Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'போராட்டம் நடத்துவதால் புரட்சி ஏற்படாது' - ஜக்கி வாசுதேவ்

“ 'போராட்டம் நடத்துவதால் புரட்சி ஏற்படாது' என நதிகளை மீட்போம் பயணம் மேற்கொண்டுள்ள, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு. ஜக்கி வாசுதேவ் திருச்சியில் பேசினார்.

ஜக்கி வாசுதேவ்

“நதிகளை மீட்போம்” எனும் முழக்கத்துடன் தேசிய அளவிலான விழிப்புஉணர்வு பேரணி பயணத்தைக் கடந்த 1-ம் தேதி ஈஷா யோகா மையத்தின் சார்பில் கோவையில் தொடங்கியது. ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தலைமையில் தொடங்கியுள்ள இந்தப் பயணத்தில், சுமார் 7,000 கிலோமீட்டர் காரை ஓட்டிச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பிரசார வாகனங்கள் திருச்சி வந்தடைந்தன. இன்று திருச்சி காவிரிக்கரை, ஓயாமாரி சுடுகாடு அருகே உள்ள ஆர்.டி.ஓ அலுவலகம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.பி., குமார், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், முன்னாள் சி. பி.ஐ சிறப்பு இயக்குநர் கார்த்திகேயன், தூய வளனார் கல்லூரி அதிபர் அருட்தந்தை முனைவர் லெனார்டு பெர்னான்டோ, விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் ஈஷாவின் தன்னார்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,

“காவிரி ஆற்றை வணங்கும் விதமாகப் பல்வேறு விழாக்கள் திருச்சியில் நடைபெறும். நீர்ப் பங்கீட்டில் அண்டை மாநிலங்களில் சகோதரத்துவம் குறைந்துவருகிறது. மரக்கன்றுகள் நட்டதற்குத்தான் வரலாறு உள்ளது. ஆனால், வளர்ந்ததற்கான வரலாறு இல்லை. நதிகளைப் பாதுகாக்க ரியல் எஸ்டேட், ஆற்றில் மணல் எடுப்பதை எந்த அரசானாலும் சில காலம் நிறுத்த வேண்டும். சத்குரு ஜக்கி வாசுதேவ் சுவாமிகள், முன்னெடுக்கும் விஷயங்களுக்கு அரசு துணை நிற்கும்” என உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய ஜக்கி வாசுதேவ்,

“நம்மாழ்வார் இருந்திருந்தார்னா நான் இப்படிச் சுற்றவேண்டிய அவசியமில்லை. அவரே நதிகள் இணைப்புக்குப் போராடியிருப்பார். நம்மாழ்வார் நமது மையத்திற்கு வந்தபோது, பசுமைக் கரங்கள் குறித்து கடந்த 20வருடங்களுக்கு முன்பே, என்னிடம் இந்த விசயத்தை நீங்க எடுத்தாதான் முடியும், உங்களால்தான் இந்தத் திட்டத்தை திறம்படச் செய்ய முடியும் என்றார்.

நாம் விஞ்ஞானபூர்வமாக செயலாற்றவேண்டிய தருணத்தில் உள்ளோம். நதிகள் இணைப்பு விசயத்தில் அரசாங்கத்தின் துணை இல்லாமல் நாம் நினைப்பதை அடைய முடியாது.

நம் மனசுல அரசாங்கத்துக்கும் அரசியலுக்கும் ஒரு வித்தியாசம் இருக்குனு புரிந்துகொள்ள வேண்டும். ஏதாவது பிரச்னை வந்தால் மற்றவர் மீது பழி சுமத்துவதால், அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது.

தேர்தல் வரும்போது எந்தப் பார்ட்டியோ எப்படியோ சப்போர்ட் பண்ணிக்கலாம், இது ஜனநாயகம். ஆனால், 5 வருஷம் அரசியல் மட்டுமே நடத்தினால், அரசாங்கம் நடக்காது. அரசாங்கம் நடக்காம இருக்கறதால எந்த ஒன்றுக்கும் தீர்வு கிடைக்காமல் இருக்கு. அதனாலதான் சண்டை போட்டுக்கறத விட்டுவிட்டு அரசாங்கம் நடத்துறதுல கவனம் செலுத்த வேண்டும். 5வருஷம் அரசியல் நடக்காமல், அரசு நடக்க வேண்டும், போராட்டம் நடத்துவதால் புரட்சி ஏற்படாது.

10 வருடங்களுக்கு முன் 16.05 சதவிகித பசுமைப் போர்வை இருந்தது. தற்பொழுது 30 சதவிகிதம் இருக்க வேண்டும் என்றால், 11 கோடி மரங்கள் நட வேண்டும். நதிகளை மீட்பது என்பது மக்கள் இயக்கமாக மட்டுமன்றி சட்டமாக இயற்றப்பட வேண்டும்.

மேலும், தற்போது விவசாயத்தை மேம்படுத்துவதற்கான அதிநவீன தொழில்நுட்பங்கள் பல்கலைக்கழகத்தினுள் மட்டுமே உள்ளது. அவற்றை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது, தாய் மண் என அழைக்கப்பட்டது நம்மில், மண்ணை உயிராக வைத்துக்கொள்ளணும், விவசாயம் என்னன்னு தெரியாத உலகத்தில் நாம், விவசாயம் செய்த பூமி இது. 11 கோடி மரம் வைத்தால், 15வருஷத்தில் 33 சதவிகிதம் நிழல் நமக்குக் கிடைக்கும். நிழலால் சூழப்பட்ட மண்ணுக்கும், நிழலற்ற மண்ணுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

'பசுமைக் கரங்கள் திட்டம்' மூலம் இதுவரை 3.2 கோடி மரங்களை நட்டுள்ளோம். ஆனால், இந்த முயற்சியில் நான் கற்றுக்கொண்டது, பெரிய அளவில் மாற்றம் நடக்க இதுபோன்ற தன்னார்வத் தொண்டு முயற்சிகள் மட்டும் போதாது. அரசாங்கமே இதைக் கையில் எடுத்தால்தான் இது நடக்கும். பிரச்னையைப் பேசிப்பேசி ஒன்றும் பிரயோஜனம் இல்லை. நமது ஒரே நோக்கம் தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்கள் ஒன்று சேர்ந்து நதிகளை மீட்போம்...பாரதம் காப்போம்” என்றார்.

இந்தக் கோரிக்கைகள் தயார் செய்யப்பட்டு, அது அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும், இந்தப் பயணம் 16 மாநிலங்கள் வழியாக வருகின்ற அக்டோபர் மாதம் 2 -ம் தேதி, புது டெல்லியில் நிறைவுபெறும்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement