வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (05/09/2017)

கடைசி தொடர்பு:15:45 (05/09/2017)

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை புறக்கணித்த 6 எம்.எல்.ஏ-க்கள்!

மிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கூட்டிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம், ஆட்சியில் இருக்கும் அணிக்கு ப்ளஸ்சா, மைனஸா என்பது புரியாமலே நடந்து முடிந்திருக்கிறது.

 முதல்வர் கூட்டிய   எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

'ஒண்ணு இங்கிருக்கு... இன்னொண்ணு எங்கே? அட, அந்த இன்னொண்ணுதானே இது...' என்ற டயலாக்கை நினைவுபடுத்தும் விதமாக  அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களின் கூட்டம் இன்று நடந்திருக்கிறது. ஆட்சியாளர்களின் நம்பிக்கையை சிதறவிடாமல் 'சேம் சைடு கோல்' அடிப்பது போல் உளவுப் போலீஸார் போடும் ரிப்போர்ட்டே,  எடப்பாடிக்குச் சாதகமாக இல்லை என்கிறார்கள். இது  எடப்பாடி பழனிசாமிக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள்.

சபாநாயகர்  தனபால் மற்றும் இறந்துபோன ஜெயலலிதா ஆகியோரைக் கணக்கில் சேர்க்காமல் பார்த்தால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள், மொத்தம் 134 பேர்.  எடப்பாடி பழனிசாமி கூட்டிய கூட்டத்தில் 109  எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே வருகைப் பதிவில் கையெழுத்துப் போட்டுள்ளனர். 19 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு உறுதியாக இருக்கிற அணியாக தினகரன் அணி இருக்கிறது.

தினகரனிடம் இருப்பதாகச் சொல்லப்படும் 19 பேர் போக 115 பேர் பங்கேற்க வேண்டிய முதல்வர் கூட்டிய கூட்டத்தில் 109 பேர் மட்டுமே கையெழுத்துப் போட்டுள்ளனர். கணக்கில் இடிக்கும் அந்த 6 பேர் எங்கே போனார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. அம்மா அணி, புரட்சித்தலைவி அம்மா அணி என்று இரண்டாக இருந்த அணிகள் ஒன்றாகி விட்டதால் எதிர்தரப்பில் இருக்கும்  டி.டி.வி. தினகரன் அணியை போட்டி அ.தி.மு.க. என்றே ஆட்சியில் உள்ள  அணி வர்ணித்து வரும் வேளையில் இப்படியான கண்ணாமூச்சிப் போட்டி ஆரம்பமாகியிருக்கிறது.