பி.சி.சி.ஐ காட்டில் மழை... ஒரு பந்துக்கு ரூ.23 லட்சம்... ஸ்டார் வென்றது எப்படி? | Each IPL ball bowled worth Rs Twenty three lakhs for BCCI

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (06/09/2017)

கடைசி தொடர்பு:09:00 (06/09/2017)

பி.சி.சி.ஐ காட்டில் மழை... ஒரு பந்துக்கு ரூ.23 லட்சம்... ஸ்டார் வென்றது எப்படி?

ஐ.பி.எல் போட்டிக்கு, பத்து வயசு ஆகப்போகிறது. 2008-ம் ஆண்டு பிறந்த ஐ.பி.எல் குழந்தை, இப்போது சிறுவனாக வளர்ந்துள்ளது. வளர வளர ஐ.பி.எல் போட்டிக்கு மவுசு எகிறியுள்ளது. 2008-ம் ஆண்டு இந்தத் தொடர் தொடங்கும்போது, தொலைக்காட்சி உரிமத்தை ஒன்பது ஆண்டுகளுக்கு 10,436 கோடி ரூபாய்க்கு எடுத்தது சோனி நிறுவனம். அதாவது, ஆண்டுக்கு 1,160 கோடி ரூபாயை பி.சி.சி.ஐ-க்குக் கொடுத்தது. இந்த ஆண்டுடன் சோனி நிறுவனத்துக்கான உரிமம் முடிந்ததையடுத்து, மறு ஏலம்விட  பி.சி.சி.ஐ டெண்டருக்கு அழைப்புவிடுத்திருந்தது. உரிமத்தைப் பெற, இரு நிறுவனங்கள்தான் தகுதியானவை. 

வருவாய் அள்ளித் தரும் ஐபிஎல்

சோனி நிறுவனம், ஒளிபரப்பு உரிமத்தை 11,050 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டிருந்தது. ஸ்டார் நிறுவனம், 16,347 கோடியே 50 லட்சம்  ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்தது. சோனி நிறுவனத்தைவிட கிட்டத்தட்ட 5,297 கோடி ரூபாய் இது அதிகம். இதையடுத்து, 2018-22ம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கான ஐ.பி.எல் தொடரை ஒளிபரப்பும் உரிமம், ஸ்டார் இந்தியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஐ.பி.எல் தொடரில் நடைபெறும் ஒரு போட்டிக்கு, 55 கோடி ரூபாயை  ஸ்டார் நிறுவனம் கொடுக்கிறது.  சர்வதேசப் போட்டியில்கூட ஒரு போட்டிக்கு 43 கோடி ரூபாய்தான் பி.சி.சி.ஐ-க்கு வருமானமாகக் கிடைக்கிறது.  

அமெரிக்காவில் நடக்கும் நேஷனல் ஃபுட்பால் லீக்கில் ஒரு போட்டிக்கு 150 கோடி ரூபாயும், இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் 84 கோடி ரூபாயும் கொடுக்கப்படுகின்றன. இந்தப் பட்டியலில் ஐ.பி.எல், மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது. என்.பி.ஏ கூடைப்பந்து தொடரில் ஒரு போட்டிக்கு 18 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. டி.வி ஒளிபரப்பு வழியாக பி.சி.சி.ஐ-க்கு வருடத்துக்கு 3,270 கோடி ரூபாய் வருவாய் கொட்டுகிறது. ஐ.பி.எல் தொடரில் ஒரு பந்து வீசப்பட்டால், பி.சி.சி.ஐ கணக்கில் 23.3 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும். 

ஸ்டார் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்த முறை எப்படியாவது ஐ.பி.எல் தொடரை வாங்கிவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தது. ஏனென்றால், இந்தியாவில் தொலைக்காட்சி வழியாக  விளையாட்டுப் போட்டிகளைக் காண மக்களிடையே அதீத ஆர்வம் பெருக்கெடுத்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள் தொழில்முறையாக மாறிவருவதே இதற்கு முக்கியக் காரணம். இந்தியாவில் 67 கோடி பேர் வீட்டில் தொலைக்காட்சி இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் தொலைக்காட்சியில் விளையாட்டுப் போட்டிகளைக் காண்பவர்களின் எண்ணிக்கை 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 

ஸ்டார் நிறுவனம்தான் இந்தியாவில் முக்கியமான விளையாட்டுத் தொடர்களை ஒளிபரப்பும் உரிமத்தைப் பெற்றுள்ளது. ஐ.எஸ்.எல் கால்பந்து, ப்ரோ லீக் கபடித் தொடர், பேட்மின்டன், டென்னிஸ் தொடர்கள் தவிர, பி.சி.சி.ஐ நடத்தும் சர்வதேசப் போட்டிகளுக்கான உரிமையை 2012-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 3,851 கோடி ரூபாய்க்கு இந்த நிறுவனம்தான் பெற்றிருக்கிறது.

ஸ்டார்

ஐ.சி.சி நடத்தும் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை டி20, 19 வயது உட்பட்டோருக்கான உலகக்கோப்பை டி20 போட்டிகளின்  உரிமங்களும் ஸ்டார்வசம்தான் இருக்கின்றன. இவைபோக புகழ்பெற்ற கார்பந்தயமான எஃப்-1, ஜெர்மன் பண்டல்ஸ் லீகா , ஸ்பானீஷ் லீக் போன்ற கால்பந்து தொடர்களும் ஸ்டார் வசம்தான்.

பட்டியலில் ஐ.பி.எல் மட்டும்தான் மிஸ்ஸாகியிருந்தது.  விடுமுறைக் காலத்தில் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றிருந்த ஐ.பி.எல் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பை ஸ்டார் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுதான் இருந்தது. விஷயம் தெரியாமல் சோனி டெண்டரை குறைந்தத் தொகைக்குக் கேட்க, ஸ்டார்  தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமம் என ஒட்டு மொத்தமாகக் கைப்பற்றிக்கொண்டது. ஆக, இந்தியாவில் 76 சதவிகித விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை, ஸ்டார் நிறுவனம் பெற்றிருக்கிறது. விளையாட்டு ரசிகர்கள் 85 சதவிகிதம் பேர் ஸ்டார் தொலைக்காட்சியை மட்டும்தான் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

`தொலைக்காட்சிப் பார்வையாளர்களில், கிராமப்புறங்களில் வார இறுதியில் விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 45 சதவிகிதமாக உயர்ந்துள்ளது' என BARC  தெரிவித்துள்ளது. ஆன்லைன் வழியாக கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பவர்களும் 60 சதவிகிதம் அதிகரித்திருக்கின்றனர். குறிப்பாக, 13 வயது முதல் 35 வயது வரையுள்ள பார்வையாளர்கள் இவர்கள். இந்த வயதினருக்கேற்ற விளம்பரங்கள்தான் ஸ்டார் டிவி-யில் அதிகம் ஒளிபரப்பாகின்றன. 

ஹாட் ஸ்டார், ஸ்டார் நிறுவனத்தின் ஆன்லைன் பகுதி. 2015-ம் ஆண்டு நான்கு கோடி பேர் ஹாட் ஸ்டாரைப் பயன்படுத்தினர். 2016-ம் ஆண்டு, இது 10 கோடியாக அதிகரித்தது. குறிப்பாக, பெண்கள் 41 சதவிகிதம் பேர் ஹாட் ஸ்டார் வழியாக கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கின்றனர் என்பது கூடுதல் தகவல். ஐ.பி.எல்-லின் ஒரு தொடருக்கு 2,050 கோடி ரூபாய் விளம்பர வருவாய் ஈட்ட, ஸ்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல் தொடருக்குள் ரீஎன்ட்ரி ஆவதால், விளம்பர வருவாய்க்குப் பஞ்சமிருக்காது என ஸ்டார் நிறுவனம் நம்புகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்