“மாற்றங்களை ஏற்படுத்திய ஆசிரியர்களே..!” இறையன்பு ஐஏஎஸ், அமுதா ஐஏஎஸ், சைலேந்திரபாபு ஐபிஎஸ் நெகிழ்ச்சி | Top bureaucrats speak about their unforgettable teachers in life

வெளியிடப்பட்ட நேரம்: 22:59 (05/09/2017)

கடைசி தொடர்பு:22:59 (05/09/2017)

“மாற்றங்களை ஏற்படுத்திய ஆசிரியர்களே..!” இறையன்பு ஐஏஎஸ், அமுதா ஐஏஎஸ், சைலேந்திரபாபு ஐபிஎஸ் நெகிழ்ச்சி

ம் வாழ்வில் அறிவுக் கண் திறந்துவைக்கும் அகர முதல்வர்கள்... ஆசிரியர்கள். ஒரு நல்ல ஆசிரியரால் சிறந்த மாணவனை மட்டுமல்ல, மிகச்சிறந்த மனிதனையும் உருவாக்க முடியும். அப்படியான ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஆளுமைகள், தங்களது ஆசிரியர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார்கள். இறையன்பு ஐஏஎஸ், அமுதா ஐஏஎஸ், சைலேந்திரபாபு ஐபிஎஸ்ஸின் நெகிழ்ச்சி இங்கே...

சைலேந்திர பாபு, சிறைத்துறை கூடுதல் டிஜிபி 

சைலேந்திரபாபு

''நான் படிச்சது கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையின் ஓர் அரசு மேல்நிலைப் பள்ளியில். அங்கே எனக்கு நிறைய ஆசிரியர்களைப் பிடிக்கும். குறிப்பிட்டு சொல்லணும்னா, ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது வந்த கணித ஆசிரியர் ராமசாமி. ராஜாக்கள் எப்படி நடப்பாங்களோ, அப்படி கம்பீரமாக நடந்து வருவார். அவரைப் பார்த்தாலே எல்லாரும் பயப்படுவாங்க. எனக்கும் அவரைப் பார்த்தால் அதிக பயம் உண்டு. அதேநேரம் அதிக மரியாதையும் உண்டு. அவர்தான் எங்க பள்ளியின் தேசிய சாரணர் படை ஆசிரியர். நான் மிடுக்காக, துறுதுறுன்னு இருப்பேன். ஒருநாள் என்னைக் கூப்பிட்டு சாரணர் படை ஆடையை போடச் சொன்னார். நானும் போட்டேன். அன்று முதல் என் பள்ளியில் சாரணர் இயக்கத்தில் இருந்த 300 மாணவர்களுக்கும் நான்தான் தலைவர்.

அன்று அவர் போட்டு அழகுப் பார்த்த காக்கிச் சட்டையை நான் இன்னும் கழட்டலை. ஐ.ஏ.எஸ் ஆனதும் அவர்கிட்ட சொல்லணும்னு ஆசைப்பட்டு பார்க்கப் போனேன். ஆனால், அதைப் பார்க்க அவர் இல்லை. அந்தப் பள்ளியில் படிச்ச எங்க பேட்ஜ் மாணவர்கள் எல்லாரும் கடந்த 20 வருங்களாக எங்க ஆசிரியர்களைச் சந்திச்சு மரியாதை செலுத்திட்டு வர்றோம். நாங்க மரத்தடியில்தான் பாடம் படிச்சோம். பள்ளிக்கூட கட்டடங்களைவிட நல்ல ஆசிரியர்களின் பங்களிப்புதான் முக்கியம் என்பதற்கு எங்கள் பள்ளி சிறந்த உதாரணம். எங்களை உருவாக்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பு வணக்கங்கள்!'' 

அமுதா, ஐ.ஏ.எஸ் 

அமுதா ஐ.ஏ.எஸ்

“மதுரையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில்தான் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிச்சேன். பள்ளி நினைவலைகள் அனைத்தும் எப்போதும் என்னுள் நிறைஞ்சு இருக்கும். அப்போதெல்லாம் நாங்கள் எங்கள் ஆசிரியர்களைக் கொண்டாடினோம். காரணம், அவர்கள் அனைவரும் தங்கள் பணி மீது அளவுகடந்த பற்றோடு, அடுத்த தலைமுறையினரை உருவாக்கும் குறிக்கோளோடு வேலை செஞ்சாங்க.

எனக்குப் பாடம் நடத்தின ஆசிரியர்கள் எல்லோருமே எனக்குப் பிடிச்ச பிரியத்துக்குரியவர்கள். அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லணும்ன்னா, சங்கர பாண்டியன் ஆசிரியரைச் சொல்வேன். காரணம், பருவ வயதை எட்டக்கூடிய வயதிலிருக்கும் அனைத்துப் பெண்களுக்குமே இயல்பாக இருக்கும் கூச்ச சுபாவம் எனக்கும் இருந்துச்சு. நான் ஒரு கபடி பிளேயர். எட்டாம் வகுப்பு வந்ததும், 'நீ கபடி விளையாடக்கூடாது, பசங்களோடு பேசக்கூடாது' என வீட்டில் எக்கச்சக்க கட்டுப்பாடுகள். அந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் தகர்த்தெறிந்தவர் சங்கர பாண்டியன் சார்தான். 'ஆண், பெண் என்பது பயாலஜிக்கல் சார்ந்தது. மனசுக்குக் கிடையாது. நீ வீணாக உன்னைக் குழப்பிக்காதே'னு சொல்லி ஆண், பெண் உறவுகளை அழகாக உணர்த்தியவர். பசங்களை மட்டுமே வைத்து நாடகம் நடத்திட்டிருந்தபோது, முதல்முறையாக 'அமுதா ஐ.பி.எஸ்' என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதி, அதில் என்னைத் துப்பறியும் கேரக்டரில் நடிக்கவைத்தார்.

1985-ம் ஆண்டு பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது, நான் ஐ.பி.எஸ் ஆக அந்த நாடகத்தில் நடிச்சேன். 1993-ம் ஆண்டில் நிஜமாகவே ஐ.பி.எஸ் ஆனேன். அன்று மாணவப் பருவத்திலேயே ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி மன ரீதியாக எனக்குள் மாற்றங்களை ஏற்படுத்தியதால்தான், இன்று ஆண் அதிகாரிகளுக்கு இணையாக களத்தில் இறங்கி வேலைப் பார்க்க முடியுது. இதோ, 23 ஆண்டுக்கால சிவில் சர்வீஸ் பணியை நிறைவு செய்திருக்கேன். இன்றைய ஆசிரியர் தினத்தில், என்னை வழி நடத்திய அனைத்து ஆசிரியர்களுக்கும்... குறிப்பாக, சங்கர பாண்டியன் மற்றும் சுசீலா ஆசிரியர்களுக்கு என் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவிச்சுக்கிறேன்.'' 

வெ. இறையன்பு, முதன்மை செயலர் மற்றும் ஆணையர், பொருளாதாரம் மற்றும் புள்ளியல்துறை

வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்

''நான் சேலத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில்தான் படிச்சேன். எனக்கு வகுப்பு எடுத்த எல்லா ஆசிரியர்களையுமே ரொம்ப பிடிக்கும். மறக்க முடியாத ஆசிரியர்னு சொல்லணும்னா, என் கைப்பிடித்து எழுதக் கற்றுக்கொடுத்த ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் சரஸ்வதி. ஆமா, கலைமகளிடமே கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றவன் நான். ரொம்ப அன்பானவர். எல்லாரிடமும் இயல்பா பழகும் குணம். அவரை அடிக்கடி சந்தித்து ஆசி பெற்றுவந்தேன். அண்மையில் அவர் மறைந்துவிட்டார். ஆனால், என்னைப் போன்ற நிறைய மாணவர்களின் மனதில் எப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பார். அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகள்!'' 


டிரெண்டிங் @ விகடன்