இரண்டு காரணங்களுக்காகப் போராட்டத்தில் குதித்த அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள்!

 நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தோடு, அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் மருத்துவ கல்லூரி மாணவர்கள்.


    

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவ - மாணவிகள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், மருத்துவக் கல்லூரிகளை அரசே ஏற்று நடத்திடவும், அரசுக் கல்லூரிகளில் வசூலிப்பதுபோல் கட்டணத்தை அமுல்படுத்தக்கோரியும் காந்தி சிலை முன்பு இன்று ஏழாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இப்போராட்டம் குறித்து மாணவர்களிடம் பேசினோம், "இக்கல்லூரிகளைக் கடந்த 2013-லேயே அரசுடமையாக்கப்பட்டது என்று, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையிலேயே அறிவித்துவிட்டார். நிதிநிலை நெருக்கடி என்று நிர்வாகம் காரணம் காட்டி அதை நடைமுறைபடுத்தாமல் உள்ளது. இது சுத்த வடிகட்டியப் பொய். இதுவரை நிர்வாகம், அரசு தரப்பில் இருந்து 2,330 கோடி ரூபாய் நிதியாக பெற்றுள்ளது. ஒரு மருத்துவக் கல்லூரிக்கு 100 கோடி என்றால் இம்மாவட்டத்துக்கு 23 மருத்துவக் கல்லூரியாகியிருக்கும். அதுகூட வேண்டாம். இம்மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரியே இல்லை. இதை அரசு ஏற்று, இம்மாவட்டத்தின் அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்க வேண்டும். அரசுக் கல்லூரிகளில் வசூலிப்பதுபோல் கட்டணத்தை இம்மாணவர்களுக்கு அமுல்படுத்த வேண்டும்.

நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் வழங்கவேண்டும். இந்த ஏழு நாள் போராட்டத்தில் எவ்வளவோ நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்தப் போராட்டம் என்பதைப் புரிந்துகொண்டு அவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். இதுவரை அமைதியான முறையில் எங்கள் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இனியும் அப்படித்தான் தொடரும். நிர்வாகம் எங்களை மிரட்டிப் பார்த்தால், போராட்டம் வேறுமாதிரி இருக்கும். இதற்காக நீட்டை ஆதரிக்கிறோம் என்று நினைக்கவேண்டாம். "ஒரு கல்லில் இரண்டு மாங்காய்"தான் இந்த போராட்டம்" என்று கொந்தளித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!