வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (05/09/2017)

கடைசி தொடர்பு:17:59 (05/09/2017)

நீட் எதிர்ப்புப் போராட்டங்களுக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்குத் தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


நீட் எனப்படும் தகுதித் தேர்வு மூலமே நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகம் முழுவதும் பரவலாக எதிர்ப்பு எழுந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு பெற முயற்சிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, டெல்லியில் முகாமிட்டு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசு நிச்சயம் ஒப்புதல் அளிக்கும், எனவே மாணவர்கள் கவலைகொள்ள வேண்டாம் என்றும் தமிழக அரசு சார்பில் தொடர்ச்சியாக வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு வந்தன.

ஆனால், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 'ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மருத்துவ இடம் கிடைக்கவில்லை, எனவே, நீட் தேர்வு முறையை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறி அரியலூர் மாணவி அனிதா உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார். ஆனால், நீட் தேர்வுக்கு ஆதரவாகவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலால் கடந்த ஒன்றாம் தேதி தனது உயிரை அவர் மாய்த்துக்கொண்டார். அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் நீட்டுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீட் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜி.எஸ்.மணி என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ’தமிழக அரசு சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும், அரசியல் கட்சியினர் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு நிகராக மாநில பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும். அனிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.