வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (07/09/2017)

கடைசி தொடர்பு:08:33 (07/09/2017)

தமிழக முதல்வர் வேட்பாளராகிறாரா நிர்மலா சீதாராமன்?

நிர்மலா சீதாராமன்

பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி என்பது, உள்துறை, நிதித்துறைக்கு அடுத்தபடியாக, நாட்டின் பாதுகாப்புக்கான  மிக முக்கியமான துறை. அண்மையில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபோது, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்று வர்ணிக்கப்பட்ட மறைந்த பிரதமர் இந்திரா காந்திக்குப் பின்னர், முழுநேர பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நிர்மலா சீதாராமன்.

யார் இந்த நிர்மலா சீதாராமன்?

நிர்மலா சீதாராமன், மதுரையில் 1959-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி பிறந்தவர். திருச்சியில் உள்ள சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்தார். பின்னர், 1980-ல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1986-ம் ஆண்டு பரகலா பிரபாகர் என்பவரை மணந்தார். ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் அமைச்சராக இருந்த பரகலா சேஷாவதரத்தின் மகன் பிரபாகர். இவரின் தாயாரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆக இருந்தவர்.

திருமணத்திற்குப் பிறகு லண்டனில் இருந்த நிர்மலா, அவரது கணவருடன் 1991-ல்  இந்தியா திரும்பினார். 1999-2004 வரை வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சியின்போது, 2003-2005-ம் ஆண்டு காலகட்டத்தில் நிர்மலா சீதாராமன், பெண்களுக்கான தேசிய ஆணையத்தில் பணியாற்றினார்.

அப்போது, மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. சுஷ்மா ஸ்வராஜின் பரிந்துரைக்குப் பிறகு 2006-ம் ஆண்டு பி.ஜே.பி-யில் இணைந்தார். பிறகு, 2010-ம் ஆண்டில் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். கட்சியின் செய்தித்தொடர்பாளராக பல்வேறு பகுதிகளிலும் பணி இருந்தாலும், மோடியின் குஜராத்தில்தான் மிக அதிகளவு கவனம் செலுத்தினார் நிர்மலா. 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் எல்.கே. அத்வானியா அல்லது நரேந்திர மோடியா என்று மூத்த தலைவர்களே குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில்கூட மிகத்தீவிரமாக மோடியை ஆதரித்தார் நிர்மலா.

மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அவரை ஆதரித்து நாடு முழுவதும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். தெலங்கானா தனி மாநில கோரிக்கை தொடர்பாக, நிர்மலாவுக்கும், சுஷ்மாவுக்கும் கருத்துமோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்த ட்வீட்கள் பின்னர் நீக்கப்பட்டன. 2014-ம் ஆண்டு தேர்தலில் மோடி தலைமையில் பி.ஜே.பி. அரசு அமைந்ததும், நிர்மலா சீதாராமன் தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணையமைச்சராக (தனிப்பொறுப்பு) நியமிக்கப்பட்டார். அப்போது அவர் எம்.பி-யாக இல்லை. ஆந்திராவில் பி.ஜே.பி. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நெடுறமல்லி ஜனார்த்தன் இறந்ததால், அந்தக் காலியிடத்தில் நிர்மலா நிறுத்தப்பட்டார். 2016-ம் ஆண்டு கர்நாடகத்திலிருந்து அவர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, அவரை பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமித்து மிகப்பெரிய அங்கீகாரம் வழங்கியிருக்கிறார் பிரதமர் மோடி.

நரேந்திர மோடி

முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா?

இந்நிலையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் மரணத்துக்கு நிர்மலா சீதாராமன், அவசரச் சட்டம் தொடர்பாக வழங்கிய வாக்குறுதியே காரணம் என்று எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டு மீண்டும் இணைந்து விட்டாலும், டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி அரசுக்கு எதிராக கொடி பிடித்துள்ளனர். இதனால், தமிழகத்தில் நிலையற்ற, ஸ்திரமற்ற அரசே நீடிக்கிறது. எந்தநேரத்திலும் ஆட்சி கவிழக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவே அரசியல் கட்சிகளும், மக்களும் பேசி வருகிறார்கள்.

இத்தகைய சூழலில், தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனை, பி.ஜே.பி.-யின் முதல்வர் வேட்பாளராக தமிழக தேர்தலில் முன்னிறுத்தலாம் என்ற கணக்கில், பி.ஜே.பி. தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் அவருக்கு முக்கியப் பொறுப்பை வழங்கியிருக்கலாம் என்று டெல்லியிலும், தமிழகத்திலும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 

ஏற்கெனவே கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர், பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மீண்டும் கோவா சட்டசபைத் தேர்தலுக்குப் பின் அம்மாநில முதல்வராக பதவியேற்றார். அதேபோல், இப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராகியுள்ள நிர்மலா சீதாராமனை, எதிர்காலத்தில் தமிழக முதல்வராக நியமிக்கலாம் என்று மோடியும், அமித் ஷாயும் கருதியிருக்கக்கூடும். ஆனால், அதற்கு முன்பாக, தமிழகத்தில் ஒருவேளை தேர்தல் வந்தால், ஆட்சியமைக்கக்கூடிய அளவிலான சட்டசபை உறுப்பினர்களை பி.ஜே.பி. பெற வேண்டும் என்பதையும் மறுக்க முடியாது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்