இறுதிவரை போராடினோம்; ஆனால்...? - நீட் குறித்து முதல்வர் பழனிசாமி பேட்டி

'நீட்டைப் பொறுத்தவரைக்கும் தமிழகத்தில் மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம்' என்று கூறிய முதல்வர் பழனிசாமி, 'உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகம் செயல்படக்கூடிய அளவுக்குத் தள்ளப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

ஈரோட்டில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, உங்கள் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் அரசுக்கு ஆதரவளிக்கவில்லையா? அரசுக்குப் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த முதல்வர், 'பல்வேறு காரணங்களுக்காக சிலபேர் வரவில்லை. பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு அரசுக்கு உள்ளது' என்றார்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''நீட்டைப் பொறுத்தவரைக்கும் தமிழகத்தில் மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம். இறுதிவரைப் போராடினோம். உச்ச நீதிமன்றத்திலே நமக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகம் செயல்படக்கூடிய அளவுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறினார்.

போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மாணவர்களுக்கு வேண்டுகோள் வைப்பீர்களா என்ற கேள்விக்கு, இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அனைத்து ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் நன்கு தெரியும். ஒரு தீர்ப்பின் மீது எப்படி நடக்க வேண்டும் என்று உங்களுக்குத் (பத்திரிகையாளர்கள்) தெரியும் என்று பதில் அளித்தார்.

எதிர்வரும் காலத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்துவீர்களா என்ற கேள்விக்கு, தமிழக அரசைப் பொறுத்த வரைக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றுதான் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என்று முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!