வெளியிடப்பட்ட நேரம்: 19:17 (06/09/2017)

கடைசி தொடர்பு:19:20 (06/09/2017)

’நீட் பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர்கள்’ - கமல்ஹாசன் வலியுறுத்தல்!

நீட் பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர்கள் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 


அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்குப் பின்னர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் பரவலாக எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நீட் தேர்விலிருந்து விலக்குபெற தமிழக அரசு இறுதிவரை முயற்சி செய்தும், உச்ச நீதிமன்ற உத்தரவால் விலக்குக் கிடைக்கவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். நீட் தேர்வு எதிரானதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், நீட் தேர்வு குறித்த தனது கருத்தை நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ’நீட் பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர். இது விடை காணும் வேளை. இது நம் சந்ததியின் எதிர்காலம் கூடியோசிப்போம். வெகுளாதீர். மதி நீதியையும் வெல்லும்’ என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.