தொடர் போராட்டம் காரணமாகக் கல்லூரிகளுக்குக் காலவரையற்ற விடுமுறை?

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கல்லூரி மாணவர்கள் சாலைமறியல் முதல் வகுப்புப் புறக்கணிப்பு, உள்ளிருப்புப் போராட்டம் எனப் பலவகையான போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள். 

கல்லூரி மாணவர்கள்

நீட் தேர்வினால் தனது வாய்ப்பு பறிபோனதால் அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் போராடி வந்த நிலையில் அனிதாவின் தற்கொலைப் போராட்டம் பெரிய அளவில் மாறி இருக்கிறது. 

நேற்றுவரை தமிழக அளவில் அரசுக் கல்லூரி மாணவர்கள் மட்டும் போராடி வரும் வேளையில் இன்று தனியார்க் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் நீட் தேர்விலிருந்து விலக்குத் தர வேண்டும் என்றும், அனிதாவின் மரணத்துக்கு நியாயம் வேண்டும் என்றும் கடந்த மூன்று நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர் போராட்டத்தால் கல்லூரிகளில் வகுப்புகள் நடத்த முடியாமல் ஸ்தம்பித்து வருகின்றன. மேலும், சாலை மறியல் போராட்டம் செய்வதால் அங்கங்கு போக்குவரத்து பிரச்னையும் ஏற்படுகிறது. இதனால் கலை அறிவியல் கல்லூரிக்குக் காலவரையற்ற விடுமுறை வழங்கலாமா என்று தமிழக உயர்கல்வி துறைத் திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகமும் அதன் இணைப்புப் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கத் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து கல்லூரி இயக்க அலுவலகத்தில் விசாரித்தபோது, 'விடுமுறை வழங்குவது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருவதாக'த் தெரிவித்தார்கள். 

2009-ம் ஆண்டு இலங்கைப் படுகொலைக்கு எதிராக முத்துக்குமார் தற்கொலை செய்துகொண்டபோது இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் போராடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!