தனியார்மயமாகும் பி.எஸ்.என்.எல்! - கொதிக்கும் திருநாவுக்கரசர்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைத் தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்துவருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.  

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’உலகிலேயே தொலைத்தொடர்புத்துறையில் 100 கோடி மக்களுக்கும் அதிகமாகத் தொலைபேசி, செல்பேசி பயன்படுத்துகிற நாடுகளில் இந்தியா முன்னோடியாகத் திகழ்கிறது. மேலும், கோடிக்கணக்கான மக்களிடையே பயன்படுத்தப்படுகிற சாதனமாக செல்பேசி திகழ்ந்து வருகிறது. பணக்காரர்கள், ஏழைகள் என்று எவ்வித பேதமின்றி இரண்டறக் கலந்துவிட்ட சாதனமாக செல்பேசி பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சேவையை வழங்குகிற பி.எஸ்.என்.எல் நிறுவனம் நரேந்திர மோடி அரசின் தவறான கொள்கை காரணமாக மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. 

இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கிற அமைப்பாக, சேவை மையம் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் பல்வேறு பிரச்னைகளைக் கேட்டு, ஒருங்கிணைத்து தீர்த்து வைக்கிற அமைப்பாகச் சேவை மையம் விளங்குகிறது. இந்த மையத்தைத் தனியாரிடம் தாரை வார்க்க மத்திய பா.ஜ.க அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்த ஆணை நாட்டு மக்கள் மத்தியிலே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே இருக்கிற சந்தை போட்டிக் காரணமாக பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகிறார்கள். இந்நிலையில் தனியாருக்கு மறைமுகமாக உதவி செய்கிற வகையில் சேவை மையத்தையே தனியாருக்கு தாரை வார்ப்பது, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும். இதன்மூலம் பி.எஸ்.என்.எல் நிறுவன வாடிக்கையாளர்கள் உரிய சேவை வழங்கப்படவில்லை எனக்கூறி வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இணைப்புகளை மாற்றிக்கொள்கிற சூழல் ஏற்படுவதற்கு இந்த முடிவு பெருமளவில் உதவும் என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இதன்மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கே மூடுவிழா நடத்துகிற வகையில் பா.ஜ.க. ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

எனவே, நரேந்திர மோடி அரசின் தவறான தொலைத்தொடர்பு கொள்கையால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு கடும் பாதிப்பை உருவாக்கும் வகையில் சேவை மையத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அப்படி நிறுத்தப்படவில்லை எனில், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றுகிற தொழிலாளர்களும் வாடிக்கையாளர்களும் கைகோத்து இணைந்து கடும் போராட்டத்தை நிகழ்த்த நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கிறேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!