வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (05/09/2017)

கடைசி தொடர்பு:18:39 (05/09/2017)

கூலிக்கு ஆட்டோ ஓட்டுகிறோம்; லைசென்ஸ் தொலைந்தால்... கொந்தளிக்கும் ஓட்டுநர்கள்


அசல் ஓட்டுநர் உரிமத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பைக் கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு எதிரில் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.,) மற்றும் சேலம் மாவட்ட சாலைப் போக்குவரத்து மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதில் பேசிய சேலம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் உதயகுமார், ''மத்திய அரசு, மாநில அரசுகளின் கொள்கைகள் 'ஆட்டோ, டெம்போ, டாக்ஸி, வேன் ஓட்டுநர்களுக்கு எதிரானதாக இருக்கிறது. அசல் ஓட்டுநர் உரிமத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இது நடைமுறை சாத்தியமாக இருக்குமா? அப்படி வைத்திருக்கும்போது தொலைந்துவிட்டால் அதை வாங்குவது எவ்வளவு பெரிய சிரமம். மோடி அரசாங்கம் டிஜிட்டல் இந்தியா என்று கூறுகிறது. ஆனால், அசல் உரிமத்தை கையில் வைத்திருப்பதுதான் டிஜிட்டல் இந்தியாவா? ஏற்கெனவே நாங்கள் மோட்டார் வாகனச் சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று எங்களுக்கு இடி மேல் இடி விழுந்ததைப்போல இருக்கிறது. மத்திய அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் அரசாக மாறி வருகிறது. ஏழை, எளிய மக்களைக் கவனத்தில் கொள்வதில்லை. அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தி எங்களுக்கு தொந்தரவு கொடுத்தால் நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்'' என்றார்.

ஆட்டோ ஓட்டுநர் சத்தியமூர்த்தி, ''சேலம் அம்மாப்பேட்டையில் இருந்து வந்திருக்கிறேன். நான் ஒரு வயது குழந்தையாக இருக்கும்போது அப்பா இறந்துவிட்டார். அம்மாதான் என்னை வளர்த்து ஆளாக்கினார். நான் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.
நான் ஒருவரிடம் கூலிக்குத்தான் ஆட்டோ ஓட்டுகிறேன். ஒரு நாளைக்கு 300 ரூபாய் கிடைக்கும். என்னுடைய ஒரிஜினல் லைசென்ஸைக் கொடுத்துவிட்டு இந்தத் தொழில் செய்துகொண்டிருக்கிறேன். ஒரிஜினல் தொலைந்து விட்டால் மீண்டும் அந்த ஒரிஜினல் வாங்கும் வரை யார் எனக்கு வேலை கொடுப்பார்கள். நாங்கள் எதைக்கொண்டு பிழைக்க முடியும். ஏற்கெனவே சமுதாயத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் பரிதவிக்கிறார்கள். இந்த நிலையில் லைசென்ஸ் தொலைந்துவிட்டால் எந்த வேலைக்குப் போக முடியும். இதனால், நடைமுறைச் சிக்கல் அதிகமாக இருக்கிறது. ஆட்டோ ஓட்டுநர்களின் வயிற்றில் அடிக்குது மத்திய அரசு. இந்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும்'' என்றார்.