வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (06/09/2017)

கடைசி தொடர்பு:19:30 (06/09/2017)

’நீட்’ தேர்வு விவகாரம்: 7 வயது மகனுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி ஆசிரியை!

ரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் அதே பள்ளியில் படிக்கும் தனது 7 வயது மகனுடன் நீட் தேர்வுக்கு எதிராகவும், ’தேவை இந்தியா முழுவதும் ஒரே கல்வி’ என்ற கோரிக்கையோடு உண்ணாவிரத்தில் அமர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நீட்

அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை ’நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டமாக வெடித்திருக்கின்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் குக்கிராமங்களில் கூட பெரியவர்கள் சிறியவர்கள் என ’நீட்’ தேர்வுக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. பல்வேறு கட்சிகள், சமூக மற்றும் தமிழ் அமைப்புகள், பள்ளி,  கல்லூரி மாணவ மாணவிகள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் அதே பள்ளியில் படிக்கும் தனது 7 வயது மகனுடன் ’தேவை இந்தியா முழுவதும் ஒரே கல்வி’ என்ற கோரிக்கையோடு உண்ணாவிரதத்தில் அமர்ந்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நீட்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருக்கின்றது வைரபுரம் கிராமம். அங்கு இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார் சபரிமாலா ஜெயகாந்தன். இன்று காலை வகுப்பைப் புறக்கணித்துவிட்டு, தன் இரண்டு வயது மகன் ஜெயசோஷனுடன் தான் பணிபுரியும் பள்ளியின் முன் அமர்ந்து ’இந்தியா முழுவதும் ஒரே கல்வியை அமல்படுத்த வேண்டும் என்றும் ’நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். ஆசிரியை சபரிமாலா தனியாகப் போராட்டத்தை தொடங்கிய செய்தி காட்டுத் தீயாகப் பரவியதால் ஊர் மக்களும் இளைஞர்களும் அவருக்கு ஆதரவாக களம் இறங்கத் தயாரானார்கள். ஆனால், அதற்கு முன்பே அந்தத் தகவல் காவல்துறையினருக்குச் சென்றதால் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவரை வலுக்கட்டாயமாக காவல்நிலையத்திற்கு அள்ளிச் சென்றனர். ஆனாலும் அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கான தனது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்திருக்கிறார்.