வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (05/09/2017)

கடைசி தொடர்பு:22:30 (05/09/2017)

நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் - வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்!

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவி அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் நுழைவுத் தேர்வு முறைக்கு முற்றுப் புள்ளி வைக்க வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் இளைஞர்கள்.

பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் தன்னெழுச்சியாகவும், அரசியல் இயக்கங்களாகவும் ஒன்றிணைந்து நீட் தேர்வு முறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதம், சாலை மறியல், ரயில் மறியல் என்று போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்க, மாவட்டத்தில் இயங்கி வரும் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்களும், உடுமலைப் பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் இன்று வகுப்புகளை புறக்கணித்து நீட்டுக்கு எதிராக உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினர். அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்கும் வகையில் முழக்கங்களை எழுப்பியும், மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனங்களை தெரிவித்தும் போராட்டக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.