வெளியிடப்பட்ட நேரம்: 19:19 (05/09/2017)

கடைசி தொடர்பு:19:19 (05/09/2017)

அனிதாவுக்கு நீதி கேட்டு போராடிய சேலம் கலைக்கல்லூரி மாணவர்கள் கைது!

சேலம் கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் நீட் தேர்வால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தரத் தடை கேட்டும் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரியின் நுழைவு வாயிலில் அமர்ந்து போராடி வருகிறார்கள்.

இதுபற்றி மாணவி சரண்யா, ''நீட் தேர்வால் கிராமப்புற மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. ப்ளஸ் டூ-வில் 1176 மதிப்பெண்களும், கட் ஆஃப் மதிப்பெண் 196.5 பெற்றும் அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவியால் மருத்துவம் போக முடியவில்லை. அதற்குக் காரணம் நீட் தேர்வு. அதனால் நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும். தமிழ்நாடு பெரியார் வாழ்ந்த பூமி. இங்கு சமூக நீதி காக்கப்பட வேண்டும். நீட் என்பது மறைமுகக் குலக்கல்வி முறை. இதனால் ஏழை, எளிய மக்கள் மருத்துவம் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும். அதனால் நீட் தேர்வை தமிழகத்தில் நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்.
மாணவன் மாலன், ''கல்வி மாநில பட்டியலில்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய பாரம்பர்யங்களையும், வரலாறுகளையும் தெரிந்துகொள்ள முடியும். மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் சென்றால் படிப்படியாக நம்முடைய அனைத்து வரலாறுகளும் மறைக்கப்படும். நீட் என்பது நமக்குத் தேவையில்லாதது. கடந்த 50 ஆண்டுகளாக மாநில அரசின் கல்வித் திட்டத்தில் படித்து பெரிய பெரிய மருத்துவர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
மாநில அரசின் கல்வித் திட்டத்தில் படிப்பவர்களுக்குத் தகுதி இல்லை என்று கூற முடியாது. அப்படிக் கருதினால் மாநில அரசின் கல்வித் துறையில் மாற்றங்களைச் செய்யலாம். அதற்காக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கல்வியைக் கொண்டு சென்றுவிடக் கூடாது. நீட் தமிழகத்தில் நிரந்தரமாக வரக் கூடாது. அதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகள் ஜல்லிக்கட்டுக்குப் போராடி வெற்றி பெற்றதைப் போல நீட்டுக்கும் போராடி வெற்றி பெற வேண்டும்'' என்றார்.
இவர்களிடம் காவல்துறையினர் கலைந்து போகச் சொல்லி எச்சரிக்கை செய்துகொண்டிருந்தார்கள். ஆனாலும், காவல்துறையினருக்கு கட்டுப்படாமல் தொடர்ந்து போராடி வந்தார்கள். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டத்தைக் கைவிட மாணவர்கள் மறுத்துவிட்டார்கள். அதையடுத்து மாணவர்களைப் போலீஸார் கைதுசெய்துள்ளார்கள்.