மருது சகோதரர்களுக்கு புதிய சிலைகள்  வைக்க பரிசீலித்து முடிவெடுக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு! | maruth brothers statue -new order to collector

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (05/09/2017)

கடைசி தொடர்பு:20:10 (05/09/2017)

மருது சகோதரர்களுக்கு புதிய சிலைகள்  வைக்க பரிசீலித்து முடிவெடுக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு!

 

காளையார்கோயில்

 

ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து, வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவர்கள் பெரிய மருது, சின்ன மருது என்று அழைக்கப்படும் மருது சகோதரர்கள். சிவகங்கைப் பகுதியை ஆண்ட வேலுநாச்சியார் அரசியின் படைத் தளபதியாக இருந்து,  அவர்களுக்குப் பின்னர் சிவகங்கை மண்ணை ஆண்டு வரலாறு படைத்தவர்கள். இந்நிலையில், இவர்களது நினைவிடங்களில் இருக்கும் சிலைகள் சிதிலமடைந்துவருவதாக புகார்கள் எழுந்துவந்தன. இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் காளையார்கோயிலைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் "மருது சகோதர்கள் தூக்கிலிடப்பட்ட நாளை ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு திருப்பத்தூரில் அரசு விழாவாக நடத்தி வருகிறது. காளையார்கோவிலில் கிராமப்பொதுமக்கள் கட்டியுள்ள மருது சகோதரர்கள் நினைவு ஆலயத்தில் சுமார் இரண்டரை அடி உயர கற்சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையைத்தான் நினைவாலயத்துக்கு வருபவர்கள் வழிபட்டு வருகின்றனர். 1964-ம் ஆண்டு வைக்கப்பட்ட அந்த இரண்டரை அடி உயர கற்சிலையானது மிகவும் சேதமடைந்துள்ளது. ஆகவே, அந்த சிலையை அகற்றிவிட்டு அதேஇடத்தில் புதியதாக ஐந்தே கால் அடி உயரமுள்ள பெரிய மருது கற்சிலையும் 5 அடி உயரமுள்ள சின்ன மருது கற்சிலையும் வைக்க அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார். இந்த பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் மூன்று மாதத்துக்குள் சிலை அமைக்க பரீசிலனைசெய்து அனுமதி வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.