Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அனிதா பற்றவைத்த நெருப்பை அணையாமல் காப்போம்'- நெல்லையில் வலுக்கும் நீட் எதிர்ப்புக் கோஷம்

நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நெல்லையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில பள்ளிகளில், மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவி அனிதா தற்கொலையைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. நீட் தேர்வு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தமிழக மாணவர்களை வஞ்சித்துவிட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மாணவி அனிதாவின் மரணத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரியும், தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

மாணவர் போராட்டம்

நெல்லை பேட்டையில் உள்ள ம.தி.தா கல்லூரியில், மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கல்லூரியில் உள்ள 2,000 பேர், கல்லூரியை விட்டு வெளியே வந்து கோஷமிட்டனர். நீட் தேர்வுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள். ’நீட் தேர்வு தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்த மத்திய, மாநில அரசு அமைச்சர்களின் பேச்சுகள் காரணமாகவே அனிதா தற்கொலை செய்துகொண்டார். அவரது உயிரை அரசாங்கம் பறித்துவிட்டது. நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தனது உயிரைக் கொடுத்து அனிதா பற்றவைத்த நெருப்பு அணையாமல் காப்போம். நீட் தேர்வை ரத்துசெய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும்’ எனத் தெரிவித்தனர்.

பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில், சுமார் 2,500 மாணவர்கள் கல்லூரியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரிக்கு வெளியே அமர்ந்த மாணவர்கள், நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி மாணவ, மாணவிகள், வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு, கல்லூரிக்கு உள்ளேயே அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கோஷங்களை எழுப்பியபடியே அவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி மாணவர்கள்

கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களும் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை சேவியர்ஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும், நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி கோஷமிட்ட அவர்கள், தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement