Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“ ஐ.டி கணினியிலிருந்து குதித்து வயல்வெளிக்குள் புகுந்தேன்!” - இயற்கை விவசாயத்தில் அசத்தும் அர்ச்சனா

போவோமா ஊர்கோலம்...
பூலோகம் எங்கெங்கும்...
ஓடும் பொன்னி ஆறும்... பாடும் கானம் நூறும்... 
காலம் யாவும் பேரின்பம்... காணும் நேரம் ஆனந்தம்....   

சின்னத்தம்பி குஷ்பு வரப்பு மேட்டிலும் வயல்காட்டிலும் துள்ளித்திரிந்து பாடும் இந்தப் பாடல் இப்போதும் எப்போதும் இளைஞர்களின் ஆல்டைம் ஃபேவரைட். சென்னையில் கார்ப்பரேட் நிறுவனத்தின் ஏ.சி அறையில் அமர்ந்து பணிபுரியும் பலருக்கும் இந்தப் பாடலைக் கேட்கும்போது கற்பனையில் கிராமத்து வாழ்க்கைக்குப் பறந்து போய்விடுவார்கள். ஆனால், அர்ச்சனாவோ நிஜத்திலேயே கை நிறைய வருமானத்தோடு கூடிய ஐ.டி வேலையை உதறித்தள்ளிவிட்டு விவசாயத்தின் பக்கம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். 

அர்ச்சனா

“சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில பி.இ ஜியோ இன்பர்மேடிக்ஸ் படிச்சவ நான். பள்ளிக்காலத்திலேயே எனக்கு கம்ப்யூட்டர்னா அலர்ஜி. புதுசா ஏதாச்சும் படிக்கணும் அதே நேரத்துல பெற்றோர்களோட விருப்பத்துக்கு ஏத்த மாதிரி பி.இ படிக்கணும்ங்கிற கட்டாயம் இருந்துச்சு. அந்த நேரத்துலதான் அண்ணா யுனிவர்சிட்டியில பி.இ ஜியோ இன்பர்மேடிக்ஸ் படிப்பை அறிமுகம் செய்தாங்க. உடனே அதுல போய் சேர்ந்தேன். காலேஜ் படிக்கும்போதே என் நண்பர்களோடு சேர்ந்து கிராமப்புறங்கள்ல ஒரு புராஜெக்ட் பண்ணிட்டு இருந்தோம். என் கணவர் ஸ்டாலின் என் வகுப்புத் தோழன்தான். நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அவர் சொந்த ஊர் விருதுநகர் என்பதால் அங்கேயே என்.ஜி.ஓ ஒன்றை ஆரம்பிச்சு ஒரு வருஷம் விருதுநகர்லயே வேலைவாய்ப்பை உருவாக்கத் தொடங்கினோம். 

பள்ளி மாணவர்கள்

அப்பறம் காலேஜ் முடிஞ்சதும் கல்யாணம். திருமணத்திற்குப் பிறகு டி.சி.எஸ்ஸில் வேலை. ரெண்டு வருஷம் அக்ரிமென்ட் என்பதால் பல்லைக் கடித்துக்கொண்டு வேலை பார்த்தேன். இதுவும் பெற்றோர்களுக்காதான். டி.சி.எஸ்ல இருந்து வெளியேறி நேரா விருதுநகர் போயிட்டேன். தொடர்ந்து 2 வருஷம் அங்குள்ள தொழில் முனைவோர்களை எல்லாம் நேரில் கண்டறிந்து அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை பெருக்கிக்கொடுத்தோம். அதோடு, சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது, ஊரணிகளை ஏற்படுத்துவது போன்ற பல வேலைகளைச் செய்தோம். விருதுநகரில் இருந்தாலும் கற்றுக்கொள்வதற்கும், என்னுடைய தொடர்புகளை பெருக்கிக் கொள்வதற்கும் சென்னைதான் வசதியாக இருக்கும் என்பதால் 2015 ல் சென்னை வந்தேன். சுற்றுச்சூழல் மீது ஆர்வம் உள்ளவர்கள், அதை மீட்கப் போராடிக் கொண்டிருப்பவர்களை சென்னைதான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது” 

குழந்தைகள்


என்று சொல்லும் அர்ச்சனா தன் மாமனார் விருதுநகரில் சொந்தமாக வீடு கட்ட ஆசைப்பட்டபோது அதை எகோ ஃபிரெண்ட்லியாக கட்ட வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொடுத்திருக்கிறார்.  மழை நீரானது வீட்டின் உபயோகத்திற்கே பயன்படுமாறும் வீட்டினுள் கிச்சன் கார்டன், மாடித் தோட்டம் போன்றவை இருக்குமாறும் பார்த்துப் பார்த்து அந்த வீட்டைக் கட்டியிருக்கிறார்கள். வீட்டிற்குத் தேவையான 50 சதவீத காய் வகைகளை வீட்டிலுள்ளவர்களே உற்பத்தி செய்திருக்கிறார்கள். அப்படி வீட்டுத் தோட்டத்தில் தினமும் விளையும் காய்கறிகளின் புகைப்படங்களை அர்ச்சனா தினமும் பேஸ்புக்கில் அப்லோடு செய்ய, அவருடைய ஐடியா 'வாவ்' என்று புகழப்பட்டிருக்கிறது. சென்னையிலுள்ள நண்பர்கள் பலரும் ஆச்சரியத்தோடு அர்ச்சனாவிடம் வீட்டுத்தோட்டம் அமைப்பது பற்றி கேட்க, அதையே ஏன் பிசினஸாக ஆரம்பிக்கக்கூடாது என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. 

'பேஸ்புக்தான் எனக்கு பிசினஸ் பண்றதுக்கான ஐடியாவை கொடுத்தது. உடனே 'மை ஹார்வெஸ்ட்' என்ற பெயரில் மாடித்தோட்டம் அமைப்பது, விசேஷ வீடுகளில் கீரைச் செடிகளை கிப்ட்ஸாக தயார் செய்து கொடுப்பது, பள்ளிகளில் கார்டன் அமைப்பது போன்ற பல வேலைகளை முன்னெடுத்தேன். என்னுடைய ஆசையைப் புரிந்து கொண்டு என் முயற்சிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்தார் என் கணவர். இப்படிதான் கணினியிலிருந்து குதித்து வயல் வெளிக்கு வந்தேன்.  இப்போது நான், என் கணவர், அவருடைய அண்ணன் மூன்று பேரும் சேர்ந்து வெற்றிகரமாக இதை செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம்” என்கிற அர்ச்சனா மை ஹார்வெஸ்ட் மூலமாக தாங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளைப் பகிர்ந்து கொள்கிறார். 

மாடித்தோட்டம்

“மை ஹார்வெஸ்ட் மூலமாக முதலில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான ஆலோசனைகள், பஞ்சகாவ்யா தயாரிப்பதற்கான முறைகள், கிச்சனில் வேஸ்ட் ஆகும் பொருள்களை கம்போஸ்ட் செய்வதற்குமான பயிற்சிகளை வீட்டிற்கே போய் சொல்லிக்கொடுக்கிறோம். அதோடு, அன்றாடம் வாட்ஸ் அப் குரூப் மூலமாக உரமிடும் முறை, அறுவடைக்கான சந்தேகங்கள் போன்றவைகளை அப்டேட் செய்கிறோம். 

இரண்டாவதாக, இந்தியாவில் 2 ல் ஒரு பெண்களுக்கு ரத்தசோகை இருப்பதாகவும் அதற்கு கீரைகளை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை செய்கிறார்கள். அதற்காக கீரைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த கீரை விதைகளோடு கூடிய மை ஹார்வெஸ்ட் பாக்ஸை அறிமுகப்படுத்தினோம். திருமணம், பிறந்தநாள் போன்ற விசேஷங்களில் இந்த கிப்ட் பாக்ஸை கொடுத்து வந்திருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தோடு கூடிய உடலநலத்தை பரிசாகக் கொடுத்து அசத்தலாம்.  

இயற்கை விவசாயம்

மூன்றாவதாக, பள்ளிகளில் ஆரோக்கிய உணவு பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தவும் விவசாயத்தில் நம் எல்லோருக்கும் தொடர்பு உள்ளது என்பதை மாணவர்களுக்கு உணர்த்தவும் அவர்கள் மூலமே கார்டனை உருவாக்க ஆரம்பித்தோம். அரசுப் பள்ளிகளிலும் ரோட்டரி கிளப் போன்ற பல அமைப்புகளின் ஸ்பான்ஸர் மூலமாக இதைக் கொண்டு செல்கிறோம். மூன்று வருடங்களுக்கு முன்பாக விவசாயத்தைப் பற்றிய எந்தப் புரிதலுமே இல்லாத நான் இன்றைக்கு ஆயிரக்கணக்கானவர்களுக்கு விவசாயத்தைப் பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன். நாம் சாப்பிடுற உணவு நம்ம பக்கத்துல இருந்து கிடைக்கணும். அதிலும் நம்ம கண்ணுக்கு முன்னே விளையுற காய்கறிகளை சாப்பிடுறதுக்கு கொடுத்து வைச்சிருக்கணும் இல்லையா. இதைத்தான் நான் எல்லோர்கிட்டயும் சொல்லிட்டு வர்றேன். அதற்கான வரவேற்பும் எல்லா இடங்களிலுமே கிடைக்கிறது.

இனி, காலத்திற்கும் ஐ.டி வேலைதான் போல என்று அன்று நான் முடிவு செய்திருந்தால் சுதந்திரமாக என்னால் செயல்பட்டிருக்க முடியாது. ஆனால், இன்றோ வரப்பு மேட்டிலும் வயல் வெளியிலும் உற்சாகமாகப் பறந்து திரிகிறேன்” என்று சொல்லும்போது அவர் உள்ளத்தில் இருக்கும் மகிழ்ச்சி புன்னகையாக உதட்டில் வெளிப்படுவதைக் காண முடிகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close