வ.உ.சி பிறந்தநாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க கோரிக்கை!

வ. உ.சி பிறந்தநாள்

’வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும்’ என வ.உ.சி-யின் கொள்ளுப்பேத்தி கோரிக்கை வைத்துள்ளார்.

கப்பல் ஓட்டிய வீரத்தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேத்தி செல்வி, அவரது இல்லத்தில் வ.உ.சி-யின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ வ.உ.சிதம்பரனாரின் பிறந்த வீடான ஓட்டப்பிடாரத்திலுள்ள அவரது இல்லத்தில், சிதம்பரனாரின் வெண்கலச்சிலை வைக்கவேண்டும் என அரசுக்கு வைத்த கோரிக்கையின்படி, சிதம்பரனாரின் இல்லத்தில் வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. அதே போல, ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் அமைக்க வேண்டுமென அரசுக்கு வைத்த கோரிக்கையின்படி நீதிமன்றம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருவதாக அரசு தெரிவித்துள்ளது. அதற்காக அரசுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

வ.உ.சிதம்பரனார், சுதந்திரப்போராட்ட வீரர் மட்டுமல்ல, குற்றவியல் வழக்குகளில் மிகச் சிறப்பாக வாதாடுவார். கம்பீரத்துடன் நல்ல வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று.  ஏழை மக்களுக்கு இலவசமாக வாதாடி, அவர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்தவர். எனவே, அவரது பிறந்தநாளை, 'வழக்கறிஞர் தினமாக' அரசு அறிவிக்க வேண்டும் என அவரது பிறந்தநாளான இன்று கோரிக்கையாகத் தெரிவிக்கிறேன்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!