வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (07/09/2017)

கடைசி தொடர்பு:08:45 (07/09/2017)

“கேமரான்னா பயம்... பேரப் புள்ளைகளைப் பார்த்தால் உற்சாகம்!” ஐந்து தலைமுறை உறவுகளோடு உறவாடும் பாட்டி!

பாட்டி

கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பாசமும் பரிவும் பின்னி பிணைந்திருக்கும். உறவுகளுக்குள் வாக்குவாதங்கள், எதிர் கருத்துகள், மனக்கசப்புகள் எழுந்தாலும் அது விரைவிலேயே முடித்து வைக்கப்படும். இப்படித்தான் நம் முன்னோர்கள் வீட்டை, மகிழ்ச்சி கோட்டையாக கட்டி ஆண்டார்கள். ஆனால், உலகமயமாக்கல் ஏற்படுத்திய கொடூர விளைவுகளில் கூட்டுக் குடும்பம் சிதைந்துவிட்டது. தாத்தா, பாட்டி, மாமா, அத்தை போன்ற உறவுகளின் பிணைப்புப் பற்றி நம் குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. விவசாயம் உள்ளிட்ட பிற கிராமியத் தொழில்களை வளர்த்தெடுக்கவோ, ஆதரவு தரவோ எவரும் முன்வராததால், வயலும் வாழ்வுமாக இருந்த இளைஞர்கள் பிழைப்பு தேடி நகரங்களில் தஞ்சம் அடைந்துவிட்டார்கள். 

இந்தப் புலம்பெயர்வு தலைமுறை தலைமுறையாக நாம் கடைப்பிடித்து வந்த பழக்கவழக்கங்களை துவம்சம் செய்துவிட்டது. நகரத்து நெருக்கடிகளைச் சமாளித்து ஜீவனம் வளர்ப்பதற்கு ஆணும் பெண்ணும் சேர்ந்து உழைக்க வேண்டியிருக்கிறது. இந்த நெருக்கடி மனித மனங்களைச் சுருக்குகிறது. ஒன்றாகப் பிணைந்திருந்த உறவுகள், தங்களை விடுவித்துக் கொண்டுவிட்டன. தாத்தா, பாட்டி போன்ற உறவுகளை உதாசீனப்படுத்தும் அளவுக்கு இதயம் சுருங்கிவிட்டது. 

இப்படிப்பட்ட காலகட்டத்தில் ஒரு பாட்டி, உறவுகளுக்கு முன்னுரிமை கொடுத்து தனது ஐந்து தலைமுறை உறவுகளுடன் முக்கியமான பண்டிகைகளை கொண்டாடுகிறார். அவர் வீடே திருவிழா மைதானம்போல நிரம்பி இருக்கிறது. அத்தனை பேரின் முகங்களிலும் சந்தோஷம் துள்ளுகிறது. நாம் தேடிச்சென்ற பாட்டி ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். பெரிய புன்னகையுடன் வரவேற்றுப் பேசுகிறார். 

பாட்டி

''என் பேரு மாராயி. சொந்த ஊரு நாமக்கல் மாவட்டம், நாட்டாம்பாளையம். அங்கேதான் பிறந்து, வளந்தது. சின்ன வயசுலயே கண்ணாலமும் ஆயிடுச்சு. எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்காங்க. மகன் பேரு சுப்பிரமணி. மகள் பேரு பாப்பாத்தி. எங்களுக்கு விவசாயம்தான் தொழிலுங்க. விவசாயம் செஞ்சிதான் புள்ளைங்களைப் படிக்கவெச்சோம். இப்போ மகன் விவசாயத்தைப் பார்த்துக்குறான். எனக்கு இப்போ வயசு 86 ஆகுதுங்க. பேரன், பேத்தினு வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா போயிட்டிருக்கு. பேரப்பிள்ளைகள், ஊர்க்காரங்களை எல்லாம் என் ஆயுசுக்கும் மேல ஆரோக்கியமா இருக்கணும்னு வாழ்த்துறேன்'' எனச் சிலிர்க்கிறார். 

"பாட்டி உங்களை ஒரு போட்டோ எடுக்கலாமா?" என்று கேட்டதுதான் தாமதம்... விறுவிறுவென ஓடிச்சென்று ஒளிந்துகொண்டார். அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அவரின் மகளான பாப்பாத்தி, பாட்டியை வெளியே வருமாறு சொல்ல, "அதை (கேமராவை) எடுத்து உள்ள வெச்சாதான் வருவேன்" என்றவர், கேமராவை உள்ளே வைத்தபிறகே வந்தார். 

அங்கே விளையாடிக்கொண்டிருந்த ரித்திகா என்ற குழந்தை, மாராயி பாட்டியின் எள்ளுப் பேரக் குழந்தை. அது, பாட்டியின் செய்கையைப் பார்த்து அவ்வளவு அழகாகச் சிரித்தது. 

மாறாயி பாட்டியின் மருமகன் சண்முகம், "என் மாமியாரே எங்களுக்குக் குழந்தை மாதிரிதான். போட்டோ பிடிச்சுக்கும் பழக்கம் அவங்களுக்கு இல்லை. சில வருஷங்களுக்கு முன்னாடி மாமனார் பழனியப்பன் தவறிட்டாங்க. கொஞ்ச வருஷம் முனாடி வரைக்கும் மாமியாரே வயலில் இறங்கி விவசாயம் பார்த்துட்டிருந்தாங்க. இப்பவும் தன்னுடைய எல்லா வேலைகளையும் அவங்களே செஞ்சுப்பாங்க. தன்னால் மத்தவங்களுக்கு எந்த இடைஞ்சலும் இருக்க கூடாதுன்னு நினைப்பாங்க. இதுவரை எந்த ஆஸ்பத்திரிக்கும் போனதில்லே. அதுக்குக் காரணம், அவங்களோட உணவு மற்று வாழ்க்கைப் பழக்கங்கள்தான். நாங்க எல்லாம் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும், இப்படி அத்தை தலைமையில் அடிக்கடி ஒண்ணு சேர்ந்துடுவோம். இன்று, என் அப்பாவுக்கு நினைவு நாள். அதுக்காக ஒண்ணு கூடியிருக்கோம்" என்றார். 

 வற்புறுத்தி குரூப் போட்டோவுக்குப் பாட்டியைப் பிடித்து அமரவைத்தார்கள். அப்போது எழுந்த கலகலப்பில் குடும்பத்தின் அன்பு, அருவிச் சாரலாக மனம் முழுக்க நனைத்தது.


டிரெண்டிங் @ விகடன்