வெளியிடப்பட்ட நேரம்: 15:19 (05/09/2017)

கடைசி தொடர்பு:15:27 (05/09/2017)

தி.மு.க - ம.தி.மு.க - வி.சி.க கூட்டணிக்கு அச்சாரமா ‘முரசொலி’ பவளவிழாக் கொண்டாட்டம்?

முரசொலி பவள விழா அழைப்பிதழ்

ழையால் தள்ளிவைக்கப்பட்ட (கடந்த மாதம் 11-ம் தேதி) 'முரசொலி' பவள விழா பொதுக் கூட்டம், இன்று (செப்டம்பர் - 5) கொட்டிவாக்கம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டுள்ள கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு பேச இருக்கிறார்கள்.

தன்னுடைய 75 ஆண்டுக்கால எழுச்சிப் பயணத்தை வெற்றிகரமாய்க் கடந்திருக்கும் தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான 'முரசொலி'யின் பவளவிழா கொண்டாட்டங்கள் தி.மு.க. சார்பில் கடந்த மாதம் 10 மற்றும் 11-ம் தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 10-ம் தேதி அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் படக்காட்சி, அரங்கம் திறப்புவிழா, பத்திரிகை மற்றும் திரையுலக ஆளுமைகள் கலந்துகொள்ளும் வாழ்த்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் மூத்த பத்திரிகையாளர்கள், பத்திரிகை அதிபர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற நடிகர் கமல், கவிஞர் வைரமுத்து ஆகியோர் உரையாற்றினர். நடிகர் ரஜினிகாந்த் பார்வையாளராக அந்த விழாவில் கலந்துகொண்டார். விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு 'முரசொலி' பவள விழா விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன. 

இதனையடுத்து, ஆகஸ்ட் 11-ம் தேதி மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ளும் வகையில், பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் மிகப் பிரமாண்டமாகச் செய்யப்பட்டு இருந்தன. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தி.மு.க தலைவர் கருணாநிதியின் 60 ஆண்டு கால சட்டப்பேரவை வைர விழா மற்றும் 94-வது பிறந்த நாள் விழாவில், டெல்லியில் உள்ளவர்களுக்கு மட்டும்தான் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. தமிழகக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கவில்லை. எனவே, அதைப் போக்கும்விதத்தில் இந்த விழாவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு இந்த விழா அரசியல் கூட்டணியாக மாறுவதற்குக்கூட வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட சூழலில், நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்திலேயே மழை கொட்டியது. அதனால், பவள விழா மலர் மட்டும் வெளியிடப்பட்டது. மழை நீடித்ததால், அரசியல் தலைவர்கள் யாரும் பேசாத நிலையில் பாதியிலேயே விழா நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ''விளையாட்டு அரங்கத்தை நிறைத்திருந்த மக்களைப்போலவே, அந்த இனிய நேரத்தில், வானமும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மழையாகப் பொழிந்த காரணத்தால், விழாவை முழுமையாகத் தொடர இயலாமற்போனது. பவள விழா இரண்டு நாள்களில் முடிவடையக்கூடாது. மேலும் தொடர வேண்டும் என்கிற இயற்கையின் விருப்பத்துக்கேற்ப, பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. மழையையும் பொருட்படுத்தாது விழாவுக்கு வருகை தந்திருந்த அரசியல் கட்சித் தலைவர்கள், அவர்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 'முரசொலி' பவள விழா பொதுக்கூட்டம் வேறொரு நாளில்  பிரமாண்டமாக நடைபெறும். அதில் நமது ஒற்றுமையும், வலிமையும் முரசொலித்து புதிய வரலாற்றைப் படைப்போம்'' என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தன் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அதன்படி, அந்த விழா கொட்டிவாக்கம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று (செப்டம்பர் 5-ம் தேதி) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்க உள்ளார். முதன்மைச் செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் வரவேற்க, மு.க.ஸ்டாலின் நன்றி கூறுகிறார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு. திருநாவுக்கரசர், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் என தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டுள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். இந்த விழாவில், வைகோ பங்கேற்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதுடன், தி.மு.க. கூட்டணிக் கட்சிகளிடையே மிகுந்த உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் தி.மு.க. கூட்டணியில் வைகோ இணையக்கூடும் என்று பரவலாகப் பேசப்படுவதுடன், எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டு உருவாகும் கூட்டணி ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்