Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``தப்பிப் போறவங்களைத் துரத்திப் பிடிக்கவே பயமா இருக்கு!’’ - இரவு ரோந்து போலீஸ்

இரவுக்கு ஆயிரம் கண்கள். இவற்றில் பாதி தூங்கினாலும் மீதி எப்போதும் விழித்தே இருக்கும். அப்படி விழித்திருக்கும் கண்களுக்குச் சொந்தக்காரர்கள்தான் தமிழ்நாடு காவல் துறையினர்.  இரவு-பகல் பாராமல் பணியில் இருக்கும் காவல் துறையினரின் காக்கிச் சட்டைக்குள் கருணையும் கனிவுமிக்க கடமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இரவு நேரக் காவலர்களைப்  பற்றி கரடுமுரடான ஒரு பிம்பத்தை சினிமாக்களும் சில கதைகளும் சமுதாயத்தில் ஏற்படுத்திவைத்திருக்கின்றன.

போலீஸ்

இரவு 12 மணி இருக்கும். எல்.ஐ.சி பேருந்து நிலையத்துக்கு அருகில் சிவப்பு நிற இனோவா கார் ஒன்றும் வெள்ளை நிற இனோவா கார் ஒன்றும் சைரன் விளக்குப் பிரகாசத்துடன் நின்றுக்கொண்டிருக்கின்றன. நான்கைந்து காவலர்கள் வாகனத் தணிக்கையில் இருந்தார்கள். வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். சோதனையில் சிக்கிய நான்கைந்து பேர் கைகட்டி நின்றுகொண்டிருந்தார்கள்.

தீவிர சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு காவலரிடம் பேசினேன்.

``25 வருஷங்களா போலீஸ் வேலைபார்த்துக்கிட்டிருக்கேன். சொந்த ஊர் தஞ்சாவூர். சென்னை வந்து பத்து வருஷங்கள் ஆச்சு. ரெண்டு நாளைக்கு ஒருமுறை  நைட் டியூட்டி  வரும். நைட் 9 மணிக்கு வந்து காலையில 7 மணி வரை டியூட்டி பார்க்கணும். குடிச்சுட்டு வண்டி ஓட்டிட்டு வரவங்கதான் அதிகம். செக் பண்ணி மாட்டிக்கிட்டா, `எனக்கு அவரைத் தெரியும்... இவரைத் தெரியும்'னு சொல்வாங்க. தப்பிப் போறவங்களைத் துரத்திப் பிடிக்கவே பயமா இருக்கு. காரணம், எங்கேயாவது போய்  விழுந்துட்டாங்கனா, அதுக்குக் காரணம் நாங்கதான்னு சொல்லிடுவாங்க. நான் பார்த்த விபத்துகளில் பாதி குடிபோதையில் நடந்தவைதான். ரத்தமும் சதையுமா எவ்வளவோ விபத்தை நான்  பார்த்திருக்கேன்.

வியாசர்பாடி பாலத்துல நடந்த ஒரு விபத்துல, மது போதையில் ஒருவர் அடிபட்டுக் கிடந்தார்.  அடிபட்டுக் கிடந்த ஒருத்தரை, வாழ்க்கையிலேயே  முதன்முதலா என் கையால தூக்கி சாலை ஓரத்துல கிடத்தினேன்.  ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்த  மூணாவது நிமிஷம், அவரோட  உயிர் பிரிஞ்சுடுச்சு.  நம்ம கண்ணு முன்னால ஒரு உயிர் போறதை அனுபவிக்கிறதுதான்  உலகத்துல மிகப்பெரிய தண்டனை. எப்ப கண்களை மூடினாலும்  அந்தச் சம்பவம்தான்  காட்சியா நிக்குது. அன்னியில இருந்து குடிச்சுட்டு வண்டி ஓட்டுற நிறையபேருக்கு புத்திமதி சொல்லி அனுப்பியிருக்கேன்.

புளியந்தோப்புல  ஆட்டோ டிரைவர் ஒருத்தர்,  குடி போதைல வண்டி ஒட்டி  எங்கிட்டே ரெண்டு முறை மாட்டினார்.  ஒவ்வொரு முறையும்  2,500 ரூபாய்  ஃபைன்  போட்டோம். `குடிக்காதே'ன்னு பார்க்கிற நேரமெல்லாம் சொல்வேன்.  எங்கேயாவது  அவனைப் பார்த்தா,  `குடிக்கிறதை நிப்பாட்டிட்டேன்'னு சொல்வான்.  ஒருநாள்  என்னைப் பார்க்க புது கார்ல வந்தான். என்னடான்னு விசாரிச்சதுல, ``சார், புது கார் வாங்கினேன். அதான், உங்களைப் பார்த்து சொல்லிட்டுப்  போலாம்னு வந்தேன்" என்றான். 100 பேர்ல  ஒருத்தன் திருந்த நான் காரணமா இருக்கேனு நினைக்கும்போது  அவ்வளவு சந்தோஷமா இருக்கு'' என்றார் .

போலீஸ்

திருவல்லிக்கேணி அருகில் நின்று இருந்த காவலர் ஒருவரிடம் பேசியதில்...

``போலீஸா இருக்கிறதுனால இதோட ப்ளஸ் மைனஸ் ரெண்டுமே அனுபவிச்சிருக்கேன். போலீஸ் கனவுக்குப் பின்னாடி நான் இழந்திருக்கிற விஷயம் அவ்வளவு இருக்கு. யூனிஃபார்முக்குப் பின்னாடி இருக்கும் எங்க வாழ்க்கையைப் பற்றி எங்க பிள்ளைகள்கிட்ட கேட்டாத்தான் சரியா சொல்வாங்க. நைட் நாம போகும்போது  அவங்க தூங்கிடுவாங்க. ஆசையா ரெண்டு வார்த்தைக்கூட பேச முடியாது. `அப்பா'ன்னு பிள்ளைங்க நேர்ல சொல்றதைவிட போன்லதான் அதிகமா கேட்டிருக்கேன். குடும்பம், சொந்தக்காரர்கள், நண்பர்கள்னு எங்களைச் சுற்றி இருக்கும் எல்லோரும் எப்போதும் போலீஸாத்தான் பார்க்குறாங்க. இந்த வேலைக்கு வந்ததை நினைச்சு, நிறைய நாள் வருத்தப்பட்டிருக்கேன். சாகுற வரைக்கும் போலீஸ்காரனாவே இருந்து சாகுறதெல்லாம் எந்த மாதிரியான தலை எழுத்துனு தெரியலை'' என்கிறார்.

இன்னொரு காவலரிடம் பேசியதில்...

``இங்கே இருக்கும் பிரச்னையைவிட வெளியேதான் எங்களுக்கு நிறைய பிரச்னைகள் இருக்கு. ஒடிசாவுல தலைமறைவா இருந்த ஒருத்தரைப் பிடிக்க, சென்னையிலயிருந்து மூணு பேர் டிரெய்ன்ல ஒடிசா  போனோம். அங்கே போய் அந்த ஊர் போலீஸ்கிட்ட உதவி கேட்டோம். அவங்க யாரும் சரியா ஒத்துழைக்கலை. நாங்க சவாரி போன ஆட்டோக்காரன் உதவி பண்ணிய அளவுக்குக்கூட காவல்துறை உதவி பண்ணலை.  `குற்றவாளியைத் தேடி வந்திருக்கோம்'னு அங்கே இருக்கிற மக்களுக்குத் தெரிஞ்சா பெரிய பிரச்னை ஆகிடும்னு, அங்கே இருந்த ஒரு போலீஸ்காரர் சொன்னார்... `தெருநாயாவே இருந்தாலும் அதோட இடத்துக்குப் போனா குறைக்கத்தானே செய்யும்'னு. கடுமையான சிரமங்களுக்குப் பிறகு குற்றவாளியைக் கண்டுபிடிச்சு கைதுபண்ணுனோம். இது சாதாரண விஷயமில்லை. சென்னை திரும்ப எங்களுக்கு இருந்த ஒரே வழி  ரெயில்தான். ஆனா, ரெயில்வே ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போற வழியில குற்றவாளியோட ஆதரவாளர்கள் எங்களைத் தாக்குவதற்கான எல்லா அறிகுறிகளும் அங்கே  இருந்துச்சு. வேற வழி  இல்லாம வாடகைக்கு ஒரு கார்  பிடிச்சு,  ஆந்திர மாநில எல்லை வரைக்கும் வந்து அதுக்குப் பிறகு டிரெய்ன் ஏறி சென்னை வந்தோம்” என்கிறார்.

காவல்

சென்னை காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பவர்கள் மூன்று பேர். ஒன்று, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர். இரண்டாவது, வழிப்பறிக் கொள்ளையர்கள். மூன்றாவது, பைக்  ரேஸ் நடத்துபவர்கள். பகல்-இரவு என ரேஸ் பைக் ஓட்டுபவர்களை அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. காரணம், போலீஸாரைப் பார்த்ததும் பத்தில் ஒருவராக அமைதியாகக் கடந்து போய்விடுகிறார்கள். மக்கள் எவ்வளவு பாதுகாப்பா இருந்தாலும், செயின் பறிக்கும் கும்பல் எங்கேயாவது ஒரு செயினை அறுத்துட்டுப் போயிடுறாங்க. இப்போ விடியற்காலை வாக்கிங் போறவங்களா பார்த்து செயினை அறுத்துடுறாங்க. வாக்கிங் போறவங்க காதுல ஹெட்செட் போட்டு பாட்டு கேட்டுட்டுப் போறது, போன்ல பேசிட்டுப் போறது எல்லாமே அவங்களுக்குச் சாதகமா இருக்கு. போலீஸ் எவ்வளவு விழிப்பா இருந்தாலும் மக்கள் முன்னெச்சரிக்கையா இல்லைன்னா, சில சம்பவங்கள் இதுபோல நடந்துடுது''  என்றார் ஒரு காவலர்.

எல்லா காக்கிச்சட்டைகளுக்கும் வண்ணம் ஒன்றுதான்; நெய்யப்பட்ட விதங்கள்தான் வெவ்வேறு!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement