வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (06/09/2017)

கடைசி தொடர்பு:21:00 (06/09/2017)

பேனா முனைக்குத் துப்பாக்கியால் பதிலடியா? #RIPGauriLankesh

கன்னட இதழியலின் தலையெழுத்தையே மாற்றி அமைத்தவர் லங்கேஷ். புகழ்பெற்ற கன்னடக் கவிஞரும் `கெளரி லங்கேஷ்' பத்திரிகையின் நிறுவனருமான இவரின் மகள்தான் கௌரி லங்கேஷ். தந்தை வழியில் மகளும் இந்துத்துவவாதிகளைத் துணிச்சலுடன் எதிர்த்து எழுதினார். சிறந்த சமூகச் செயற்பாட்டாளராரும் பத்திரிகை உலகின் மிகச்சிறந்த ஆளுமையுமான இவரின் உயிரைப் பறித்தன துப்பாக்கித் தோட்டாக்கள். இந்தப் படுகொலைத் தொடர்பான சந்தேகம் முழுவதும் இந்துத்துவவாதிகளின் பக்கமே திரும்பியுள்ளது. ஏனெனில், சமீபகாலத்தில் மதவாதத்துக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் கொல்லப்படுவதற்கு அவர்களே காரணம் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. 

மிகச்சிறந்த எழுத்தாளரான நரேந்திர தபோல்கர், 2013-ம் ஆண்டு புனேவில் மர்ம ஆசாமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். `சானதன் சன்ஸ்தா' என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த சாரங் அகோல்கர், வினே பவார் என்கிற இருவர்தான் தபோல்கரைச் சுட்டுக்கொன்றதாக புனே நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. டாக்டர் வீரேந்தி தவாடே என்பவர்தான் தபோல்கர் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டார். சானதன் சன்ஸ்தா அமைப்பின் கிளையான `இந்து ஜனஜாக்ரிதி'யின் உறுப்பினர் இவர். தபோல்கர் கொலைக்காக 6,000 ரூபாய் வீரேந்தி தவாடேவுக்கு பரிசாக வழங்கியது இந்த அமைப்பு. கொலைக்குத் திட்டம் வகுத்துக் கொடுப்பவர்களை இப்படி ஊக்கப்படுத்துவது, அந்த அமைப்பின் வாடிக்கை. 

சானதன் சன்ஸ்தா அமைப்பு, 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கோவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்புதான் இந்துத்துவவாதிகளுக்கு நிதியுதவி வழங்குவதாகச் சொல்லப்படுகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது, வெடிகுண்டு வழக்குகளும் உள்ளன. தபோல்கர் கொலை செய்யப்பட்ட பிறகு, இந்த அமைப்பின் தலைமையகத்துக்குள் நுழைந்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அமைப்பின் தலைவர் ஜெயந்த் அத்வாலேவையும் விசாரித்தனர். எந்தப்  பலனும் இல்லை.

குற்றவாளிகள், 119 வங்கிக் கணக்குகள் வைத்துள்ளனர். தபோல்கரைச் சுட்டுக் கொன்ற பிறகு, 169 பேரைத் தொடர்புகொண்டு சாரங் அகோல்கர், வினே பவார் ஆகியோர் பேசியுள்ளனர். நரேந்திர தபோல்கரைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் இவர்கள்தான், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கோவிந்த் பன்சாரேவையும் சுட்டுக் கொன்றனர். 2015-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி, கோலாப்பூரில் நடைப்பயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கோவிந்த் பன்சாரே சுடப்பட்டார். 

சாரங் அகோல்கர், வினே பவார் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பிடிபடவில்லை. சானதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த சமீர் கெய்க்வாட் கைது செய்யப்பட்டு, பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

சுட்டுக் கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ்

ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் மிகச்சிறந்த எழுத்தாளருமான கல்புர்கி, 2015-ம் ஆண்டு கொல்லப்பட்டார். கர்நாடக மாநிலம் தார்வாரில் கல்புர்கி வசித்து வந்தார். 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி காலை 9 மணியளவில் இவரது வீட்டின் கதவைத் தட்டினர் கொலையாளிகள். அவரின் மனைவி கதவைத் திறந்தபோது கல்புர்கி அங்கே வர, முகத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் கல்புர்கி. இவரது வழக்கிலும் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை.

இந்த மூன்று கொலைகளுக்கும் சானதன் சன்ஸ்தா அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுதவிர, பன்வெல், தானே, வாஷி, மட்கோவா நகரங்களில் குண்டு வைத்த வழக்கும்  இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது இருக்கிறது. மஹாராஷ்ட்ராவில், இந்த அமைப்புக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். . 

தவனகரேவைச் சேந்த இளம் எழுத்தாளர் ஹஞ்சாங்கி பிரசாத், கடந்த ஆண்டு இந்து மதத்தின் சாதியக் கோட்பாடுகளைக் கடுமையாகச் சாடி புத்தகம் எழுதியிருந்தார். தவனகரே பல்கலை மாணவரான இவர், தலித் பிரிவைச் சேர்ந்தவர். 2015-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி, பிரசாத் தங்கி இருந்த விடுதிக்கு வந்த இருவர், அவரின் தாயார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். விடுதியிலிருந்து ஏமாற்றி அழைத்து வந்து, இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவரை அடித்து உதைத்தனர். பிரசாத் முகத்தில் குங்குமத்தைத் தூவியதோடு, `இந்து மதத்தைப் பற்றி இனிமேல் எழுதினால், விரல்களைத் துண்டித்துவிடுவோம்' என எச்சரித்தனர்.

இத்தகைய தொடர் நிகழ்வுகளின் அடிப்படையில்தான், `கௌரியின் கொலையும் இந்துத்துவவாதிகளின் செயலாக இருக்குமோ!' என்ற சந்தேகம் எழுகிறது. 

`கெளரி லங்கேஷ்' பத்திரிகை ஆசிரியராக, சங் பரிவார் அமைப்புகளையும் நாட்டில் ஏற்படும் மதக்கலவரங்கள் குறித்தும் தொடர்ச்சியாக விமர்சித்து எழுதியவர் கௌரி லங்கேஷ். 2008-ம் ஆண்டு 'லங்கேஷ்' பத்திரிகையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தார்வார் எம்.பி பிரல்ஹாத் ஜோஷி, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் உமேஷ் துஷி ஆகியோர் பற்றிக் கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதினார். கௌரி மீது அவர்கள் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தனர். ஆதாராமில்லாமல் எழுதியுள்ளதாக நீதிமன்றம் சொன்னது. கௌரிக்கு ஆறுமாத சிறைத்தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

நீதிமன்றத் தீர்ப்பு கௌரி லங்கேஷின் நடவடிக்கைகளைக் கொஞ்சமும் பாதிக்கவில்லை. தொடர்ச்சியாகத் தன் எழுத்தால் இந்துத்துவவாதிகளைத் துளைத்தெடுத்துக்கொண்டுதான் இருந்தார். அதற்கான எதிர்விளைவுதான் கௌரியின் மரணமோ?

''தோட்டாக்கள் தீரும் வரை எழுதித் தீர்ப்போம். எழுதுகோல் உங்களை அச்சுறுத்தினால் பீரங்கிகளைக் கொண்டு வாருங்கள். எழுதும் கரங்களையெல்லாம் ஓர் இடத்தில் அடைத்து அணுகுண்டு வீசுங்கள். துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பின்பும் வீரியமிக்க எழுத்துகள் முளைத்துக்கொண்டுதான் இருக்கும்!''

கௌரி அடிக்கடி உதிர்க்கும் வார்தைகள் இவை. அவை கௌரிக்குப் பின்னும் காலத்தில் நிலைத்துநிற்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்