16 ஆண்டுகளுக்குப் பிறகு நிறையும் கொடைக்கானல் ஏரி! | Kodaikanal lake which stands after 16 years

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (06/09/2017)

கடைசி தொடர்பு:08:49 (07/09/2017)

16 ஆண்டுகளுக்குப் பிறகு நிறையும் கொடைக்கானல் ஏரி!

கொடைக்கானல் ஏரி, 1863-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால், உருவாக்கப்பட்டது. நட்சத்திரவடிவில் இந்த ஏரியை ஆங்கிலேயர்கள் அமைத்ததால், இதற்கு நட்சத்திர ஏரி என்ற பெயரும் உண்டு. காஷ்மீர் தால் ஏரியைப் போலவே, கொடைக்கானல் ஏரி சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான இடம். 59 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த ஏரியின், ஆழம் 36 அடி. கடந்த சில மாதங்கள் முன்பு வரை மழையில்லாமல் நீர்மட்டம் குறைந்து பொலிவிழந்து காணப்பட்ட ஏரி தற்போது தண்ணீர் தளும்பத் தளும்ப காட்சியளிக்கிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்துவருகிறது. இதனால், ஆங்காங்கே பல சிற்றோடைகள் தோன்றி தண்ணீர் வழிந்தோடுகிறது. அதிகத் தண்ணீர் வரத்து காரணமாக, கொடைக்கானல் நகரின் மத்தியில் உள்ள ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

கொடைக்கானல் ஏரி

இந்த ஏரி, கடந்த 2000-ம் ஆண்டு நிறைந்து வழிந்தது. அப்போது, நீர்வெளியேற்றும் பகுதிகள் பலமில்லாமல் இருந்ததால் 34 அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு மதகு பகுதி சரிசெய்யப்பட்டுள்ளதால், தற்போது 36 அடி வரை நீரைத் தேக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு, ஏரியின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டவேயில்லை. இந்நிலையில், தற்போது பெய்து வரும் கனமழையால், இன்று 35 அடி மட்டத்தைத் தாண்டி விட்டது. பல பகுதிகளில் நடைபாதைகளை மறைத்து நிற்கிறது ஏரி தண்ணீர். 16 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று இரவுக்குள் ஏரி முழுமையாக நிரம்பி, வழியத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏரி தண்ணீர் நிறைந்து வெளியேறினால், அது கங்கா காம்பவுண்ட், ஃபர்ன்ஹில் ரோடு, டோபி கார்னர் வழியாக வெள்ளி அருவியில் விழுந்து, பழநி நகருக்குக் குடிநீருக்காகச் செல்லும். 

இது தொடர்பாகப் பேசிய கொடைக்கானலைச் சேர்ந்த வீரா, ‘‘ இந்த ஏரி நிறைஞ்சு 16 வருஷமாச்சு. இந்த வருஷம் சீசன்ல தண்ணி இல்லாம படாதபாடு பட்டுட்டோம். இப்ப தொடர்ந்து பெய்ற மழையால கொடைக்கானல் ரொம்ப ரம்மியமா இருக்கு. ஏரி நிறையிறதப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த வருஷம் செகண்ட் சீசன் ரொம்ப நல்லாயிருக்கும். இன்னிக்கும் மழை நீடிச்சா, இரவுக்குள்ள ஏரி நிறைஞ்சு வழிஞ்சிடும்‘‘ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க