வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (05/09/2017)

கடைசி தொடர்பு:18:45 (05/09/2017)

பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கும் 'உமா மகேஸ்வர விரதம்'

சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு. சோமவார விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம், உமா மகேஸ்வர விரதம் என்பவைதான் அவை. இதில் உமா மகேஸ்வர விரதத்தை ஒருவர் முறைப்படி கடைபிடித்தால் மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டியதில்லை என்று காஞ்சி மஹா பெரியவர் தனது 'தெய்வத்தின் குரல்' பதிவில் அருளியுள்ளார். சிவனின் அற்புத வடிவங்களில் உமா மகேஸ்வர வடிவமும் ஒன்று. சிவனோடு இணைந்து உமாமகேஸ்வரியின் வடிவமும் இணைவது சிவசக்தி தத்துவத்தை உணர்த்தும் அற்புத வடிவம். இவர்களை ஒரு சேரத் தியானித்து ஆவணி அல்லது புரட்டாசியில் வரும் பௌர்ணமி தினத்தில் வழிபடுவதே உமாமகேஸ்வர விரதம்.

உமா மகேஸ்வர விரதம்

இந்த விரதத்தைத் தொடங்கினால் தொடர்ந்து 16 வருடங்கள் வரை இருக்க வேண்டும். விரத நாளன்று காலையில் குளித்து முடித்து இறைவனை எண்ணி சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஒரு கலசத்தில் உமா மகேஸ்வரரை ஆவாகனம் செய்து சோடச உபசார பூஜைகள் செய்ய வேண்டும். சிலர் உமா மகேஸ்வரர் சிலையை வைத்தும் வழிபடுவார்கள். அப்படி வழிபட்டால் 16 ஆண்டுகள் கழித்து அந்த சிலையை சிவன் கோயிலுக்கு கொடுத்து விட வேண்டும். முதல் ஆண்டு இந்த விரதத்தை தொடங்குபவர்கள் நைவேத்தியமாக அதிரசம் செய்ய வேண்டும். மற்ற ஆண்டுகளில் சிவனுக்கு விருப்பமான எதையும் செய்து படைக்கலாம்.

பூஜை முடிந்ததும் சிவனடியார்கள், விருந்தினர்களுக்கு உணவிட்டு பிறகே விரதமிருந்தவர்கள் உணவு எடுத்துக்கொள்ளலாம். இந்த விரதத்தின் முக்கிய நோக்கியமே உணவிடுவதுதான். எனவே, அதிதிகளுக்கும், ஏழைகளுக்கும் மலர்ந்த முகத்தோடு உணவிடுவது அவசியம். மகாலட்சுமியைப் பிரிந்த திருமால் கௌதம முனிவரின் ஆலோசனையை ஏற்று உமாமகேஸ்வர விரதம் இருந்துதான் திருமகளை அடைந்தார் என்பது புராணம் கூறும் தகவல். இன்றும் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கும் விரதமாகவே இது இருந்து வருகிறது. உணவளித்து உமாமகேஸ்வரனை ஆராதிக்கும் இந்த விரதநாள் நாளை (6.9.2017) வரவுள்ளது. இந்த நாளில் உமா மகேஸ்வரரை வணங்கி விரதம் இருந்து எல்லா நலமும் வளமும் பெற பிரார்த்திக்கிறோம்.