பல வருடங்களாக 'நீட்'டுக்காக போராடாத தமிழக அரசு, சில நாள்களில் 1,700 மதுக்கடைகளை திறந்த அதிசயம்! | The government was openly fighting to reopen TASMAC with the NEET issue on the go!

வெளியிடப்பட்ட நேரம்: 21:32 (05/09/2017)

கடைசி தொடர்பு:12:31 (06/09/2017)

பல வருடங்களாக 'நீட்'டுக்காக போராடாத தமிழக அரசு, சில நாள்களில் 1,700 மதுக்கடைகளை திறந்த அதிசயம்!

'ஒரு முட்டாள் அரசன் மக்களை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருப்பான்' என்பது சிறப்புமிக்க கூற்று. தமிழகத்தின் நிலைமையும் தற்போது அப்படித்தான். எண்ணற்ற பல பிரச்னைகளை உருவாக்கி தமிழக மக்களை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருக்கிறார்கள் தமிழக அரசியல்வாதிகள். தங்களது உரிமைகளைக் காக்க தமிழக மக்கள் தங்கள் வாழ்க்கையே போராட்டக் களமாக மாற்றியுள்ளனர். இதில் நெடுங்காலமாக நடந்துவரும் ஒரே போராட்டம் மதுவிலக்குப் போராட்டம்தான். மதுவிலக்குக்கு எதிராக நடந்த போராட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் செவிசாய்க்கும்விதமாக, கடந்த 2016-ம் ஆண்டு 'தேசிய, மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் இருக்கும் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்' என்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தமிழ்நாட்டில் மதுக்கடைகள் அகற்றப்பட்டன. தற்போது இந்த அறிவிப்பில் உச்ச நீதிமன்றம் சில திருத்தங்களைச் செய்துள்ளது. இந்தத் திருத்தம் வந்ததுதான் தாமதம்... இதற்காகவேக் காத்துக்கிடந்த தமிழக அரசு, இந்த அறிவிப்பால் மனப்பூர்வ மகிழ்ச்சியடைந்து மூடப்பட்ட மதுக்கடைகளையும், புதிய மதுக்கடைகளையும் அசுர வேகத்தில் திறந்து வருகிறது. இந்த முழு வேக மதுக்கடைகள் திறப்பினை நீட் தேர்வுக்கு எதிரான அனிதாவின் (தற்)கொலைச் (01-09-2017 ) சம்பவ நாளிலிருந்து தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. தற்போது அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டியும், நீட் தேர்வுக்கு எதிராகவும் மக்களும், கல்லூரி மாணவர்களும் பெரும் பங்களிப்புடன் போராடிவருகின்றனர். இந்த நேரத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசு, தமிழக மக்களின் முதுகில் கூரிய மதுபாட்டில்களைக் கொண்டு ஓங்கிக் குத்தியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஓரங்களில் 500 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் அனைத்து மதுக்கடைகளும் 1-4-2017 தேதிக்குள் மூடப்படவேண்டும். மேலும் 31-03-2017-ம் தேதிக்குப் பிறகு பழைய கடைகளுக்கான உரிமங்களைப் புதுப்பிக்கக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த 3000-க்கும் அதிகமான மதுக்கடைகள் அகற்றப்பட்டன. கூடவே, மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட நெடுஞ்சாலைகளாகக் காண்பித்து மதுக்கடைகளைக் காப்பாற்றும் முயற்சியோடு, கிராமப் புறங்களில் புதிதாக மதுக்கடைகளைத் திறந்தும் கணக்கை சரிக்கட்ட முயன்றது தமிழக அரசு. இதனால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமானது. ஆனால், அதைப்பற்றிக் கவலைப்படாமல், அனைத்து மதுக்கடைகளையும் திறப்பதற்கு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இதையடுத்து, 'உச்ச நீதிமன்றம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஓரங்களில் இருக்கும் மதுக்கடைகள் அகற்றப்படுதல்' தொடர்பாக சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. அதில், 'நகரங்களுக்கு இடையே இருக்கும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடச் சொல்லவில்லை. மேலும், 20,000-க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் அருகே அமைந்துள்ள நெடுஞ்சாலைகளிலிருந்து 220 மீட்டர் தொலைவில் இருக்கும் மதுக்கடைகளை மூடினாலே போதுமானது' என்றும் தீர்ப்பில் திருத்தம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பெரும் மகிழ்ச்சி அடைந்த தமிழக அரசு மூடப்பட்ட மதுக்கடைகளில், 1700 மதுக்கடைகளை உடனடியாக அசுர வேகத்தில் திறந்துள்ளது. இதனால் கோபமடைந்த மக்கள் கடந்த 3 தினங்களாக பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகளை அடித்து நொறுக்கி வருகின்றனர். இதைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்போடு மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் இந்தக் கேவலமான செயலைப் பற்றி மதுவிலக்குக்காக பல ஆண்டுகளாகப் போராடிவரும் வழக்கறிஞர் பாலு கூறியதாவது, "1-4-2017-க்குப் பிறகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த மதுக்கடைகள் அகற்றும் பணி துரிதமாக நடந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3321 மதுக்கடைகள் அகற்றப்பட்டன. இதில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள், ஸ்டார் ஹோட்டல்ஸ், கிளப் போன்றவற்றில் இருந்த மதுக்கடைகள் அனைத்தும் அடக்கம். 'உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பில், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும்' என தமிழக அரசு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. ஆனால், அம்மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேபோல ஹோட்டல், ஸ்டார் ஹோட்டல்ஸ், கிளப்-களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்கள் வழக்கு தொடுத்திருந்தார்கள். அந்த வழக்கையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், சண்டிகர் மாநில மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைகளை, மாவட்ட நெடுஞ்சாலைகளாக மாற்றக்கோரி சண்டிகர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கில், 'மாநில நெடுஞ்சாலைகளை, மாவட்ட நெடுஞ்சாலைகளாக மாற்றிக்கொள்ளலாம்' என சண்டிகர் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மது எதிர்ப்பாளர்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். அங்கு, 'மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட நெடுஞ்சாலைகளாக மாற்றிக்கொள்ள சண்டிகர் நீதிமன்றம் சொன்னது சரிதான். இது அனைத்து மாநிலத்துக்கும் பொருந்தும்' என கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி அறிவித்தது. அந்த அறிவிப்பை ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றினார்கள். இந்தத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து, மூடப்பட்ட மதுக்கடைகள், புதிய மதுக்கடைகளைக் கடந்த 1-ம் தேதியிலிருந்து திறந்து வருகிறது தமிழக அரசு. அதுமட்டுமல்லாமல், ஸ்டார் ஹோட்டல்ஸ், கிளப், போன்றவற்றுக்கு வழங்கப்படும் FN1-லிருந்து FN11 வரையிலான லைசென்ஸ்களையும் தமிழக அரசு உடனடியாக வழங்கிவிட்டது. இதனால், ஹோட்டல்ஸ், ஸ்டார் ஹோட்டல்ஸ், கிளப் போன்றவையும் திறந்துவிட்டார்கள்.

சண்டிகரில், 'மாநில நெடுஞ்சாலைகளை மட்டும்தான் மாவட்ட நெடுஞ்சாலைகளாக மாற்ற வேண்டும்' என உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். அதன்பின் தமிழக அரசு,  மாநில நெடுஞ்சாலைகள் மட்டுமல்லாமல், தேசிய நெடுஞ்சாலைகளையும், மாவட்ட நெடுஞ்சாலைகளாக மாற்ற ஒரு சுற்றறிக்கையை உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பியது. தமிழக அரசின் இந்த சுற்றறிக்கை என்பது, சண்டிகர் மாநிலத்தினர் தொடுத்த வழக்குக்கு உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்வதற்கான முயற்சியாகும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, பல இடங்களிலும் தமிழக அரசு மதுக்கடைகளைத் திறந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், மக்கள் எதிர்ப்பு குறைவாக உள்ள இடங்களிலும் புதியக் கடைகளைத் திறந்து வருகிறது. கடந்த 1-ம் தேதியே 1,700 கடைகளைத் தமிழக அரசு திறந்துவிட்டது. அதன்பின் இன்று வரையான இடைப்பட்ட காலங்களில் தினம், தினம் 50-க்கும் மேற்பட்ட கடைகளைத் திறந்து வருகிறது. தமிழக அரசு இப்படி ஒரு கேவலமான செயலைச் செய்யும் என்று சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை'' என்று நொந்துகொண்டவர், தொடர்ந்து பேசும்போது, ''இதுதொடர்பாக கடந்த 4-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். வருகிற 8-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது" என்று கூறினார்.

மக்கள் புரட்சி எத்தகைய கொடூர சர்வாதிகாரத்தையும் தகர்க்கும் வல்லமைகொண்டது என்பதை எடப்பாடி பழனிசாமி அறிந்திருக்கவில்லை போலும். அதனால்தான் அவர் எப்போதும் மக்களுக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்!


டிரெண்டிங் @ விகடன்