுமார்: 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகில் உள்ள சானார்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர். சலிப்பின்றி அரசுக்கு மனுக்களைக் கொடுத்து பள்ளியின் தேவைகளைப் பெறுவது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகத் தேவைப்படுவோருக்கான உதவிகளைப் பெற்றுத்தருவது, மாணவர்களுடன் சேர்ந்து விதைப்பந்துகளை உருவாக்குவது என நீள்கிறது இவரது சமூக அக்கறை. 

ஆசிரியர் சாந்தகுமார்

"சேலம் மாவட்டத்தில் உள்ள இராமலிங்க வள்ளலார் பிரைமரி மற்றும் அரசு நிதியுதவி பெறும் இராமகிருஷ்ணர் சாரதா மேல்நிலைப் பள்ளியில் என் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தேன். என் அப்பா அரசுப் பள்ளியில் படித்து, அரசுப் பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக வேலை செய்தார். அதனால், என்னையும் அரசுப் பள்ளியில் படிக்கவைத்தார். என் பள்ளித் தமிழ் ஆசிரியர் சுவாமிநாதன், பாடங்களைப் பாடலாகச் சொல்லிக்கொடுப்பார். 'நல்லச் செயல்பாடுகள் மாணவர்களுக்குள் வலிமையாகச் சென்றடையவே உங்களுக்குப் பிடித்த முறையில் பாடம் நடத்துகிறேன்' என்பார். அப்போதுதான் நாமும் ஆசிரியராகி, சமூகத்துக்குப் பயனுள்ள விஷயங்களைச் செய்ய வேண்டும் என நினைத்தேன். 2001-ம் ஆண்டு, சானார்பாளையம் பள்ளியின் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். படிப்பைக் காட்டிலும் ஒழுக்கம்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் பிரதானம். ஒழுக்க நெறிகளுடன், எந்த ஒரு வேலையையும் முழு ஈடுபாட்டோடு செய்தால், எந்தத் துறையிலும் சிறந்த நிலைக்கு வர முடியும். அந்த எண்ணத்தை நோக்கி குழந்தைகளை செயல்படவைக்கிறேன். மேலும், நான் பணியாற்றும் பள்ளியின் அடிப்படைத் தேவைகளுக்காகவும், எங்கள் ஊர் மக்களின் தேவைக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், ஆர்.டி.ஐ-யில் தகவல்களைப் பெற்றும், பல செயல்பாடுகளை நிறைவேற்றினேன். சமூக மாற்றத்துக்கு ஆசிரியரின் பங்கு மகத்தானது. ஆசிரியர் பாடம் நடத்துபவராக மட்டுமே இல்லாமல், சமூக மாற்றத்துக்கான விதையை விதைப்பவராகவும் இருக்க வேண்டும் எனச் செயல்பட்டு வருகிறேன். இதனால், மாணவர்கள் மனதிலும் நல் எண்ணங்கள் விதையாகப் பதிகின்றன. அவை பிற்காலத்தில் செயலாக முளைத்தால் நிச்சயம் நல்ல சமூக மாற்றம் நிகழும்." 

சபரி மாலா: 
விழுப்புரம் மாவட்டம், வைரபுரம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். தன் பள்ளி மற்றும் தமிழகத்தின் பல அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த பேச்சுத்திறனுள்ள மாணவ, மாணவிகளுக்குப் பல மேடைகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கையை மேம்பட உதவிவருகிறார். 

ஆசிரியர் சபரி மாலா

"சிறு வயது முதலே கவிதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உண்டு. திண்டுக்கல் பள்ளியில் படித்துக்கொண்டிந்த சமயத்தில், 'பீப்பிள் வாட்ச்' என்ற பள்ளியின் சிறப்பு பயிற்சி வகுப்பின்படி, அடிக்கடி வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். அப்படி ஒருமுறை சேரிப் பகுதிக்குச் சென்றபோது பெரிய அதிர்ச்சி. ஆடைகள் இல்லாத குழந்தைகள், எங்குப் பார்த்தாலும் பன்றிகள், கூரை வீடுகள், சுகாதார சீர்கேடான காட்சிகள் என மனதை மிகவும் பாதித்தது. பள்ளிக்கு வந்ததும் அன்றைக்குக் கற்றுக்கொண்ட நிகழ்வுகளைக் கட்டுரையாக எழுதச் சொன்னார்கள். கண்ட காட்சிகள், அந்நிலை மாற எனக்குத் தெரிந்த வழிமுறைகளைக் கட்டுரையாக எழுதினேன். 'உன் எழுத்தும் சமூக நோக்கப் புரிதலும் சிறப்பாக இருக்கிறது. எழுதியதை மேடையில் பேசினால், மக்களிடம் இன்னும் அதிகமாகச் சென்றடையும்' என என் ஆசிரியர் சொன்னார். அதன்படி 11-ம் வகுப்பில் என் மேடைப் பேச்சு தொடங்கியது. எனக்கு ஓர் ஆசிரியர் தூண்டுகோலாக கிடைத்தது போல, நானும் ஆசிரியராகி நூற்றுக்கணக்கான குழந்தைகளை மேடை ஏற்ற முடிவுசெய்தேன். 2002-ம் ஆண்டு சிதம்பரம் மாவட்டம் எள்ளேரி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியைப் பணியைத் தொடங்கினேன். மூன்று பள்ளிகள் மாறி, தற்போது வைரபுரம் பள்ளியில் ஒன்பது ஆண்டுகளாகப் பணி செய்கிறேன். என் பள்ளி மற்றும் தமிழகத்தின் மற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் பேச்சுத்திறனை கண்டறிந்து அவர்களை மேடையேற்றி வருகிறேன். கதவே இல்லாத வீடுகளில் வசிக்கும் மாணவ, மாணவிகள் பேச்சுத் திறனால் பல மாநில, தேசிய அளவிலான மேடைகளில் புகழ்பெற்றார்கள். பல தரப்பிலும் உதவிகள் கிடைத்து, பொருளாதார ரீதியில் பலன் பெறுகிறார்கள். இதன்மூலம், கல்லூரிப் படிப்பு முடித்து நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். இந்த மாற்றங்களை ஆசிரியர் பணியில் இருந்தால்தான் செய்ய முடிந்தது. மிகவும் நேசித்து என் ஆசிரியை பணி செய்துகொண்டிருக்கிறேன்." 

தமிழரசன்: 
விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம், பள்ளிகுளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கணித ஆசிரியர். வீடு தோறும் கழிப்பிடம் கட்டுதல், மரம் வளர்த்தல் உள்ளிட்ட தன் சமூகப் பணி விழிப்பு உணர்வு நிகழ்வில், மாணவர்களையும் இணைத்துச் சிறப்பாகச் செயல்படுகிறார். பி.பி.எல் (project based learning) என்ற செயல்திட்டத்தில் மாணவர்களை பங்களிக்கச் செய்கிறார். கிராம மக்கள் உதவியுடன் பள்ளிக்கு பல லட்சம் செலவிலான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியிருக்கிறார். 

ஆசிரியர் தமிழரசன்

"திருவண்ணாமலை மாவட்டம் வெடால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், அருகிலுள்ள ஓர் அரசு உதவிபெறும் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தேன். என் பெற்றோர், அரசுப் பள்ளி ஆசிரியர்களாக இருந்தார்கள். பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும், இன்ஜினீயரிங் படிக்க ஆசைப்பட்டேன். 'சமூகத்தில் மதிப்புமிக்க பணி, ஆசிரியர் பணி. அத்துறைக்குச் செல்' எனப் பெற்றோர் சொன்னதால், ஆசிரியரானேன். விழுப்புரம் மாவட்டத்தில் மேல் அத்திப்பாக்கம் என்ற கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 2000-ம் ஆண்டு ஆசிரியராகப் பணியைத் தொடங்கினேன். அடுத்து, இன்னொரு அரசுப் பள்ளியில் 12 ஆண்டுகள். தற்போது, பள்ளிக்குளம் பள்ளியில் ஆறு ஆண்டுகளாகப் பணி செய்கிறேன். படிப்பில் ஆர்வம் இருந்தும், சரியான வழிகாட்டல் இல்லாமல் இருக்கும் மாணவர்கள்; விழிப்புஉணர்வு இல்லாமல் அறியாமையில் இருந்த பெற்றோர், பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பு குறைவாக இருப்பது போன்ற நிகழ்வுகள் ஆசிரியர் பணிக்கு வந்த காலத்தில் என்னை மிகவும் சிந்திக்கவைத்தது. ஆரம்பத்தில் விருப்பம் இல்லாமல் இப்பணிக்கு வந்தவனை, பாதித்த மூன்று நிகழ்வுகளால் மனதார நேசித்துச் செயல்பட ஆரம்பித்தேன். விளையாட்டுத் துறையில் பல பதக்கங்களை பெற்றவன் என்பதால், குழந்தைகளை விளையாட்டில் கவனம் செலுத்த உத்வேகப்படுத்தினேன். இதில் நல்ல மாற்றம் கிடைக்கவே, ஒவ்வொரு புது முயற்சியையும் செயல்படுத்தினேன். மாணவர்களும் பெற்றோர்களும் முழு உத்வேகத்துடன் ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். சமூகப் பணிகளிலும் மாணவர்களை ஈடுபத்தி சிறுவயதிலேயே நல்லச் செயல்பாடுகளை நோக்கிப் பயணிக்க என்னாலான முயற்சிகளைச் செய்துவருகிறேன்." 


டிரெண்டிங் @ விகடன்