2 மணி நேர பரோலில் வந்தார் நடிகர் திலீப்!

கேரளாவில், மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனில் உள்ளிட்ட சிலர்  கைதுசெய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜாமீன் கேட்டு இரண்டு முறை திலீப், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், மனுக்கள் தள்ளுபடிசெய்யப்பட்டன. இந்த நிலையில், சிறையிலிருக்கும் திலீப்பை, அவரது மனைவி காவ்யா மாதவன் மற்றும் அவரது மகள் ஆகியோர் சென்று பார்த்து வந்தனர். இந்தத் தகவல் வெளியானதும், பல நடிகர்கள் வரிசையாக, நடிகர்  திலீப்பை ஆலுவா சிறைக்குச் சென்று பார்த்து வந்தனர். பிரபல நடிகர் ஜெயராம் திலீப்பைச் சந்தித்தார். அவர் பேசும்போது, ''ஒவ்வோர் ஆண்டும் ஓணம் பண்டிகையின் போது திலீப்புக்கு நான் ஓண கோடி பரிசளிப்பது வழக்கம். திலீப் தற்போது சிறையிலிருந்தாலும் அந்தப் பழக்கத்தை நான் விட விரும்ப வில்லை. அதனால், நேரில் சந்தித்துப் பரிசளித்துவிட்டு வந்தேன்'' என்றார். இயக்குநர் ரஞ்சித், கலாபவன் ஷாஜன், ஹரிஸ்ரீ அசோகன், சுரேஷ் கிருஷ்ணா நடிகரும் எம்.எல்.ஏ-வுமான கணேஷ்குமார் ஆகியோரும் மற்ற சில தயாரிப்பாளர்களும் நடிகர் திலீப்பைச் சந்தித்து வந்தனர். மலையாள திரையுலகைச் சேர்ந்தவர்கள்,  நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டபோது, திலீப்பை கடுமையாக விமர்சனம் செய்தனர். அந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. இது, திலீப்பின் எதிர்த்தரப்பினரை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

தீலிப் தந்தையின் நினைவுநாள் இன்று. அதனால், தந்தையின் நினைவு நாள் சடங்குகளில் கலந்துகொள்ள பரோல் கேட்டு நடிகர் திலீப் சார்பில் அங்கமாலி நீதிமன்றத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வரும் 6-ம் தேதி காலை 8 மணி முதல் மணி 10 வரை மொத்தம்  இரண்டு மணி நேரம் திலீப்புக்குப் பரோல் வழங்கியது. ஆலுவா சிறையிலிருந்து திலீப் அனுமதிபெற்றுத் தனது வீட்டுக்கு வந்தார். தந்தையின் நினைவு நாள் நிகழ்ச்சிக்காக போலீஸ் வாகனத்தில் திலீப் அழைத்து வரப்பட்டார். சிறையிலிருந்து திலீப்பின் வீடு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம்தான். திலீப் வருகைக்காக அவரது மனைவி காவ்யா மாதவன் உள்பட குடும்பத்தினர் காத்திருந்தனர். திலீப் வந்து சேர்ந்ததும், தந்தையின் நினைவு நாள் சடங்கு நடக்கும் இடத்துக்கு திலீப்பை அழைத்துச்சென்றனர். ஏற்கெனவே, நிகழ்ச்சியில் யார் பங்கேற்க இருக்கிறார்கள் என்கிற பட்டியலை போலீஸார் கேட்டு வாங்கிய பின்னரே அனுமதித்தனர். அங்கமாலி நீதிமன்றம் திலீப்புக்கு நிபந்தனையில் இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கி இருந்தது. இன்று காலை 8 மணிக்கு ஆலுவா சிறையிலிருந்து வந்த திலீப், 10 மணிக்கு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். வழி நெடுக திலீப்பின் ரசிகர்களும் பொதுமக்களும் திலீப்பைப் பார்க்கக் குவிந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!