போனில் ஆதரவு தெரிவித்த 9 எம்.எல்.ஏ-க்களின் பெயரைப் பட்டியலிட முடியுமா? - தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி | Thanga Tamilselvan asks list of 9 MLAs who supported EPS by phone

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (05/09/2017)

கடைசி தொடர்பு:20:50 (05/09/2017)

போனில் ஆதரவு தெரிவித்த 9 எம்.எல்.ஏ-க்களின் பெயரைப் பட்டியலிட முடியுமா? - தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு போனில் ஆதரவு தெரிவித்த 9 எம்.எல்.ஏ-க்களின் பெயரைப் பட்டியலிட முடியுமா என்று டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.  

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடந்தது. அதில், முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தொடர்வது என்றும், அவர் தலைமையை ஏற்று செயல்படுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘இன்றைய கூட்டத்தில் 111 எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர். தினகரன் முகாமில் உள்ள 9 எம்.எல்.ஏ-க்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு, தங்கள் ஆதரவு இருப்பதாக தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்தனர்’ என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில், சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தலைமைச் செயலகத்துக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்டோர் வருகை தந்தனர். சட்டப்பேரவைச் செயலாளரை நேரில் சந்தித்து அவர்கள் விளக்கம் அளித்தனர்.

சந்திப்புக்குப் பின்னர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், ‘சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு நேரில் விளக்கம் அளிக்க மேலும் 15 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று பேரவைச் செயலரிடம் கோரிக்கை வைத்தோம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட ஜெயா குழும தொலைக்காட்சிகள் அரசு கேபிளில் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. அதைத் தடுக்கக் கோரி தலைமைச் செயலாளரிடம் மனு அளித்தோம். அதேபோல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எங்களது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 9 பேர் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவித்ததாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். அந்த எம்.எல்.ஏ-க்களின் பெயரைப் பட்டியலிட்டால், அவர்களை ஊடகங்கள் முன்னால் நிறுத்தி எது உண்மை என்பதை நிரூபிக்கத் தயார்’ என்றார்.


[X] Close

[X] Close