அரசுகளை சடலமாக சித்திரித்து நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!

திருச்சி போராட்டம்

நீட் தேர்வை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்திய மாணவி அனிதாவின் மரணத்துக்குப் பிறகு, தமிழகம் முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். குறிப்பாக, மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துவருகிறது.

அனிதா மரணத்துக்கு நீதிகேட்டும், நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரியும் திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி எதிரில், அனைத்திந்திய மாணவர் மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவைச் சேர்ந்த தினேஷ், ஜீவானந்தம், சேக்அப்துல்லா, சூர்யா, ரியாத் நிஷா உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள், கடந்த நான்கு  நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர்.

ஐந்து பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்துக்கு, இப்போது பலரும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர். கடந்த சில நாள்களாக திருச்சியில் கனமழை பெய்தாலும் உண்ணாவிரதம் தொடர்வதால், போராட்டத்தை ஆதரித்து, சமூக ஆர்வலர்கள், மக்கள், மாணவர்கள்  ஆதரவு தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழகமே தொடர்ந்து போராடிவரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் எந்த அசைவும் இல்லாமல் சடலமாக இருப்பதை உணர்த்தும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகளை சடலமாக சித்திரித்து, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அதிகரித்துவருவதால், உண்ணாவிரதம் இருந்துவரும் இளைஞர்களிடம் போராட்டத்தைக் கைவிடும்படி போலீஸார் கேட்டுக்கொண்டும், நெருக்கடிகொடுத்தும் வருகின்றனர்.

திருச்சி மாணவர்கள் போராட்டம்

இந்நிலையில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், மாநிலச் செயலாளர் பாலமுருகன் தலைமையிலான ஆறு பேர், கி.ஆ.பெ மருத்துவக் கல்லூரி முன்பு நீட் அரசாணையை எரித்தனர். மேலும் அவர்கள், சாலையில் படுத்துக்கொண்டு, மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, அங்கிருந்த போலீஸார் வலுக்கட்டாயமாக சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்தனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவரும் ஜீவா, “கடந்த  நான்கு நாள்களாகப் போராடிவரும் எங்களுக்கு, பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர். இங்கே போராட்டம் நடத்திவரும் பகுதிக்குக் கொஞ்ச தூரத்தில் முகாமிட்டுள்ள போலீஸார், எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வரும் மாணவர்கள், பொதுமக்களை எச்சரித்து, மிரட்டி அனுப்புகின்றனர். அதோடு, கல்லூரி நிர்வாகம் மூலமாக, மாணவர்களை மிரட்டும் வேலையையும் போலீஸார் செய்கின்றனர். எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராடுவோம்” என்றார்.

இதேபோல, திருச்சி ஈ.வெ.ரா அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் இரண்டாவது நாள்களாக இன்றும் வகுப்பைப் புறக்கணித்து கல்லூரியின் நுழைவாயில் முன்பு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர், இங்கு பி.ஜே.பி-யின் துணை அமைப்பான ஏ.பி.வி.பி மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், 'நீட் தேர்வுக்கு எதிராகப் போராடக் கூடாது. போராடினால் பிரச்னை செய்வோம். அதனால் கலைந்துசெல்லுங்கள்' என மிரட்டல் தொனியில் பேசிவருவதால், ஈ.வெ.ரா கல்லூரி வளாகம் பரபரப்பாகக் காணப்படுகிறது.

திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள ஜெ.ஜெ.பொறியியல் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நம்புக்குறிச்சி கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீட் தேர்வுக்கு எதிராக திருச்சி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் வலுத்துவருகின்றன. மேலும், வரும் 8-ம் தேதி, திருச்சியில் இதே கோரிக்கைகளுக்காக அனைத்துக்கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கவிருப்பதால், திருச்சி மிகவும் பரபரப்பாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!