Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘உங்களுக்கு சமைக்கத் தெரியுமா?’ மாதம் 12 ஆயிரம் சம்பாதிக்க வழிகாட்டும் ஃப்ரம் எ ஹோம்

ஃப்ரம் எ ஹோம்

‘சென்னைக்கு வேலை தேடி வருபவர்களும் சரி, வேலையில் சேர்ந்ததும் நண்பர்களுடன் சேர்ந்து தங்குபவர்களும் சரி, அவர்களின் முக்கிய கவலை, 'வீட்டுச் சாப்பாடு கிடைக்குமா?' என்பதே. அவர்களை மனதில்வைத்து, 'ஃப்ரம் எ ஹோம்'' (From a home) பிசினஸை மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திவருகிறார், சென்னை, மேடவாக்கத்தைச் சேர்ந்த வினோத் சுப்ரமணியன். 

''சென்னைக்கு வந்து கை நிறைய சம்பாதித்தாலும், பலருக்கு சாப்பாட்டுப் பிரச்னை பெரியதாக இருக்கும். இன்னொரு பக்கம், வீட்டிலிருந்தவாறு வருமானத்துக்கு வழி பார்க்க முடியுமா எனக் காத்திருக்கும் இல்லத்தரசிகள். இந்த இரண்டு தரப்பையும் மனதில் வெச்சுத்தான் 'ஃப்ரம் எ ஹோம்' ஐடியாவைக் கையில் எடுத்தேன். இந்த முயற்சிக்காக, சில இல்லத்தரசிகளைப் பல கட்ட தேர்வுக்குப் பிறகு தேர்ந்தெடுத்தேன். அவங்க வசிக்கும் ஏரியா, அவங்களுக்கு சமைக்கத் தெரிந்த உணவு வகைகள், சமைக்க முடிந்த அளவு, சமைக்க ஏதுவான நேரம் எல்லாம் கேட்டு வாங்கி, எங்க வெப்சைட்டில் பதிவிடுவோம். கஸ்டமர்கள், இதில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வுசெய்து, 'வீட்டுச் சாப்பாடு' மீல்ஸ் டெலிவரி பெறலாம்'' என்றவர் தொடர்கிறார். 

வினோத் சுப்ரமணியன்''முதல் வேலையா, 'கைப்பக்குவம்' உள்ள இல்லத்தரசிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக, களத்தில் இறங்கினோம். கேட்டரிங்கில் விருப்பமுள்ள இல்லத்தரசிகளைத் தொடர்புகொள்ளச் சொல்லி, லோக்கல் ஏரியாக்களில் பிட் நோட்டீஸ் கொடுத்தோம். முன்வந்தவங்களை எல்லாம் தேர்ந்தெடுக்கறதில்லை. அவங்க வீட்டு கிச்சனின் சுத்தத்தைப் பார்வையிட்டு, அவங்களின் உணவு வகைகளை ருசிச்சுப் பார்த்து, அப்புறம்தான் ஆர்டர் கொடுப்போம். ஆரம்பத்தில் இதைச் செய்வதில் பல சவால்கள் இருந்துச்சு. ஆனாலும், எங்கள் முயற்சி வீண் போகலை. ஆரம்பத்தில் இல்லத்தரசிகளுக்கு முன்பணமா 1,000 ரூபாய் கொடுத்து, தினமும் நீங்க உங்க வீட்டுக்குச் சமைக்கிற சாப்பாட்டையே, இன்னும் ரெண்டு அல்லது நாலு பேருக்குச் சேர்த்து சமைங்க, அவ்வளவுதான்'னு சொன்னோம். கேட்டரிங் பக்கம் போகாம, வீடு வீடா தேடிவரக் காரணமே, வீட்டுச் சாப்பாடு என்ற ருசி, சுகாதாரம் மற்றும் செயற்கைப் பொருள்கள் சேர்க்காத ஆரோக்கியத்துக்காகத்தான் என்பதை எடுத்துச் சொன்னோம். வீட்டு உறுப்பினர்களுக்குச் சமைக்கிற அந்த அக்கறை இதிலும் இருக்கணும்னு புரியவெச்சோம்'' என்கிறார் வினோத். 

இந்த வெப்சைட்டை ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகின்றதாம். ஆரம்பித்த ஐந்து மாதத்துக்குள் பேக்கிங், ஆர்டர், டெலிவரிக்கு என 10 பணியாளர்கள் டீம், 200 இல்லத்தரசிகள், நூற்றுக்கும் மேற்பட்ட கஸ்டமர்கள் என்கிற இலக்கைப் பூர்த்திசெய்துள்ளார்கள். 

''சென்னையில் உள்ள பல ஏரியாக்களுக்கு எங்கள் சேவையைக் கொண்டுபோகணும் என்பதுதான் எங்கள் எண்ணம். இப்போதைக்கு மேடவாக்கம், சோழிங்கநல்லூர், கீழ்கட்டளை, மடிப்பாக்கம், சந்தோஷபுரம், வேளச்சேரி, துரைப்பாக்கத்தில் உள்ள இல்லத்தரசிகளை மட்டும் எங்க வெப்சைட்டில் இணைச்சிருக்கோம். மெனுவைப் பொறுத்தவரை காலையில் இட்லி, தோசை, பொங்கல், பூரி, ஊத்தப்பம், மதியம் சைவ, அசைவ உணவு வகைகள், இரவு உணவாகச் சப்பாத்தி, இடியாப்பம் என ஒவ்வொரு இல்லத்தரசியும் அசத்துறாங்க. ஆர்டருக்கு ஏற்ப அவங்க சமைத்ததை, நாங்க கொடுக்கும் பேக்கிங் செட்ல பேக் செய்து வெச்சுட்டா போதும். எங்க டீம் அதைப் பெற்று, கஸ்டமருக்கு சுடச்சுட டெலிவரி கொடுத்துடுவாங்க. எட்டு முதல் 15 சதவிகிதம் கமிஷன். இப்போ, எங்க டைஅப்ல இருக்கும் ஒவ்வொரு இல்லத்தரசியும் மாதம் 10,000 முதல் 12,000 ரூபாய் லாபம் பார்க்கிறாங்க. கஸ்டமர்களுக்கும் ருசியான உணவும் மனத்திருப்தியும் கிடைக்குது. இப்போதைக்கு வெப்சைட், ஃபேஸ்புக் என்ற அளவில்தான் எங்க தொழில் இயங்குது. இதைச் சென்னை முழுக்க கொண்டுவருவதுதான் அடுத்த திட்டம்!’’ என்றார் வினோத் சுப்ரமணியன் நம்பிக்கையுடன். 

ஃப்ரம் எ ஹோமில் இணைந்துள்ள பணியாளர் முத்துக்குமார், ''எம்.காம் முடிச்சிருக்கேன். இந்தத் தொழிலின் புதுமையான ஐடியாவும், எதிர்கால உத்தரவாதமும் பிடிச்சு, வேலைக்குச் சேர்ந்துட்டேன். பேக்கிங் அண்டு டெலிவரி என்னோட வேலை. கஸ்டமர்களின் மெனு லிஸ்ட் இரண்டரை மணி நேரத்துக்கு முன்னாடி என் கைக்கு வந்துடும். ஒவ்வொரு வீட்டிலும் சமைச்ச உணவை 10 நிமிஷத்துக்குள்ளே டெலிவரி செஞ்சுடுவேன்'' என்றார். 

சந்தோஷபுரத்தைச் சேர்ந்த இல்லத்தரசி ரத்னா வெங்கடேசன், ''கன்னிமாரா ஓட்டல்ல சூப்பர்வைசரா இருக்கிற என் வீட்டுக்காரருக்குச் சமையல் ருசியா இருக்கணும். அவர் ஒவ்வொரு சமையலிலும் சில மாற்றங்களை செய்யச் சொல்வார், அப்படியே செய்து, நானும் இப்போ சமையலில் எக்ஸ்பர்ட் ஆயிட்டேன். 'ஃப்ரம் எ ஹொம்' விளம்பரம் பார்த்துப் பேசினேன். அவங்க வீட்டுக்கு வந்து கிச்சனைப் பார்த்துட்டு, என் சமையல் பத்தி கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, 'ஓ.கே' பண்ணினாங்க. ஹோட்டலா இருந்தா, இன்னும் கொஞ்சம் சாம்பார், ரசம், சாதம்னு கேட்டு வாங்கிச் சாப்பிடுவாங்க இல்லியா? அதனால், எப்பவும் எல்லாத்தையும் கொஞ்சம் அதிகமாவே பேக் பண்ணுவேன். கஸ்டமர்கிட்ட நல்ல ஃபீட்பேக் வாங்கிய சந்தோஷமே, அடுத்த நாளுக்கு உற்சாகமா காய்கறி பட்டியல் போடவைக்கும்.'' என்றார் மகிழ்ச்சியாக. 

கஸ்டமர்களில் ஒருவரான பாலாஜி, ''முதலில் ஒரு டிரையல் மாதிரி இட்லி, பொங்கல்தான் ஆர்டர் பண்ணினேன். அவங்களின் பேக்கிங், டெலிவரி, ருசி என எல்லாம் பிடிச்சிப்போக, ரெகுலர் கஸ்டமர் ஆகிட்டேன். சைவம், அசைவம் என எது ஆர்டர் பண்ணினாலும் சூப்பரா கிடைக்குது. ஐ.டி கம்பெனியில் வேலைபார்க்கும் பேச்சிலரான எனக்கு, இப்போ தினம் தினம் வீட்டுச் சாப்பாடுதான். கேஷ் ஆன் டெலிவரியில் ஆரோக்கியமா சாப்பாடு கிடைச்சா விடலாமா'' என்றார் திருப்தியுடன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close